கொண்டலாத்தி

கொண்டலாத்தி

 

1.

 

“யழவு எப்பவும் பயலுககூட கெடந்துட்டு இப்படித் தனியா கெடந்தா கோட்டி பிடிச்சுத்தான் சாவணும் போல”  அடிக்கடி புலம்புவான். ஆனாலும் வேறு வழியில்லை. பி.பி.ராஜன் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.  பி.பி.ராஜன் என்று சொல்லக்கூடாது பட்டத்து பழனிராஜன் என்று சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்கும். அன்று காலை விழித்தவுடனே கல்லூரியின் பின்னாலிருக்கும் மரங்கள் அடர்ந்த இடத்திற்கு போய் பருத்த மரத்தடியொன்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். ஐம்பது அறுபது வேப்பமரங்களாவது இருக்கும். 

கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தான்.அறை எண் இருபதுதான் பி.பி.ஆரின் அறை. மூன்று படுக்கைகள் கொண்ட அறையில் அவன் மட்டும்தானிருந்தான். மற்ற இருவரும் செமஸ்டர் விடுமுறை என்பதால் ஊருக்கு போய்விட்டார்கள்.

 

விடுமுறைக்கு ஊருக்கு போய் வருவதற்கு பதில் இங்கே இப்படி மரத்தடியில் உட்கார்ந்து எத்தனை கருங்குயில் வருகிறது எத்தனை செம்போத்து வருகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கலாம் என்று நினைப்பான். வீட்டின் நினைவு வந்தவுடன் போனமுறை செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு போனதுதான் ஞாபகத்தில் மலர்ந்தது. இல்லை ஞாபகத்தில் முள்ளாய் குத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

 

வீட்டு வாசலைத் திறந்து முற்றம் கடந்து வீட்டுக்கதவை திறந்துகொண்டு உள்ளே போனான். “எப்பப் பாரு கதவ தொறந்து போட்டுட்டு போறதே இவியளுக்கு சோலியாப்போச்சு, யம்மே யப்பா எங்க இருக்கிய” கேட்டுக்கொண்டே வீட்டின் புறவாசல் கதவைத் திறந்து வளவுக்குப் போனான். அந்த வளவில்தான் அவனுகுப்பிடித்த சிகப்புக்கொய்யா மரமும் அரைநெல்லி மரமும் இருந்தன. அங்கேயும் யாருமில்லை. குழப்பத்துடன் முன்வாசலுக்கு வந்தவன் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்தபடி நின்றிருக்கும்போதுதான் யாரோ வாசற்கதவருகே நின்று கூப்பிடும் சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்து கதவைத் திறந்தவன்  இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்த ஆழிநங்கையைப் பார்த்ததும் ஒரு கணம் தடுமாறித்தான் போனான். 

 

ஒன்பதாவது படிக்கும்போது பி.பி.ஆர் படித்த ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சற்று தள்ளியிருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் ஆழிநங்கை. பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும்போதெல்லாம் நடந்து செல்லும் அவளைக் கடந்து செல்வது வாடிக்கை. அவளைக் கடக்கும் அந்த ஒரு நொடி மட்டும் வேகமாய் இதயம் அடித்துக்கொள்ளும். ஒருநாளாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு பலமுறை அவள் வீட்டிற்கு முந்தையத் திருப்பத்திலிருக்கும் ஆலமரத்தடியில் நின்றிருக்கிறான். அவள் அருகில் வர வர நாக்கு வறண்டு பேச்சும் வராது, பார்வையும் எங்கோ திருப்பிக்கொண்டுவிடும். அவள் தன்னைக் கடந்து செல்கையில் ஒருவித வாசனை நாசியைத் துளைக்கும். “ஏ யெப்பா என்னத்த போட்டு குளிப்பாளோ வாசம் இப்படி அடிக்கி” என்று நினைத்துக்கொள்வான். அவள் பள்ளி முடித்ததும் திருமணம் முடித்து வேறு ஊருக்கு போய்விட்டாள். கடைசிவரை அவளிடம் பேசமுடியாமல் போனதே என்கிற வருத்தத்தில் பல இரவுகள் உறங்காமல் புரண்டான்.  அவள் போனபின்பும் அந்த வாசனை மட்டும் அவனிடமே தங்கிவிட்டது போலிருந்தது. எவ்வளவோ முயன்றும் அந்த வாசனைக்கான சோப்பு அல்லது வாசனைத் திரவியம் எதுவென்றே அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிபிஆரின் சேக்காளி ஒப்பிலாமணியிடம் ஆழிநங்கையின் வாசனையைப் பற்றி ஒருமுறை வாய்தவறி சொல்லிவிட்டான்.

 

“யோல ஒப்பி, நானுந் தெனமும் பாக்குதேன் ஆழி என்னைத் தாண்டிப்போரப்ப எல்லாம் ஏதோ ஒரு வாசம் வருது பாத்துக்க, ஆனா என்னன்னுதான் தெரியமாட்டிக்கி, என்ன சோப்புதான் போடுதாளோ”

 

“என்னது வாசம் வருதா, எலேய் அப்ப அவ கொண்டலாத்தி யட்சிதாம்ல அவ வீடு வேற கல்லறத்தோட்டத்துக்கு போற வழியிலல்லா இருக்கி, சந்தேகமேயில்ல”  சற்று பதற்றம் கலந்த குரலில் ஒப்பிலாமணி சொன்னது பிபிஆருக்கு அச்சத்தை உண்டுபண்ணியது.

 

“என்னம்ல சொல்லுத கொண்டலாத்தி யட்சியா அதாரு, நாங் கேள்விபட்டதில்லயே” புருவம் உயரக் கேட்டான் பி.பி.ஆர்.

 

“எங்க ஆச்சிதான் அடிக்கடி சொல்லுவாவ பழனி, நானூறு  வருசத்துக்கு மின்னாடி இந்த ஊர்ல கூத்தியா வச்சிருந்தவன் எல்லாரும் வரிசையா ரத்தங் கக்கி செத்தானுவளாம், காரணம் என்னன்னு நெனைக்க? கொண்டலாத்தி யட்சிதான் படி தாண்டுனவன் எல்லாத்தையும் ராவோடு ராவா கூடியே கொன்னுப்புடுவாளாம். அப்படி சிக்கினவனுல ஒருத்தன் சாவறதுக்கு மின்னாடி ஏதோ ஒரு வாசனை வந்த திசைக்கு தான் போனதாவும் அங்கதான் கொண்டலாத்தி அவனை கவர்ந்துட்டு போயி வாய்க்காலு பக்கத்துல ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சாம் அங்க வச்சி கூடிட்டு கழுத்தைப் புடிச்சு தள்ளிட்டு படாருன்னு எக்கி வானத்துல பறந்து மறஞ்சிட்டாளாம். வீட்டுக்கு வந்தவன் ரத்தவாந்தி எடுத்திருக்கான். இப்படி பல கத ஆச்சி சொல்லுவாவ, நீயும் வாசனை வந்துச்சுங்க, நீ அவளுக்கு காத்து நிக்கிற இடத்துல வேற ஒரு ஆலமரம் இருக்குல்லா, சந்தேகமே வேண்டாம்ல அந்த கொண்டலாத்தி யட்சிதான் திரும்ப வந்திருக்கா”  கடகடவென்று சொல்லிவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினான் ஒப்பிலாமணி.

 

“யம்மாடியோவ் இனி சந்தங்காட்டாம இருத்துக்கணும், நல்ல வேள நம்மள ஒண்ணும் பண்ணல அந்த கொண்டலாத்தி” என்று நினைத்தவன் ஒப்பிலாமணி சொன்னது கட்டுக்கதையாக இருக்குமோ என்றும் நினைத்துக்கொண்டான். எதுவோ அவள் கல்யாணம் முடிந்து ஊரைவிட்டே போய்விட்டாள் என்கிற நிம்மதியில் இருந்தான். இதோ அவன் முன் நிற்கிறாள் இப்போது.

 

“ஏ பழனி என்ன நாஞ்சொன்னது காதுல விழுந்துச்சா, பேயக் கண்டது மாரில்லா நிக்க” சொல்லிவிட்டு இடுப்பிலிருந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டாள். அது அங்கிருந்த செண்டு செடிக்கு ஓடிச்சென்று ஒரு பூவை கொய்தது.

 

“ஏ செத்த நேரம் சேட்ட பண்ணாம இருக்கியா, இடுப்புல இருந்து எறங்கின ஒடனே சேட்டைய ஆரம்பிச்சுடுத, ஒழுங்கா இருக்கணும் செரியா?” அவளது அதட்டலை அந்தக் பெண்குழந்தை கண்டுகொள்ளவே இல்லை. 

 

“நீ…நீங்க ஆழிநங்கைதான”  தடுமாற்றத்துடன் கேட்டான் பிபிஆர்.

 

“இல்ல நா அவ தங்கச்சி” சொல்லிவிட்டு சத்தமிட்டு சிரித்தாள்.

 

“அதுக்கில்ல பாத்து ரொம்ப வருசம் ஆச்சில்லா, அதாங் கேட்டன்”

 

“நா ஆழிநங்கைதான், எம் மவளுக்கு தடுமன் பிடிச்சுக்கிச்சு, அதான் ஒங்க வீட்ல தூதுவளை இருக்குன்னு எங்க அம்ம சொன்னாவ, கொஞ்சம் ஆஞ்சுட்டு போலாமின்னு வந்தன்” 

 

“ஒ செரி செரி, வளவுலதான் செடி இருக்கு நீங்க போயி ஆஞ்சுகிடுங்க, எங்க அம்மைய காணோம், எதுத்த தோட்டத்துல ஆட்டுக்கு புல்லறுக்கப் போயிருக்காவளான்னு பாத்துட்டு வாரேன்” சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து, எதிர் தோட்டத்தில் அம்மா நிற்கிறாளா எனத் தேடினான். அங்கே  தண்ணீர் பாய்த்துக்கொண்டிருந்த சுடலைமுத்து அண்ணனிடம் விசாரித்தான்.

 

“ஆமாடே தோட்டத்துக்கு உள்ளதான் நிக்காவ, நா போயி அனுப்பிவிடுதேன்”

 

“ஓ செரிண்ணே, நா வீட்டுக்கு போறேன்”  சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பி வளவுப்பக்கம் போய் பார்த்தான். அங்கே ஆழிநங்கையைக் காணவில்லை.

 

“அதுக்குள்ள ஆஞ்சுட்டு போயிட்டாளே” என்று நினைத்தபடி நின்றவன் அம்மையின் குரல் கேட்டு திரும்பினான். அம்மா இடுப்பில் பனையோலை பெட்டி நிறைய புல்லுடன் நின்றிருந்தாள்.

 

“யய்யா எப்ப வந்த, இன்னிக்கு உச்சிக்குதான் வருவேன்னு ஐயா சொன்னாவ, சீக்கிரமா வந்துட்டபோல”

 

“ஆமாம்மே மொத பஸ்ஸுக்கே வந்துட்டன்”  அம்மாவிடம் பேசிக்கொண்டே பெட்டியை இறக்கி ஆட்டுக்காடியில் கொண்டுபோய் வைத்துவிட்டு திரும்பினான். காடியில் கட்டியிருந்த ஆடுகள் புற்களைப் பார்த்ததும் நிலைகொள்ளாமல் கத்தின. இரண்டு ஆட்டுக்குட்டிகள் ஓடிச்சென்று புற்களை தின்ன முயற்சித்தன. 

 

“யய்யா ஒனக்கு புடிச்ச வாள மீனு புட்டு செஞ்சித் தாரேன், நீ மொத குளிச்சிட்டு வா”

 

“சரிம்மே, ஆழிநங்கை தெரியுமில்லா, மேலத்தெருல ஆத்திமுத்து அண்ணாச்சி இருக்காவல்லா அவிய மொவ, இப்பதான் வந்துட்டுப்போறா”

 

“ஆமா தெரியும்ப்பு, அவ அம்ம அம்மங்கோயிலுக்கு எங்கூடத்தான் வருவா, செரி எதுக்கு வந்துட்டுப்போறா”

 

“அவ புள்ளைக்கு தடுமனாம், அதான் தூதுவளை வேணுமின்னு கேட்டுவந்தாம்மே”

 

சரியென்று சொல்லிவிட்டு அடுப்பாங்கரைக்குள் போய்விட்டாள் அம்மா.

 

குளிப்பதற்காக வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றடிக்கு சென்று சட்டையை கழற்றும்போது அந்த வாசனை அவனைச் சூழ்ந்துகொண்டது. அதே வாசனை.  ஒப்பிலாமணி சொன்னது உண்மையாகத்தானிருக்கும் என்று நம்பத் துவங்கியதும் அந்த நாளிலிருந்துதான். 

 

2.

மறுநாள் மீன் சந்தையில் வைத்துதான் ஆழிநங்கையை மீண்டும் பார்த்தான். சாளை மீன்களை பொறுக்கிக்கொண்டிருந்தவள் நிமர்ந்தபோது இவன் பார்ப்பதை கண்டு கொண்டாள். சந்தை என்பதால் காணாதது போல் மீனை வாங்கிக்கொண்டு போய்விட்டாள். இவன் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒவ்வொரு மீன் கடையாக பார்த்துக்கொண்டே வந்தவன் ஊளி மீன்களில் நான்கை வாங்கிக்கொண்டு சைக்கிளுக்கு திரும்ப முயற்சித்தபோது மீண்டும் அதே வாசனை. மீன் கவுச்சிக்கு மத்தியில் எப்படி அந்த வாசனை இவ்வளவு அடர்த்தியாக என்று குழம்பியவன் ஆழிநங்கை சந்தேகமேயில்லாமல் அந்த கொண்டாலத்தி யட்சியாகத்தானிருக்க வேண்டும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தான்.

 

“யம்மே யட்சிக நெசமாவே இருக்கா இல்லாட்டி எல்லாங் கட்டுக்கதயா?”  அம்மியரைத்துக்கொண்டிருந்த அம்மாவின் அருகில் சென்று ஒரு தேங்காய்த்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சமயற் திண்டில் எம்பி உட்கார்ந்தபடியே கேட்டான்.

 

“யட்சிக இல்லாம இருக்குமா, நம்ம குரும்பூர் காசிப்பழம் அண்ணாச்சி இருக்காவல்லா, கொஞ்ச வருசம் தாடியும் கீடியுமா இமய மலைக்கெல்லாம் போயி சுத்திட்டு வந்தாவ, அங்க ஒரு மலையடிவாரத்துல கந்தவர்கள்னு ஏதோ தேவர்களாம் அவியள பாத்தேன்னு சொன்னாவ,  அப்ப ஏதோவொரு வாசனை வந்துச்சாம் பாத்துக்க, ஆளே சொக்கிப்போயி நின்னுட்டாவளாம், அதே மாரிதான் யட்சி வந்தா வாசனையும் ஆளச்சாய்ச்சிப்பிடும்ன்னு கேள்வி பட்டிருக்கேன். திடீர்னு என்னத்துக்கு யட்சிய பத்தி கேக்குத?” அம்மிக்கல்லை நேராக நிமிர்த்தி அதில் ஒட்டியிருக்கும் தேங்காய்த் துவையலை வழித்தெடுத்து பக்கத்திலிருக்கும் பாத்திரத்தின் உள்விளிம்பில் தேய்த்தப்படியே பதிலிட்டாள் அம்மா.

 

“யம்மே நீ சொல்லுறது சரிதான், எனக்கும் வாசனை தெரிஞ்சிச்சி”  திண்டிலிருந்து குதித்தவன் சற்று சத்தமாகவே சொல்லிவிட்டான்.

 

“என்னய்யா சொல்லுத, நீ எங்க யட்சிய பாத்த வாசனை வாரதுக்கு?”

 

“ஆழிநங்கைதாம்மே அந்த யட்சி, அவ வரும்போதும் போவும்போதும் வாசனை வருதுல்லா”

 

“யாரு ஒக்கல்ல புள்ளைய தூக்கிவச்சிகிட்டு வருவாளே அவளா? அவ யட்சியுமில்ல ஒண்ணும்மில்லப்பு, நீ மொட்டைத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப்போடாதே”

 

“அதெப்படிமே சொல்லுதிய, நான் பள்ளிக்கூடம் படிக்குற காலத்துல இருந்தே பாக்கேன், அவ வந்தாலே வாசமும் பொறத்தாலயே வந்துருது, எனக்குச் சந்தேகமே இல்ல அவதான் அந்த கொண்டலாத்தி யட்சிமே” தீர்க்கமாக சொல்லும் மகனை ஆச்சர்யத்துடனும் நம்பமுடியாமலும் பார்த்துக்கொண்டு நின்றாள் அம்மா.

 

3.

ஆழிநங்கை இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பிபிஆரின் வீட்டிற்கு தூதுவளை இலை கேட்டு வந்தாள். இப்போது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள். அம்மாதான் இலைகளை கொய்து அவளுக்குக் கொடுத்தாள். கொடுக்கும்போது ஏதாவது வாசனை வருகிறதா என்பதை முகர்ந்துபார்க்கும் முனைப்புடன் அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். பிபிஆர் தள்ளி நின்றுகொண்டான்.

 

“யக்கா என்ன நீங்களும் மூக்கை உறிஞ்சிக்கிட்டு இருக்கிய, ஓங்களுக்கும் தடுமன் பிடிச்சிக்கிடுச்சா”  ஆழிநங்கை அம்மாவிடம் கேட்டபோது அம்மா அதெல்லாம் ஒன்றுமில்லை எனச்சொல்லிவிட்டு வளவுக்குள் போய்விட்டாள். பிபிஆர் ஆழிநங்கையின் அருகே வந்தான். அவனுக்கு இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

 

“ஆழி, அதென்ன ஒங்ககிட்ட வந்தவுடனே ஒரு வாசனை வருது?”  படாரென்று கேட்டுவிட்டான். அவளது முகத்தில் எவ்வித மாற்றமுமில்லை.  

 

“இதக்கேக்க இத்தன வருசமா பழனி?”  அப்போது அவளது முகத்தில் மெதுவாக ஒருவித சோகம் படர்வதை கவனித்தான். 

 

“இல்ல நேத்து மீன் கவுச்சிக்கு எடயிலயும் அந்த வாசம் வந்துச்சு அதாங் கேட்டேன்” 

 

“என்னியப் பாக்க ஆலமரத்தடியில ரெண்டு வருசமா தெனமும் நின்னியே அப்ப கேட்டிருக்கலாமுல்ல?” சொன்னவள் அவனருகே வந்து சடாரென்று அவனை இழுத்தணைத்து, பின்னகர்ந்து வேகமாக வாசலுக்கு சென்று தெருவில் இறங்கி போய்விட்டாள். அவன் நிலைகுலைந்து அருகிலிருக்கும் வேப்பமரத்தில் சாய்ந்து நின்றான். நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. அந்த மரத்திலிருந்து இரண்டு முறை சத்தமாக கத்தியது கொண்டலாத்தி குருவியொன்று.

 

அன்று முதல் அவனுக்கு எவ்வித வாசனையும் பிடிபடுவதேயில்லை. 

 

மேலும் சில சிறுகதைகள்

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால்...

Read More

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...

Read More

1 thought on “கொண்டலாத்தி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top