முப்பத்தாறு மணிநேர ரயில் பயணம். குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டியில் இருவர் மட்டுமே பயணிக்கும் கூபே வகை கம்பார்ட்மெண்ட்டில் நானும் மற்றொரு பெண்ணும் இருந்தோம். அவள் யார்? தெரியாது. அருகருகே அமர்ந்திருக்கிறோம். அவளுக்கும் எனக்குமான இடைவெளி வெகுசில அடிகள் மட்டுமே உள்ளன. ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடும். அவளது உடலிலிருந்து புதுவித வாசனையொன்று வீசிக்கொண்டிருந்தது. காட்டு புஷ்பங்களின் வாசனையோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அதன் வாசம் அப்படியில்லை. மழைக்குப் பின்னான மண்வாசனையுடன் உதிர்ந்த மாம்பூக்களின் வாசமும் கலந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வாசனை. ரயில் மெதுவாய் நிலையத்தைவிட்டு நகரத் தொடங்கியது. அவள் தன் வாசனையின் மூலம் என்னுடன் உரையாடத் தொடங்கியிருந்தாள். நானொரு வாசனை விரும்பி போல கேட்டுக் கொண்டிருந்தேன். அல்லது நுகர்ந்து கொண்டிருந்தேன். ரயிலின் அசைவுகளில் அவளது மெல்லுடல் அசைவதைக் கண்டபோது பியானோவொன்றில் நடனமிடும் மென்விரல்கள் என் ஞாபகத்தில் மலர்ந்தன. அப்படியொரு மென்விரல்காரியை முன்பொருமுறை சந்தித்திருக்கிறேன். அவளது விரல்களுக்காக மட்டுமே அவளை அதிகமாய் பிடித்திருந்தது. அதை அவளிடம் சொன்னபோது அவளது விரல்கள் வெட்கப்பட்டதை நான் மட்டுமே அறிவேன். அந்த மென்விரல்காரியின் விரல்களைப் போலில்லாமல் சற்று சதைப்பிடிப்புடன் இருந்தது இந்த வாசனைக்காரியின் விரல்கள்.
ரயில் இன்னும் முப்பத்தைந்து மணி நேரத்தில் தில்லியை அடைந்துவிடும். அதன் பிறகு அவள் யாரோ நான் யாரோ. அதற்கிடையேயான இரவும் பகலும் எனக்கும் அவளுக்குமானது. அவை எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் உள்நுழைந்துவிட முடியாத கணங்களுக்கானவை. ரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவளது உடலிலிருந்து வெளிப்படுகிற வாசனையின் கனம் கூடிக்கொண்டே இருந்தது. உடலின் எப்பாகத்திலிருந்து இந்த வாசனை வெளிப்படும்? எது உடலின் கதவு? கேள்விகள் என்னுள் எழுந்தவண்ணம் இருந்தன. அவளோ ஜன்னல் வழியே விரைந்தோடும் காட்சிக்குள் மூழ்கியிருந்தாள். உடலின் கதவா அல்லது ஜன்னலா எதுவோ ஒன்றின் வழியே அவளுடைய மனதிற்குள் நுழைந்துகொண்டு சற்றுநேரம் வசித்துத் திரும்ப யத்தனித்தபடி நான் தளும்பிக் கொண்டிருந்தேன். தொண்ணூறு நிமிடங்கள் கழிந்த பிறகு முதன் முதலாய் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
நானொரு பழகிய நாய்க்குட்டியைப் போல அவள் கண்களுக்குத் தோன்றியிருக்கிறேன். குறுநகை புரிந்தாள். குளிர்கால நதியில் உடல் பட்டது போல சில்லிட்டது. அவளது கண்களின் அருகே இரண்டு சிகப்புநிற பறவைகள் இருந்தன. கழுத்திலும் மார்பிலும் பார்த்துச் சலித்த டாட்டுக்களை கண்களின் அருகில் இப்பொழுதுதான் பார்க்கிறேன். மழையின் கனம் தாளாத சிறுமலர் தலைகவிழ்வது போல தரையை நோக்குகிறேன். அவளது சித்திரம் தரையிலொரு பெரும் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. ஒரு கணம் மட்டுமே கண்களுக்குள் விழுந்தவளை உடனே உள்வாங்கி தரையில் பெரியதொரு சித்திரமாக்கியிருந்தது எது என்று யோசிக்கிறேன்.
அவள் இப்போது மீண்டும் கடந்து செல்லும் மரங்களையும் ஜன்னல் வழியே கசிகின்ற வெளிச்சக்கோடுகளையும் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள். சிலையொன்று உயிர் பெற்று புடவையில் அமர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி. அவளது இடக்கையின் சிறுரோமங்கள் அடர்வனத்தின் விருட்சங்கள் போல ஆனால் சிறியதாக அசைந்தபடி இருக்கின்றன. அந்த ரோமங்கள்தான் அவ்வுடலின் கதவுகளோ? அந்த ரோமக்காட்டினுள் நுழைந்து தொலைந்து மீண்டுகொண்டிருக்கும் வேளையில் ரயிலின் வேகம் குறையத் தொடங்கியது. வேகமெடுக்கும் ரயிலைப் போலவே வேகம் குறையும் ரயிலின் அசைவும் தாங்க முடியாத மகிழ்வைத் தருகிறது. அவளுக்கும் அது பிடித்திருக்க வேண்டும். சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு நாடியில் கையை வைத்தபடி வெளியே பார்க்கிறாள். என்னுள் அதிவேகமெடுக்கிறது இல்லாத ரயிலொன்று.
விளக்கு அணைத்தவுடன் அவள் லோயர் பெர்த்திலும் நான் அப்பர் பெர்த்திலும் படுத்திருந்தோம். இந்த நான்கு மணிநேர பயணத்தில் இதுவரை அவள் ஒருமுறை கூட தன் மொபைலை எடுத்துப் பார்க்காதது எனக்கு வியப்பளித்தது. நானோ மொபைலை பார்த்துக் கொண்டிருப்பதான பாவனையில்தான் அதிக நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கம்பார்ட்மெண்டில் ஜன்னல் வழியே வந்துவிழும் வெளிச்சத்தைத் தவிர பரவலாக எந்த வெளிச்சமுமில்லை. கதவிடுக்கின் வழியே வேறெங்கிருந்தோ கொஞ்சமாய் கசிந்துகொண்டிருந்த சிறு மென்வெளிச்சம் அந்த இரவின் இருளை ஓர் கூரிய கத்தியால் பாலாடைக் கட்டியை கீறுவது போல கீறிக்கொண்டிருந்தது. இந்த மெல்லிய இருளுக்குள் அவளின் வாசனை மட்டுமே அடர்ந்திருந்தது. அது நாசிக்குள் இறங்கி உடலெங்கும் ஒருவித புத்துணர்வை நொடிக்கு நொடி தந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது. எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். அவளுக்கென நானொரு பெயர் சூட்ட வேண்டும். அப்பெயர் ஒரே ஒரு விதிக்குள் அடங்கவேண்டும். மிக மிக மிருதுவாக இருத்தல் வேண்டும் என்பதே அவ்விதி.
இப்போது அவள் உறங்கியிருக்கக்கூடும். எனக்கு உறக்கம் வரும் வரை அவளுக்கான பெயர் சூட்டலில் நேரம் கழிந்துவிடும். ஒவ்வொரு மிருதுவான பெயர்களாக என் முன்னால் ஜாலமிட்டுக் கொண்டிருக்கின்றன. என்னைத் தேர்ந்தெடு என்று அவை என்னிடம் சொல்லியபடியே இருக்கின்றன. சிறிய ஊசியால் ஒவ்வொரு பலூன்களாக உடைப்பது போல ஒவ்வொரு பெயரையும் உடைத்து தூர வீசுகிறேன். கடைசியாக ஸித்தாரா எனும் பெயரை தேர்வு செய்து உள்ளங்கைகளில் ஏந்தி மெல்ல கீழ் பெர்த் நோக்கி நழுவ விடுகிறேன். கைகளில் ஏந்திய ஆற்று நீர் மீண்டும் ஆற்றிலேயே நழுவி விழுவதைப் போல அந்தப் பெயர் என் கைகளிலிருந்து நீங்கி அவளை நோக்கி மிதந்து மிதந்து செல்கிறது.
இப்போது ஸித்தாராவாகிவிட்ட அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ரயில் இருளுக்குள் விரைந்து கொண்டிருக்கிறது.
கம்பார்ட்மெண்ட்டில் வெயில் நிரம்பியிருந்தபோது கண்விழிக்கிறேன். சோம்பல் முறித்து கீழே இறங்கி வருகிறேன். அவளைக் காணவில்லை. அவள் படுத்திருந்த வெண்நிறப் போர்வையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்தது ஸித்தாரா எனும் பெயர். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது ஒரு புன்முறுவலுடன் ஓடிவந்து என் தோள்மீது ஏறி நின்றுகொண்டது.
கழிப்பறையிலிருந்து திரும்பியவள் முகத்தில் ஒன்றிரண்டு நீர்த்துளிகள் ஐய்யோ மரணிக்கப் போகிறோமே என்கிற கவலையில் நடுங்கியிருந்தன. துவாலையால் அவற்றை துடைத்துக் கொன்றுவிட்டு ஜன்னலோரம் அமர்ந்தாள்.
நானும் என் தோள்மீது அமர்ந்திருந்த ஸித்தாரா எனும் பெயரும் நேற்று இரவு ஸித்தாராவாக ஜனித்தவளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் ஆர்டர் செய்திருந்த தேநீரை குடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு மிடறாக மரணத்தை தழுவிக் கொண்டிருந்தது தேநீர். குடித்து முடித்த பின் என் பக்கமாக திரும்பியவள் குட்மார்னிங் என்றபடி இதழோரம் சிறியதாய் புன்னகையொன்றை மலர்த்தினாள்.
ஸித்தாரா வெட்கியபடி என் வலது தோளிலிருந்து கழுத்துவழியே ஓடி இடது தோளுக்குச் சென்று அமர்ந்துகொண்டது. நான் பதிலுக்கு குட்மார்னிங் என்றபோது ரயில் தன் வேகம் குறைந்து நிலையம் ஒன்றில் நின்றது.
நேற்றிரவு வீசிய வாசனையை தேடிக் கொண்டிருந்தது என் நாசி. வெயில் கவர்ந்து சென்றிருக்கலாம் என்று காதோரம் கிசுகிசுத்தது ஸித்தாரா. அவள் கண்களை மூடியபடி தன் மொபைலில் இசையை ரசிக்கத் தொடங்கியிருந்தாள். நான் அந்தக் காட்சியை வெட்டி எடுத்து என் கண்களுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டேன். கம்பார்ட்மெண்ட் கதவைத் திறந்து வெளியே வந்து கழிப்பறை அருகேயிருக்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். கொஞ்சமாய் நீர் தெளித்து முகம் கழுவிய பின் மனம் உற்சாகத்துடன் இருப்பது போலிருந்தது. என்ன பேசுவது எப்படி ஓர் உரையாடலை தொடங்குவது என்று கண்ணாடியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ரயில் நிறுத்தத்திலிருந்து மெதுவாக நகரத் தொடங்கியது.
ஸித்தாரா கால்மேல் கால்போட்டபடி ஏதோவொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். காதுகளில் ஹெட்ஃபோன் இருந்தது. இசையை ரசித்தபடியே வாசிக்கிறாள் என் ஸித்தாரா. அதெப்படி அதற்குள் ஸித்தாரா என் ஸித்தாரா என்றாக முடியும்? அவள் மனதில் என்ன இருக்கிறதென்பதே எனக்குத் தெரியாது என்பதால் அந்த என் என்பது தவறி விழுந்த சொல் என்று மனதிடம் சொல்லி வைத்தேன். சற்று நேரத்திற்கு பின் அவள் ஜன்னல் பக்கமாக திரும்பியபோதுதான் அவளது முதுகிலிருந்த பிறை வடிவ தழும்பைப் பார்த்தேன். நேற்று எப்படி இதைத் தவறவிட்டேன்? அந்தத் தழும்பை எங்கிருந்து பெற்றிருப்பாள். அந்தத் தழும்புக்கு பெயர் கிடையாதா என்றது என் தோளில் அமர்ந்திருந்த ஸித்தாரா. வைத்துவிடலாம்தான். ஆனால் அவள் அதற்கொரு பெயர் வைப்பதை விரும்புவாளா? விரும்பியதைதானே பெயரிட்டு அழைக்கிறோம். ஒருவேளை அந்தத் தழும்பு அவள் விரும்பிடாத ஒன்றாக இருந்தால் என்ன செய்வது? சரி, அவளிடமே கேட்டுவிடலாம் என்றெண்ணிய நேரத்தில் அத்தழும்பு பிறை வடிவிலிருந்து கண்ணீர்த்துளியின் வடிவமாக மாறியது. இதென்ன தழும்புக்கு உருமாறத் தெரியுமா?
ஒரு பெயருக்கு உன்னுடன் உரையாடத் தெரிகையில் தழும்புக்கு உருமாறத் தெரியாமல் இருக்குமா எனச் சொல்லிவிட்டு சிரித்தது தோளில் அமர்ந்திருக்கும் ஸித்தாரா. அவள் விரும்பாத தழும்பாகத்தான் அது இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே பார்வையை திருப்பிக்கொண்டேன்.
ஏன் என்னுடலில் அப்படி ஒரு தழும்பு இல்லாமல் போனது? என் முதுகில் நான் அறியாத தழும்பேதும் இருக்கிறதா? எனக்கு இப்போதே ஒரு தழும்பு வேண்டும். அதுவும் பிறை வடிவில். அவள் தன் கண்கொண்டு பார்க்கும்போது அது உருமாற வேண்டும். கண்ணீர்த்துளியாகவோ அல்லது அவள் விரும்பும் ஏதோவொன்றாகவோ. கொஞ்சம் பொறு என்றபடி தோளிலிருந்து என் முதுகில் குதித்து தழும்பைத் தேடத் தொடங்கியது ஸித்தாரா. பின் என் காதோரம் வந்து சொன்னது.
‘உன் முதுகில் தழும்பு எதுவும் இல்லை ஆனால் மீன் வடிவத்தில் மச்சம் இருக்கிறது. அவள் அதை விரும்புவாள்’
நான் ஸித்தாராவைப் பார்த்தேன். அவள் மஞ்சள் வெயிலைப் போல ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள். அவளது இடக்கை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது என் பார்வை. யாரென்றே தெரியாத பெண்ணிடம் எதற்கென்றே தெரியாத உணர்வுகளால் நிரம்பியிருந்தேன். கண்கள் மூடி அமர்ந்திருந்தவளின் கண்களோரம் துளிர்த்து கன்னத்தில் பாதையொன்றை உருவாக்கி வழிந்தது நீர். எனக்குள் ஏதோ உடைந்தது.
ஏன் அழுகிறாள்? அவளது கரம் பற்றிக்கொண்டு அழாதே ஸித்தாரா என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியபோது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ஜன்னலில் தலைசாய்த்துக் கொண்டாள். அக்கணம் நானொரு ஜன்னலாக இல்லாமல் போனேன் என்று தோன்றியதும் கனத்த மனதுடன் வேறு பக்கம் தலையை திருப்பிக் கொண்டேன்.
தன் கைப்பையிலிருந்து சிறியதொரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸித்தாரா. அப்போது அவளது இதழ்கள் மெதுவாய் எதையோ முணுமுணுத்தன. உற்று கவனித்தேன். “நம் வாழ்வில் நம் முகத்தை என்றுமே நம்மால் பார்க்க இயலாது. நாம் காண்பது நம் முகத்தின் பிம்பம். அதுவே நம் முகம் என்று வாழ்நாள் முழுவதுமாய் நம்பிக் கொண்டிருக்கிறோம்”
அவள் கேட்டதில் உண்மையிருந்தாலும் மற்றவர்களுக்கு நிகழ்ந்தது தனக்கும் நிகழ்ந்துவிடும் என்று நம்புவது முட்டாள்தனமாக எனக்குத் தோன்றியது. மதுக்குட்டியை தேற்றும் விதமாக நானும் ஜெனியும் நம்பிக்கை வார்த்தைகளை அவள்மீது தெளித்தோம். சற்று நேரத்தில் அவளுக்குள்ளும் நம்பிக்கை பிறந்தது.
“நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எதுவாக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் ஆகவேண்டுமே தவிர பிறர் நிலையைக் கண்டு நமக்கும் அது நேர்ந்துவிடுமோ என அச்சம் கொள்வதை தவிர்க்க வேண்டும்”
மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் அவள் பேசியது மனதிற்கு நிறைவாக இருந்தது.
“ஜெனி, இன்று காலை நம்மீது விழுந்த வெளிச்சம் எத்தனை நொடிகள் நீடித்தது என்பதை கவனித்தாயா?”
எனக்குள் திட்டமொன்று உருப்பெற ஆரம்பித்தது.
“கவனித்தேன் அறல். இன்று பத்து நொடிகள் இருக்கும், நேற்றும் அதற்கு முந்தைய நாளும் கூட பத்து அல்லது பன்னிரண்டு நொடிகள்தான் இருந்ததாக ஞாபகம்”
“பத்து நொடிகளில் நாம் தப்பிப்பது எளிதல்ல. நம்மால் அசையவும் இயலவில்லை. இந்த உடலின் இறுக்கம் தளர்ந்தால்தான் நாம் தப்பிக்க முடியும். உடலைக் கட்டிப் போட்டது போல் இருக்கிறது. நமக்குத் தேவை ஐயாயிரத்து ஐநூறு நொடிகள். அதாவது தொண்ணூறு நிமிடங்கள்”
ரயில் தில்லியை சேர்வதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தபோது ஸித்தாரா என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“நீங்கள் ஏன் என்னிடம் பேசவே இல்லை?”
என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ரயிலைப் போலவே தடதடத்தது மனம். நான் உன்னுடன் மட்டும்தான் இந்த முப்பத்தாறு மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தேன் ஸித்தாரா என்று சொல்வதா அல்லது பேச முடியாத அற்புத கணங்களை நீ தொடர்ந்து எனக்கு பரிசளித்துக் கொண்டிருந்தாய் எனச் சொல்வதா எனத் தடுமாறி மெளனித்திருந்தேன், அவள் தொடர்ந்தாள்,
“உங்கள் முதுகிலிருக்கும் மீனுக்கு நானொரு பெயர் வைத்திருக்கிறேன், நேற்று நீங்கள் சுடிதாரிலிருந்து சேலைக்கு மாறியிருந்தபோதுதான் அந்த மீன் மச்சத்தை கவனித்தேன். அதற்கு நான் வைத்த பெயரைச் சொல்லவா?”
ம்.. என்று தலையாட்டிவிட்டு விழிகள் மலர அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடல் சன்னமாய் நடுங்கியதில் என் கண்ணாடி வளையல்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு மெல்லிய சப்தம் எழுப்பின. தில்லி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து நின்றது ரயில்.
“அந்த அழகிய மீன் மச்சத்திற்கு நான் வைத்த பெயர் ஸித்தாரா”
சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள். எனக்கு என் ஸித்தாராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
No Comment! Be the first one.