ரயிலில் பயணிக்கும் பெண்

ரயிலில் பயணிக்கும் பெண்

 

1.

முப்பத்தாறு மணிநேர ரயில் பயணம். முதலாம் வகுப்பு குளிரூட்டப் பட்ட பெட்டியில் இருவர் மட்டுமே பயணிக்கும் கூபே வகை கம்பார்ட்மெண்ட்டில் நானும் மற்றொரு பெண்ணும். அவள் யார்? தெரியாது. அவளுக்கும் எனக்குமான இடைவெளி வெகுசில அடிகள் மட்டும். அருகருகே அமர்ந்திருக்கிறோம். ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடும். எனக்கு அப்பர் பெர்த். அவளது உடலிலிருந்து புதுவித வாசனையொன்று வீசிக்கொண்டிருந்தது. காட்டுப்புஷ்பங்களின் வாசனையோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அதன் வாசம் அப்படியில்லை. மழைக்குப் பின்னான மண்வாசனையுடன் உதிர்ந்த மாம்பூக்களின் வாசமும் கலந்தால் தோன்றுமே அப்படியொரு வாசனை. ரயில் மெதுவாய் நிலையத்தைவிட்டு நகரத்துவங்குகிறது. அவள் தன் வாசனையுடன் என்னுடன் உரையாடத் துவங்கியிருந்தாள். நானொரு வாசனை விரும்பி போல அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அல்லது நுகர்ந்துகொண்டிருந்தேன்.  ரயிலின் அசைவுகளில் அவளது மெல்லுடல் அசைவது கண்டபோது பியானோவொன்றில் நடனமிடும் மென்விரல்கள் எனக்கு ஞாபகத்தில் மலர்ந்தன. அப்படியொரு மென்விரல்க்காரியை முன்பொருமுறை சந்தித்திருக்கிறேன். அவளது விரல்களுக்காக மட்டுமே அவளை அதிகமாய் பிடித்திருந்தது. அதை அவளிடம் சொன்னபோது அவளது விரல்கள் வெட்கப்பட்டதை நான் மட்டுமே அறிவேன். அந்த மென்விரல்க்காரியின் விரல்களைப் போலில்லாமல் சற்று சதைப்பிடிப்புடன் இருந்தது இந்த வாசனைக்காரியின் விரல்கள். 

 

ரயில் இன்னும் முப்பத்து ஐந்து மணி நேரத்தில் தில்லியை அடைந்துவிடும். அதன் பிறகு அவள் யாரோ நான் யாரோ. அதற்கிடையேயான இரவும் பகலும் எனக்கும் அவளுக்குமானது. எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் உள்நுழைந்துவிட இயலாத கணங்களுக்கானவை. ரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவளது உடலிலிருந்து வெளிப்படும் வாசனையின் கனம் கூடிக்கொண்டே இருந்தது.  உடலின் எப்பாகத்திலிருந்து இந்த வாசனை வெளிப்படும், எது உடலின் கதவு எனக் கேள்விகள் என்னுள் எழுந்தவண்ணம் இருந்தன. அவளோ ஜன்னல் வழியே விரைந்தோடும் காட்சிக்குள் மூழ்கியிருந்தாள். அவளது உடலின் கதவா அல்லது ஜன்னலா எதுவோ ஒன்றின் வழியே அவளது மனதிற்குள் நுழைந்துகொண்டு சற்று நேரம் வசித்துத் திரும்ப யத்தனித்தபடி, தளும்பிக்கொண்டிருந்தேன். தொண்ணூறு நிமிடங்கள் கழிந்த பின்னர் முதன் முதலாய் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

 

நானொரு பழகிய நாய்க்குட்டி போல அவளது கண்களுக்குத் தோன்றியிருக்கிறேன். குறுநகைத்தாள். குளிர்கால நதியில் உடல் பட்டதுபோல சில்லிட்டுப்போனது. அவளது கண்களின் அருகே இரண்டு சிகப்புநிற பறவைகள். கழுத்திலும் மார்பிலும் பார்த்துச் சலித்த டாட்டுக்களை கண்கள் அருகில் இப்பொழுதுதான் பார்க்கிறேன். மழையின் கனம் தாளாத சிறுமலர் தலைகவிழ்வது போல தரையை நோக்குகிறேன். அவளது சித்திரம் தரையிலொரு பெரும் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. ஒரு கணம் மட்டுமே கண்களுக்குள் விழுந்தவளை உடனே உள்வாங்கி தரையில் பெரியதொரு சித்திரமாக்கியிருந்தது எது என்று யோசிக்கிறேன். அவள் இப்போது மீண்டும் கடந்து செல்லும் மரங்களையும் ஜன்னல் வழியே கசிகின்ற வெளிச்சக்கோடுகளையும் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள். சிலையொன்று உயிர்ப்பெற்று புடவையில் அமர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி. அவளது இடக்கையின் சிறுரோமங்கள் அடர்வனத்தின் விருட்சங்கள் போல ஆனால் சிறியதாக அசைந்தபடி இருக்கின்றன. அந்த ரோமங்கள்தான் அவளது உடலின் கதவுகளோ? அந்த ரோமக்காட்டினுள் நுழைந்து, தொலைந்து, மீண்டு கொண்டிருக்கும் வேளையில் ரயிலின் வேகம்  குறையத் துவங்குகிறது. வேகமெடுக்கும் ரயிலைப் போலவே வேகம் குறையும் ரயிலின் அசைவும் தாங்க முடியாத மகிழ்வைத் தருகிறது. அவளுக்கும் அது பிடித்திருக்க வேண்டும். லோயர் பெர்த்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு நாடியில் கையைவைத்தபடி வெளியே பார்க்கிறாள். என்னுள் அதிவேகமெடுக்கிறது இல்லாத ரயிலொன்று.

 

2.

விளக்கு அணைத்தவுடன் அவள் லோயர் பெர்த்திலும் நான் அப்பர் பெர்த்திலும் படுத்திருந்தோம். இந்த நான்கு மணிநேர பயணத்தில் இதுவரை அவள் ஒருமுறை கூட தன் மொபைலை எடுத்துப் பார்க்காதது எனக்கு வியப்பளித்தது. நானோ மொபைலை பார்த்துக்கொண்டிருப்பதான பாவனையில்தான் அதிகநேரம் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கம்பார்ட்மெண்டில் ஜன்னல் வழியே வந்துவிழும் வெளிச்சம் தவிர வேறெதுவுமில்லை. கதவிடுக்கின் வழியே கொஞ்சமாய் கசிந்துகொண்டிருந்த மென்வெளிச்சம் அந்த இரவின் இருளை ஓர் கூரிய கத்தியால் பாலாடைக் கட்டியை கீறுவது போல கீறிக்கொண்டிருந்தது. அடர் இருளும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் இரண்டிற்குமிடையேயான இந்த மெல்லிய இருளுக்குள் அவளது வாசனை மட்டுமே அடர்ந்திருந்தது. அது நாசிக்குள் இறங்கி உடலெங்கும் ஒருவித புத்துணர்வை நொடிக்கு நொடி தந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் அவளது பெயர் என்னவாக இருக்கும் என்று மனம் யோசிக்கத் துவங்கியது. எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எந்தவொரு பெயராக இருந்தாலும் அவளுக்கென நானொரு பெயர் சூட்ட வேண்டும். ஒரே ஒரு விதிக்குள் அப்பெயர் அடங்கவேண்டும். அது என்னவெனில் அப்பெயர் மிக மிக மிருதுவாக இருத்தல் வேண்டும் என்பதே அவ்விதி. 

 

இப்போது அவள் உறங்கியிருக்கக் கூடும். நான் உறங்கும் நேரம்வரை அவளுக்கான பெயர் சூட்டலில் நேரம் கழிந்துவிடும். ஒவ்வொரு மிருதுவான பெயர்களாக என் முன்னால் நடனமிட்டுக்கொண்டிருக்கின்றன. என்னைத் தேர்ந்தெடு என்று அவை என்னிடம் சொல்லியபடியே இருக்கின்றன. சிறிய ஊசியால் ஒவ்வொரு பலூன்களாக உடைப்பது போல ஒவ்வொரு பெயரையும் உடைத்து தூர வீசுகிறேன். கடைசியாக ஸித்தாரா எனும் பெயரை தேர்வு செய்து உள்ளங்கைகளில் ஏந்தி மெல்ல கீழ் பெர்த் நோக்கி நழுவ விடுகிறேன். ஆற்று நீரை கைகளில் ஏந்தி மீண்டும் ஆற்றில் நழுவ விழுவதைப் போல அந்தப் பெயர் என் கைகளிலிருந்து நீங்கி அவளை நோக்கி மிதந்து மிதந்து செல்கிறது. ஸித்தாராவாகி அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.ரயில் இருளுக்குள் விரைந்து கொண்டிருக்கிறது.

 

3.

கம்பார்ட்மெண்ட்டில் வெயில் நிரம்பியிருந்தபோது கண்விழிக்கிறேன். சோம்பல் முறித்து கீழே இறங்கி வருகிறேன். ஸித்தாராவைக் காணவில்லை.

அவள் படுத்திருந்த வெண்நிறப் போர்வையின் ஒரு ஓரத்தில் படுத்திருந்தது ஸித்தாரா எனும் பெயர். ஒரு புன்முறுவலுடன் என்னிடம் ஓடிவந்து தோள் மீது ஏறி நின்று கொண்டது. கழிப்பறையிலிருந்து திரும்பியவள் முகத்தில் ஒன்றிரண்டு நீர்த்துளிகள் ஐய்யோ மரணிக்கப்போகிறோமே என்கிற கவலையில் ஒடுங்கியிருந்தன. தன் துவாலையால் அவற்றை துடைத்துக் கொன்றுவிட்டு ஜன்னலோரம் அமர்ந்தாள். நானும் ஸித்தாரா எனும் பெயரும் ஸித்தாராவாக நேற்று ஜனித்தவளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவள் எவ்வித பிரக்ஞையுமின்றி ஆர்டர் செய்திருத்த தேநீரை குடிக்கத் துவங்கினாள். ஒவ்வொரு மிடறாக அவளால் மரணத்தை தழுவிக்கொண்டிருந்தது தேநீர். குடித்து முடித்த பின் என் பக்கமாக திரும்பியவள் குட்மார்னிங் என்றபடி இதழோரம் சிறியதாய் புன்னகையொன்றை மலர்த்தினாள். ஸித்தாரா எனும் பெயர் வெட்கி என் வலது தோளிலிருந்து கழுத்துவழியே ஓடி என் இடது தோளில் சென்று அமர்ந்துகொண்டது. நான் பதிலுக்கு குட்மார்னிங் என்றபோது ரயில் தன் வேகம் குறைந்து நிறுத்தம் ஒன்றில் நின்றது. 

 

நேற்றிரவு வீசிய வாசனையை தேடிக்கொண்டிருந்தது என் நாசி.  வெயில் கவர்ந்து சென்றிருக்கலாம் என்று காதோரம் கிசுகிசுத்தது ஸித்தாரா எனும் பெயர். அவள் கண்கள் மூடியபடி தன் மொபைலில் இசை ரசிக்க துவங்கியிருந்தாள். நான் அந்தக் காட்சியை வெட்டி எடுத்து என் கண்களுக்குள் பொதிந்து வைத்துக்கொண்டேன். கம்பார்ட்மெண்ட் கதவைத் திறந்து வெளியே வந்து கழிப்பறை அருகேயிருக்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். கொஞ்சமாய் நீர் தெளித்து முகம் கழுவியபின் மனம் உற்சாகத்துடன் இருப்பது போலிருந்தது. ஸித்தாராவிடம் என்ன பேசுவது எப்படி ஓர் உரையாடலை துவங்குவது என்று கண்ணாடியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ரயில் நிறுத்தம்விட்டு மெதுவாக நகரத் துவங்கியது. 

 

ஸித்தாரா கால்மேல் கால்போட்டபடி ஏதோவொரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். காதுகளில் ஹெட்போன் இருந்தது. இசை ரசித்தபடியே வாசிக்கிறாள் என் ஸித்தாரா. அதெப்படி அதற்குள் ஸித்தாரா என் ஸித்தாரா என்றாக முடியும்? அவள் மனதில் என்ன இருக்கிறதென்பதே எனக்குத் தெரியாது என்பதால் அந்த என் என்பது தவறிவிழுந்த சொல் என்று மனதிடம் சொல்லி வைத்தேன். சற்று நேரத்திற்கு பின் அவள் யன்னல் பக்கமாக திரும்பியபோதுதான் அவளது முதுகிலிருந்த பிறை வடிவ தழும்பைப் பார்த்தேன். நேற்று எப்படி இதைத் தவறவிட்டேன்? அந்தத் தழும்பை எங்கிருந்து பெற்றிருப்பாள். அந்தத் தழும்புக்கு பெயர் கிடையாதா என்றது என் தோளில் அமர்ந்திருந்த ஸித்தாரா எனும் பெயர். வைத்துவிடலாம்தான். ஆனால் அவள் அதற்கோர் பெயர் வைப்பதை விரும்புவாளா? விரும்பியதைதானே பெயரிட்டு அழைக்கிறோம். ஒருவேளை அந்தத் தழும்பு அவள் விரும்பப்படாத ஒன்றாக இருந்தால் என்ன செய்வது? சரி, அவளிடமே கேட்டுவிடலாம் என்றெண்ணிய நேரத்தில் அவள் தழும்பு பிறை வடிவிலிருந்து கண்ணீர்த்துளியின் வடிவம் பெற்றது. இதென்ன தழும்புக்கு உருமாறத் தெரியுமா? பெயருக்கு உன்னுடன் உரையாடத் தெரிகையில் தழும்புக்கு உருமாறத் தெரியாமல் இருக்குமா எனச் சொல்லிவிட்டு சிரித்தது ஸித்தாரா எனும் பெயர். அவள் விரும்பாத தழும்பாகத்தான் அது இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே பார்வையை திருப்பிக்கொண்டேன்.  ஏன் என்னுடலில் அப்படி ஓர் தழும்பு இல்லாமல் போனது? என் முதுகில் நான் அறியாத தழும்பேதும் இருக்கிறதா? எனக்கு இப்போதே ஒரு தழும்பு வேண்டும். அதுவும் பிறை வடிவில். அது அவளது கண்களால் பார்க்கப்படும்போது உருமாற வேண்டும். கண்ணீர்த்துளியாகவோ அல்லது அவள் விரும்பும் ஏதோவொன்றாகவோ.  கொஞ்சம் பொறு என்றபடி என் தோளிலிருந்து முதுகில் குதித்து தழும்புத் தேடலை தொடங்கியது ஸித்தாரா எனும் பெயர். பின் என் காதோரம் வந்து சொன்னது. உன் முதுகில் தழும்பு எதுவும் இல்லை ஆனால் மீன் வடிவத்தில் மச்சம் இருக்கிறது. அவள் அதை விரும்புவாள் என்றது.  

 

நான் ஸித்தாராவைப் பார்த்தேன். அவள் மஞ்சள் வெயிலைப் போல ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள். அவளது இடக்கை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது என் பார்வை. யாரென்றே தெரியாத பெண்ணிடம் எதற்கென்றே தெரியாத உணர்வுகளால் நிரம்பியிருந்தேன். கண்கள் மூடி அமர்ந்திருந்தவளின் கண்களோரம் துளிர்ந்து கன்னத்தில் பாதையொன்றை உருவாக்கி வழிந்தது நீர். ஏதோ உடைந்தது எனக்குள். ஏன் ஸித்தாரா அழுகிறாள்? அவளது கரம் பற்றிக்கொண்டு அழாதே ஸித்தாரா என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியபோது அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ஜன்னலில் தலைசாய்த்துக்கொண்டாள். அக்கணம் நானொரு ஜன்னலாக இல்லாமல் போனேன் என்ற எண்ணம் தோன்றியதும் கனத்த மனதுடன் வேறு பக்கம் தலையை திருப்பிக் கொண்டேன்.

 

3.

தன் கைப்பையிலிருந்து சிறியதொரு முகம்பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் தன் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸித்தாரா. அப்போது அவளது இதழ்கள் மெதுவாய் எதையோ முணுமுணுத்தன. உற்று கவனித்தேன். “நம் வாழ்வில் நம் முகத்தை என்றுமே நம்மால் பார்க்க இயலாது, நாம் காண்பது நம் முகத்தின் பிம்பம். அதுவே நம் முகம் என்று வாழ்நாள் முழுவதுமாய் நம்பிக்கொண்டிருக்கிறோம்.”  அவள் அப்படிச் சொன்னதும் என் முகமென்று நான் நம்பிக்கொண்டிருக்கும் பிம்பத்தை ஸித்தாராவின் கண்கள் மட்டும்தான் காணமுடியும் என்று நினைத்தபோது மனது விம்மியது. கண்ணாடிக்குள் அவள் கண்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு புல்நுனியாக சென்று அதன் மேலிருக்கும் பனித்துளியில் தன் முகத்தின் பிம்பத்தை பார்த்துச் செல்லும் வெளிமான் போலவே ஸித்தாரா அந்தக் கண்ணாடிக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

 

இரவு கவியத் துவங்கியிருந்தது. ரயில் இன்னும் பத்து மணி நேரத்தில் தில்லியை அடைந்துவிடும். மரப்பொந்திற்குள் நுழையும் சர்ப்பமென ரயில் இருளுக்குள் நுழைந்து தன் நீண்ட உடலை மறைத்துக்கொள்ள துடித்துக்கொண்டிருந்தது. விடிந்த பின்னர் நிறுத்தம் வந்தவுடன் என் முப்பத்தாறு மணிநேர சக பயணி ஸித்தாரா இறங்கிச் சென்றுவிடுவாள். இனி ஒருபோதும் அவளை என்னால் சந்திக்க முடியாமல் போகலாம். அவளது முகத்தை அதன் வசீகரத்தை ஒவ்வொரு சொற்களாக செதுக்கி எடுத்து அவளுக்கு பரிசளிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அவளுக்கென நான் சூட்டிய பெயரைக் கூட என்னால் சப்தமிட்டு உச்சரிக்க இயலாமல் போனது. தன் வாழ்நாளில் சில மணிநேரம் மட்டுமே நம்முடன் பயணிக்கும் ஒருவர் நமக்குச் சூட்டிய பெயர் அவள் அறிந்துகொள்ளாமலே இறங்கிச் சென்றுவிடுவாள். 

 

நீ அதிகம் யோசிக்கிறாய், அவளிடம் பேசுவதில் உனக்கேன் இவ்வளவு தயக்கம் என்றொரு கேள்வியை என் முன் வீசியது ஸித்தாரா எனும் பெயர். எல்லோரிடத்திலும் நினைத்தவற்றை நினைத்தவுடன் பேசிவிட முடிகிறதா? ஏன் சமயங்களில் என்னிடமே பேச இயலாமல் நான் மெளனித்திருந்த நாட்கள் ஏராளம் தானே. பின் எப்படி ஸித்தாராவிடம் என்னால் பேச இயலும்.  ஒருவேளை நான் பேசியபின்னர் அவள் உதிர்க்கும் சொற்களில் ஏதேனுமொன்று என்னைக் காயப்படுத்திவிட்டால் என்ன செய்வது? கேள்விகள் ஒவ்வொன்றாய் உயிர்ப்பெற்று என்னைச் சுற்றி சுற்றி வந்தபோது என் கண்கள் உறக்கத்தை தழுவியிருந்தன.

 

4.

ரயில் தில்லியை சேர்வதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தபோது ஸித்தாரா என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

 

“நீங்கள் ஏன் என்னிடம் பேசவே இல்லை?”

 

என்னால் உடனே பதிலிடவும் முடியவில்லை. ரயிலைப் போலவே தடதடத்தது மனம். நான் உன்னுடன் மட்டும்தான் இந்த முப்பத்தாறு மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தேன் ஸித்தாரா என்று சொல்வதா அல்லது பேச முடியாத அற்புத கணங்களை நீ தொடர்ந்து எனக்கு பரிசளித்துக்கொண்டிருந்தாய் எனச் சொல்வதா எனத் தடுமாறி மெளனித்திருந்தேன், அவள் தொடர்ந்தாள்,

 

“உங்கள் முதுகிலிருக்கும் மீனுக்கு நானொரு பெயர் வைத்திருக்கிறேன், நேற்று நீங்கள் சுடிதாரிலிருந்து சேலைக்கு மாறியிருந்தபோதுதான் அந்த மீன் மச்சத்தை கவனித்தேன். அதற்கு நான் வைத்த பெயர் சொல்லவா?”

 

ம் என்று தலையாட்டிவிட்டு விழிகள் மலர அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடல் சன்னமாய் நடுங்கியதில், என் கண்ணாடி வளையல்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு மெல்லிய சப்தம் எழுப்பின. தில்லி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து நின்றது ரயில்.

 

“அந்த அழகிய மீன் மச்சத்திற்கு நான் வைத்த பெயர் ஸித்தாரா”  சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள். எனக்கு என் ஸித்தாராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

 

மேலும் சில சிறுகதைகள்

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால்...

Read More

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...

Read More

1 thought on “ரயிலில் பயணிக்கும் பெண்”

  1. R. Jose Arockia Ramola

    கதையின் கருவும்‌ நிகழ்வுகளும்‌ எழுத்தாளரின் வரிகளில் மிக அழகாகவும் தெளிவாகவும் வாசகர்களை உறுத்தாமலும் கையாளப்பட்டுள்ளது….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top