மதிப்பாய்வுரை
விஜய் மகேந்திரன்
வேட்டை நிலம் என்பது சங்க காலங்களில் இருந்து பாடப்பட்டு வரும் ஒரு பாடு பொருள் தான் ஆனால் அதை தழுவி இந்தியாவில் பல நாவல்கள் வெளியாகி உள்ளது
அதிலும் ஜிம் கார்பெட் எழுதிய குமாயும் புலிகள் கென்னத் ஆண்டர்சன் எழுதிய ஏலகிரியில் சிறுத்தை வேட்டை இந்த இரண்டு நூல்களும் தமிழில் மொழிபெயர்ப்பான பிறகு வேட்டையை மையமாக வைத்து பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன ஆனால் தற்கால எழுத்தாளர்கள் அதிலும் குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் மத்தியில் எழுதப்பட்டுள்ள புனைவுகளில் ராஜேஷ் வைர பாண்டியனின் வேட்டை நிலம் நாவல் ஒரு தனித்த இடத்தை பெற்றுள்ளது அவரின் கதாபாத்திரங்கள் மிக இயல்பாக கிராமங்களில் உலவ கூடியது அதை தனது தூத்துக்குடி வட்டார வழக்கில் அவர் விவரிக்கும் அழகிலேயே நாவலுக்கு ஒரு தனி அழகு கூடி வந்துள்ளது இதில் வரும் வேட்டைக்கார மீசை ஆகட்டும் கொத்தலம் ஆகட்டும் பெண் கதாபாத்திரங்கள் அத்தினி செம்பருத்தி ஆகியவை மிக தனித்தன்மையுடன் இயங்குகின்றன ஆண்களுக்கு போட்டியாக அவர்கள் பேசுகிறார்கள் தைரியமாக வம்பு இழுக்கிறார்கள் நாவலின் மைய போக்கு மனிதனின் பழிவாங்குதல் நடவடிக்கை தான் என்றாலும் அந்த பலி வாங்குதலின் ஊடாக புலி வேட்டையை மையப்படுத்தி ராஜேஷ் வைரபாண்டியன். எழுதி இருக்கும் விதம் இந்த வருடம் வெளிவந்துள்ள நாவல்களில் மிக முக்கியமானதாக வேட்டை நிலத்தை ஆக்குகிறது. என்ன தான் மனிதன் காட்டை கட்டுக்குள் கொண்டுவர நினைத்தாலும் இறுதியில் காடுதான் ஜெயிக்கிறது. இதைத்தான் இந்த நாவலும் பல பக்கங்களில் எழுதிச் சென்றிருக்கிறது. ராஜேஷ் வைரபாண்டியனுக்கு எனது வாழ்த்துக்கள். விரிவான மதிப்புரையை விரைவில் எழுதுவேன் -
விஜய் மகேந்திரன்
Read more
பரிசல் கிருஷ்ணா
வேட்டை நிலம் | ராஜேஷ் வைரபாண்டியன் | எதிர் வெளியீடு
----- இரு வேட்டைக்காரர்களுக்கிடையே நிகழும் பழிவாங்கல் கதை.
தேரிக்காட்டு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் பழிவாங்கும் படலத்துக்கு இடையே மனித மனங்களின் இருண்மை, காமம், வெறுப்பு என்று பலவற்றையும் தொட்டுப்போகிறார் ராஜேஷ்.
குறைகள்: நிறைய கதாபாத்திரங்கள், வந்து வந்து போகிறார்கள். சில முக்கியக் கட்டங்களில் முத்தாய்ப்பாக ஒரு கதாபாத்திரத்தின்மேல் நாவலாசிரியர் கவனம் குவித்து நிறுத்தும்போது, ‘யாரிவர்’ என்று பின்னோக்கிப் போய்ப் படித்து ‘ஓ இவனா / இவளா’ என்று தெரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.
கோட்டாளம், மீசையைப் பழிவாங்குவதற்கான அந்தக் காரணம், நிச்சயம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். அதேபோலவே மீசையைக் கொல்பவர்கள் சொல்லும் காரணமும் சாதாரணமாக இருந்தது ஏமாற்றம்.
இனி..
வேட்டையர்களின் உலகம் மிக நன்றாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது நாவலில். பல இடங்களில் நுணுக்கமாகவும்! மீசையின் ஒவ்வொரு அசைவிலும் அவரொரு வேட்டைக்காரர் என்பதை நாவலாசிரியர் உறுதிப்படுத்துகிறார். நாவலின் கதாபாத்திரப் பெயர்கள் ரசிக்கும்படியும், பொருளோடும் அமைந்திருந்தது சிறப்பு. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் பத்திகள் ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டிருந்தன.
நாவல் முழுவதுமே, உயிரினங்கள் ஆங்காங்கே வந்து கொண்டே இருப்பது நாமும் அந்தச் சூழலில் இருக்கும் உணர்வைத்தருகிறது. உதாரணங்களாகவும் பல இடங்களில் அவைகள் உலவுகின்றன. சர்ப்பத்தின் உடலைப் பிசைந்துவிடுவது போல / இலைமீது ஊருகிற புழுவின் சத்தம் கூட பெரிதாகக் கேட்டது / அவளிடம் வெளிமானின் வாடை எழும்பிற்று / மரத்தில் ஏறும் சர்ப்பத்தைப் போல / கருங்கொரங்கு கணக்கா / நாய்க்குட்டி போல குறுகி / மலைப்பாம்பைப் போல … / அத்தினியின் அழகு சிறுத்தை விரட்டிச் செல்லும் மானொன்று திரும்பி.. - இப்படி நிறைய உயிரினங்கள் நாவலில் தென்படுவது கதை நடக்கும் நிலத்தை உணர்துவதாய் உள்ளது.
விவரணைகள் அபாரம். அவற்றில் நாவலாசிரியரின் தேர்ந்த எழுத்து வெளிப்படுகிறது. ஒரு இடத்தில் ‘அவளது பக்கவாட்டிலிருந்த முள்வேலியில் பச்சோந்தியொன்று மெல்ல நிறம் மாறிக்கொண்டிருந்தது’ என்று போகிற போக்கில் வருகிறது. பின் அத்தியாயங்களைப் படிக்கும்போது முன்னர் வந்த இந்த வரிக்கு ‘வெரிகுட்’ சொல்லத் தோன்றியது!
அத்தினி, நாகம்மை என்று பெண் கதாபாத்திரங்கள் வலுவாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருந்தது. வட்டார வழக்கு, நாவலை சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டுபோகிறது.
இரண்டு ஐயங்கள்:
1. மீசையை, எரியும் அந்தக் குடிசையில் இருந்து அக்கம்பக்கத்தினர் காப்பாற்றுகிறார்கள். அதற்கு முன் மீசை மார்பில் கத்தியால் குத்துப்பட்டு ரத்தம் கொப்பளித்ததாக வருகிறது. ஊர்க்காரர்கள் அதை கவனிக்கவோ, கேட்கவே இல்லையே?
2. ஒரு இடத்தில், சாராயக்கடை ஒன்றில் ஒருத்தர் ஐந்து ரூபாய்த் தாளைத் தடவிக்கொண்டே இருக்கிறார். அங்கே நாவலாசிரியர் “அந்த கசங்கிய ஐந்து ரூபாயிலிருந்த டிராக்டர் இன்னும் சிறிது நேரத்தில் ஸ்டார்ட் ஆகிவிடும் அளவுக்கு அவரது தடவல் இருந்தது” என்று எழுதியிருந்தார். அந்த வரி நன்றாகவே இருந்தது. ஆனால், அந்த சம்பவம் நடக்கும் சமயம் மதுவிலக்கு அமலில் இருந்த சமயம் என்று நாவலில் வருகிறது. டிராக்டர் படம் அச்சிடப்பட்ட ஐந்து ரூபாய்த்தாள், 1996ல்தான் அச்சிடப்பட்டதாக தெரியவருகிறது. அந்த சமயத்திலோ, அதற்குப் பிறகோ மதுவிலக்கு தமிழ்நாட்டில் இல்லையே?
நாவலாசிரியரின் முந்தைய நாவலான ‘தேரி’ படிக்க வேண்டும் என்று ஆவலை எழுப்பியிருக்கிறது இந்நாவல்.
#tamilnovel #Vettainilam #bookreview #tamilwriter
அன்பும் நன்றியும் Parisal Krishna
Read more
பெரியசாமி நடராஜன்
கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல் வழங்கு
மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே!
மாற்பித்தியார் என்ற புலவரின் புறநானூற்றுப் பாடல் (252) ஒன்றில் ‘சொல்வலை வேட்டுவன் என்று குறித்திருக்கிறார்.
வேடன் வலைவிரித்து விலங்கினைப் பிடிப்பதுபோலச் சொல்லால் வலைவீசிப் பெண்களை தன்வசப் படுத்துபவன் என்பதால் ‘மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன்’ எனப் புலவர் சுட்டியிருக்கிறார்.
எல்லா மனிதர்களுக்குள்ளும் வேட்டுவன், வேட்டுவச்சி இருக்கவே செய்கிறார்கள். இங்கு வேட்டை என்பதை நிறைவு எனவும் கொள்ளலாம்.
நிறைவு என்பது அவரவர் மனப்போக்கு சார்ந்தது. அந்தந்த சூழல், காலம், அவரவர் அனுபவம் சார்ந்தே நிறைவுகொள்ளல் தீர்மானிக்கப்படுகிறது.
தான் விரும்பும் துப்பாக்கியை வாங்குதே மிகப்பெரிய வேட்டையை நிகழ்த்திய நிறைவைத் தரும். நாவலில் எல்லாவிதமான நிறைவையும் வேட்டை மூலம் நிகழ்த்தி காட்டுகிறார் ராஜேஸ் வைரபாண்டியன். அதற்கு தோதாக வட்டார மொழி அமைந்துள்ளது.
வேட்டைக்கு உட்படுத்தப்படுவது காட்டு உயிரிகள் மட்டுமல்ல. நாட்டு உயிரிகளுமே. நாவலில் காதல், காமம், போதை, பழிவாங்கல் என நிறைய்ய தளங்களில் வேட்டை செயல்படுகிறது. செயல் வேட்டையைவிடவும் சொல்லால் நிகழ்த்தப்படும் வேட்டை பலமிக்கதாக நாவலில் காட்டப்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொருவிதமான நிறைவை கைக்கொள்ளுதல் நாவலில் மிகச் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
தன் காதலியின் கண் பார்த்திருக்க கட்டியவளின் துரோகங்களை அனுமதிக்கும் பைத்தியக்காரத்தனத்திலும் நிறைவையே அடைகிறான். ஆகச் சிறந்த பலசாலியான மீசை சொல்லில் சுருங்குப்போகிறான். கொலைபுரிய கிடைத்த பணத்தை கொலை செய்யப்படவேண்டியவனோடு பகிர்ந்து காணாமல்போவதில் இருக்கும் வியூகத்தின் நிறைவை மெச்சத்தான் வேண்டியிருக்கு. மதுவில் விஷம் கலந்து துரோகத்தை சாகடித்தவனின் சாதூர்யம் தந்த நிறைவு நாவலின் ரகசியமாக இருந்தது.
மகிழ்ச்சி.
இன்னும் நிறைய்ய எழுதுங்க...
Periyasamy Periyasamynatarajan அன்பும் நன்றியும்
Read more
சுமி ஹரி
வேட்டை நிலம்
ஆசிரியர்- ராஜேஷ் வைரபாண்டியன்
எதிர் வெளியீடு
பக்கங்கள் - 149 ஆசிரியரின் எழுத்தில்அவரின் முதல் நாவலான "தேரி" வாசித்திருக்கிறேன்.
சிவந்து பரந்து கிடக்கும் தேரி மண்ணின் தன்மை பற்றியும்,அங்கிருக்கும் மக்களின் வாழ்வியலையும் வட்டார வழக்கில் சிறப்பாக எழுதியிருப்பார்.அந்த வாசிப்பனுபவமே இந்த புத்தகத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.இந்த நாவல் புலி வேட்டையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
வெவ்வேறு வாழ்வியலைக் கொண்ட வேட்டைக்காரர்கள்,வேட்டையாடும் முறை,இவர்களை இணைக்கும் ஒரு இழை நாவல் முழுக்கப் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கும்.ஒவ்வொரு முடிச்சும் அவிழும் போது வேட்டை மிருகத்திற்கான குணம் மட்டும்தானா
பழி உணர்ச்சியும்,கோபமும் சேரும்போது மனிதன் எப்படி மிருகத்தைப் போலவே மாறிப் போகிறான் என்பதை வெளிப்படையாக நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
புலி வேட்டையே மையப்புள்ளி.
தன் பெருமையை நிலை நாட்டுவதற்காக வேட்டையாடும் ஒருவன், தான் வேட்டையாடிய மிருகங்களை சுவைத்து நம் கிராம மக்கள் மகிழட்டும் என நினைக்கும் ஒருவன்,இப்படியான வேட்டைக்காரர்களுக்கு இடையே குணம்,எண்ணவோட்டம் ஆகியவற்றில் இருக்கும் வேறுபாடு,
அதனால் அவர்கள் நேரிடும் சூழ்நிலைகளை விவரிக்கிறது. தங்களுக்கு நியாயம் என நினைக்கிற விஷயங்களுக்காக மனதுக்குள் பழியைச் சுமந்து மனிதர்கள் நடக்கும் போது அவர்களின் இயற்கையான குணமே மாறி மிருகத்தைப் போலவே மாறிவிடுகிறார்கள்.அப்படி மிருகக் குணம் எட்டிப் பார்க்கிற சமயங்கள் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.அழகான,அமைதியான அந்த கிராமத்தை காட்சிப்படுத்தும் போதே பின்னால் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதும் நமக்குப் புரிகிறது.
மூத்த தலைமுறை இப்படி வேட்டை,வீரம்,வயது முதிர்ந்த பிறகும் உண்மையான காதல் என பயணப்பட்டுக் கொண்டிருக்க,அதே கிராமத்தின் இளைய தலைமுறை
அதற்கு நேர் மாறாக சுற்றிக் கொண்டிருக்கிறது.சோம்பேறித்தனம்எந்த வேலையிலும் கவனமின்மை,
ஊரைச் சுற்றியே பொழுதைக் கழிப்பது,குடி,வன்மம்,பொறாமை எந்த உறுத்தலும் இல்லாமல் நண்பனின் மனைவியை ஆசைப்படுவது,ஒருவேளை நண்பன் இறந்து விட்டால் அவள் எனக்கு கிடைப்பாள்தானே என யோசிப்பது,
அருகில் அமர்ந்து கொண்டே நம்பி வந்தவனை அழிப்பது என ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த இரு கோணங்களையும் மாற்றி மாற்றி விவரிக்கும்போதே தலைமுறை மாற்றத்தில் வந்த வித்தியாசத்தைத் தெளிவாக உணர்த்தி விடுகிறார் ஆசிரியர்.
வலிமை மிகுந்த இரண்டு பெண் கதாபாத்திரங்கள்.முதலில் அத்தினி.
திருமணத்திற்கு முன்பு தாய்மாமனுக்கு அடிமையாக இருந்தவள்,மாமனாரின் அன்பால் திருமணத்திற்குப் பிறகு சுதந்திரமும் அதிகாரமும் கிடைத்தவுடன் அடியோடு மாறிவிடுகிறாள்.பகை உணர்ச்சிக்கு ஆளாகி பழிவாங்கத் துடித்தாலும்,தனக்கு எது லாபம் என்பதை யோசித்து மற்றதை பின்னுக்குத் தள்ளுகிற சாமர்த்தியம்,
கணவனை ஏமாற்றித் தனக்கானதை சாதித்துக் கொள்பவள்.அதில் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாதவள்.
அடுத்து நாகம்மை,அந்த கிராமத்தின் தர்மகர்த்தா,ஊரையே ஆட்டிப்படைக்கிற தைரியம்,
யாரையுமே நெருங்க விடாமல் தன்னைச் சுற்றி ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு,கண் அசைவில் அனைவரையும் கட்டுப்படுத்துகிற வீரம்,தனக்கு வேலை செய்கிற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்குகிற அறச்சீற்றம் என ஆளுமை நிறைந்த ஒருத்தி நாகம்மை.
அதேபோல கடைசிவரை பெயர் குறிப்பிடப்படாத கதாபாத்திரம் மீசை.
அவரின் தைரியமும்,தன்னைக் கொல்ல வந்தவன் முன்பு கூட பயமில்லாமல் நிற்கும் கம்பீரமும் நம் மனதில் பதிந்து விடும்.மனைவியின் மரணத்திற்குப் பிறகு வெகு காலம் தனியே வாழ்பவருக்கு,
துணையாக ஒருத்தி வந்ததும் அவரின் அன்பு வீரத்தையும் தாண்டி வெளிப்படும்.எதற்கும் அஞ்சாத அவரின் மனம் தனக்கு விருப்பமான ஒருத்திக்காகத் தவிப்பதும் அவளை இழந்த பிறகு முற்றிலுமாக ஒடுங்கி,
நிழலாக இருப்பவர்களிடமிருந்தே துரோகத்தை எதிர்கொள்ளும் போதும் நமக்கு பிடித்த கதாபாத்திரமாகிவிடுவார்.பழிவாங்கும் உணர்ச்சிக்குள் சிக்கிக் கொண்டு,வெளி வரவே முடியாமல்
மாட்டிக்கொண்ட பலரையும் அறிமுகப்படுத்துகிறது நாவல். இந்தக் காரணத்திற்காக பழி என ஒவ்வொரு காரணமாக அவர்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருப்பதுதான் கொடுமை.
அதேபோல மூத்த தலைமுறை மரணத்தை தைரியமாக எதிர்கொள்வதும்,இளைய தலைமுறையினர் அதற்கு பயந்து,
என்னவெல்லாம் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டு,அது நண்பனை துரோகத்தால் வீழ்த்துவதாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் செய்து முடிக்கிறார்கள்.தனக்கு மட்டுமே பெருமையை,மகிழ்வைத் தர வேண்டும் என்று நினைத்த ஒன்று கைநழுவிப் போகும்போது மனிதனின் மனநிலை எப்படி மாறிப் போகிறது என்பதையும்,அது மிருக குணமாக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது என்பதையும் உணர்த்துகிறது.வேட்டை குணமுடைய மனிதனைப் போலவே அந்த நிலத்தின் தன்மையையும் சொல்கிறது நாவல்.அவசியம் வாசிக்கலாம்.
Read more
பாலகுமார் விஜயராமன்
எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் எழுதிய 'வேட்டை நிலம்' நாவல் குறித்து:
* நாவல் முழுக்க வட்டார வழக்கு நன்றாகக் கையாளப்பட்டிருக்கிறது.
* குறுநாவலாக வந்த முதல் பதினோரு அத்தியாயங்களில் இருந்ததை விட, அதன் பிறகான அத்தியாயங்களின் எழுத்து நடை மெருகு கூடி இருந்தது.
* புலி வேட்டை, மனிதர்களுக்கிடையேயான பழி அது தொடர்பான கொலை என்று மிகச் செறிவான களம், ஆனால் நாவல் மிக மேலோட்டமாக எழுதப்பட்டிருந்தது போலத் தோன்றியது.
* எழுத்தாளரின் முந்தைய தேரி நாவலையும் வாசித்திருக்கிறேன். அவர் தனது பால்யப் பருவ நாஸ்டால்ஜியாவில் இருந்து வெளியேறி புனைவுத் தளத்தில் இன்னும் ஆழமாகக் கால்பதிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஏற்கனவே பல ஆண்டுகள் கவிஞராக உள்ள அனுபவத்தில் அவரால் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். வாழ்த்துகள்.
Balakumar Vijayaraman
அன்பும் நன்றியும்.
Read more
ரம்யா அருண் ராயன்
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘வேட்டை நிலம்’ வாசித்தேன். பெருங்குளம், ஏரல், சாயர்புரத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகள், வல்லநாட்டின் காட்டுப்பகுதி,
ஆறுமுகநேரி என தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் கதை பயணிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் சமவெளிப்பகுதியின் மொழிநடை கதை முழுவதையும் நடத்திச்செல்கிறது. அந்நிலமும், மிருகங்களும், பறவைகளும், மரங்கள் செடிகொடிகளும், தட்பவெட்பமுமே கதையை கைபிடித்து நடத்திச்செல்கின்றன. புளியம்பூ உதிர்வை உண்பதும், கசலிப்பழத்தின் இனிப்பு வாசனை பரவிய பரோட்டா கடையுமெல்லாம் தூத்துக்குடி மாவட்டக்காரர்களின் சுவையரும்புகளின் நீர் கிளர்த்திகள். விறுவிறுப்பான கதை... வேட்டைதான் இங்கு பிரதானம், ஆனால் மிருகவேட்டையை விட மனித வேட்டை அதிகம் நிகழ்கிறது கதைக்களத்தில், துரோகம், தாபம், பழியுணர்ச்சி ஆகியவை நிகழ்த்துகிற வேட்டைகளாலான கதை நகர்வு. பல துரோகங்களுக்கு மத்தியில் கடைசியில் ஒரு காதல் ஜெயிக்கிறது.
/சாராயக்கடைக்குள் நுழைந்த பெரியவர் ஒருவர் இடுப்பு வேட்டியிலிருந்து ஐந்து ரூபாய்த்தாளை எடுத்து பத்து முறைக்கும் மேல் தடவிக்கொண்டிருந்தார். அந்த கசங்கிய ஐந்து ரூபாயிலிருந்த ட்ராக்டர் இன்னும் சிறிதுநேரத்தில் ஸ்டார்ட் ஆகிவிடுமளவு இருந்தது அந்தத் தடவல்/ என்று கதையில் வருகிற இடத்தில் சுற்றுப்புறம் மறந்து வாய்விட்டுச் சிரித்தேன்.
‘கோட்டாளத்தின் கால்களை நீருக்குள் பிடித்து இழுத்தது யார்?’
‘மீசையின் நெஞ்சில் கத்தி இறங்கிய காயம் பற்றி தீ விபத்தின் பின் போலீஸ் விசாரிக்காதா?’ என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் முன்பே நாவல் முடிந்துவிட்டது.
இரண்டாம் பாகத்திற்கான அனைத்து முகாந்திரத்தையும் வைத்து கதையை முடித்திருக்கிறார் ராஜேஷ் வைரபாண்டியன்.
வாழ்த்துகள் தோழர் Rajesh Vairapandian , எழுத்துவேட்டை தொடரட்டும்❤
——
அன்பும் நன்றியும் ரம்யா அருண் ராயன்
Read more