சித்திரைப்பூ

சித்திரைப்பூ

watercolor, eye, look-7993918.jpg

 

1.

இப்படி ஒரு விடியலிருக்கும் என்று சித்திரைப்பூ நினைத்துப்பார்க்கவில்லை. அதிகாலை ஐந்து முப்பதுக்கு மொபைல் அலாரம் அடித்தபோது எழுந்தவள் மொபைல் டேட்டாவை உயிர்ப்பித்ததும் முகநூலுக்குள் நுழைந்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம். இன்றும் அப்படித்தான் நுழைந்தாள். அங்கே பகிரப்பட்டிருந்த ஓர் அறிக்கை அவளை உலுக்கிவிட்டது. சடாரென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள் முழுவதுமாக அந்தப் பதிவை வாசிக்கத் துவங்கினாள்.

 

“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவெனில் பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்த கொடூரம் இனியும் தொடரக்கூடாது என்பதற்கான பதிவு இது. அப்போது ஆறாம் வகுப்புக்கென என் ஊரிலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவிலிருகும் டவுன் பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். ஆறாம் வகுப்பு பிரிவு பி என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத வடுக்களை தந்துவிடும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. என் தமிழாசிரியர் ராம்குமார் என்னிடம் தன் பாலியல் சீண்டல்களை ஆரம்பித்தார். வெளியில் சொன்னால் என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அந்த பாலியல் தொல்லையால் நானடைந்த மன உளைச்சல் என் படிப்பையும் மனதையும் வெகுவாக பாதித்தது. இன்று அவருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்திருக்கிறார்கள். இனியும் நான் பேசாமல் இருந்தால் என் மனதை சிதைத்ததைப் போல இன்னும் பலரையும் அவர் சிதைக்கக்கூடும். வெளியில் சொல்ல முடியாத பெரும் பாரத்துடன் இத்தனை வருடங்கள் தவித்திருந்தேன். இனியும் அப்படி இருத்தல் கூடாது என்பதால் இந்தப் பதிவு, அவருக்கான தண்டனையை அவர் அடைந்தே தீர வேண்டும் என்பதே என் நோக்கம். #மீடூ #தேவைநீதி” 

 

அந்தப் பதிவின் கீழ் பலர் ராம்குமாருக்கு தண்டனை வேண்டும் எனப் பின்னூட்டமிட்டிருந்தார்கள். முப்பத்து ஏழு பேர் பதிவைப் பகிர்ந்திருந்தார்கள். அந்தப் பதிவிலும் சிலர் ஹாஹா எனும் எமோஜி பொம்மையை அழுத்தியிருந்தார்கள்.

 

மதுமிதாவின் பதிவை வாசித்து முடித்ததும் சித்திரைப்பூவின் உடல் அதிர ஆரம்பித்தது. இதயம் வேகமாக அடித்தது. மதுமிதாவிற்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது தந்த அதிர்வைவிட அதில் அவள் குறிப்பிட்டிருந்த ராம்குமாரின் பெயர் தந்த அதிர்வுதான் அதிகமாக இருந்தது. காரணம் ராம்குமார் சித்திரைப்பூவின் பெரியப்பா மகன். அவரா இப்படி? இந்தப் பதிவை அவர் பாத்திருப்பாரா? அவரது மனைவி முத்துச்செல்வி பாத்திருப்பாரா? அவளுக்குள் எழுந்த கேள்விகள் ஒவ்வொன்றும் பெரியதொரு சர்ப்பமென உருவெடுத்து அவளை விழுங்கிவிட துடித்தன.

 

இதை யாரிடம் சொல்வது எப்படிச் சொல்வது என்று யோசித்தவளுக்கு தன்னுடன் பணிபுரியும் காயத்ரி நினைவுக்கு வந்தாள். காயத்ரி சித்திரைப்பூ வேலைக்கு சேர்ந்த ஐ.டி கம்பெனியில் அவளது டீமிற்கு மூன்று மாதம் கழித்து வேலைக்கு சேர்ந்தாள். காயத்ரிக்கு சொந்த ஊர் கும்பகோணம் என்றாலும் அவள் படித்தது புதுதில்லியில். எதற்கும் பயப்படாதவள். அலுவலகத்தில் ஒருமுறை டீம் லீட் சந்திரன் ஏதோ கோபத்தில் திட்டும்போது ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையொன்றை உபயோகித்துவிட்டான். எல்லோர் முன்பும் அவனது கன்னத்தில் அறைந்துவிட்டு தன் இருக்கைக்கு போய் உட்கார்ந்தாள் காயத்ரி. பின்னர் ஹெச்.ஆரிலிருந்து என்கொயரி நடந்தபோதும் தான் செய்ததில் எவ்வித தவறுமில்லை என்று வாதிட்டாள். அப்போதிருந்தே சித்திரைப்பூவுக்கு காயத்ரி என்றாலே தைரியம் என்கிற எண்ணம் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டிருந்தது. காயத்ரியிடம் உடனே பேச வேண்டும் போலிருந்தது. மணி ஆறு. இந்நேரம் தூங்கிக்கொண்டிருப்பாள். அவளுக்கு வாட்சப்பில் கால் மீ அர்ஜெண்ட் என ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

2.

அலுவலகத்துக்கு கிளம்பி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தபோது காயத்திரியிடமிருந்து அழைப்பு வந்தது. விஷயத்தைச் சொன்னவுடன் நேரில் பேசுவோம் பார்த்துக்கொள்ளலாம் என்றாள். பேசிமுடித்தபின் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே பயணித்தாள். மனம் நிலைகொள்ளாமல் இருந்தது. ராம்குமார் அண்ணனுக்கு எட்டு வயதிலும் ஐந்து வயதிலும் இரண்டு மகள்கள். அவர்களுக்கு தன் அப்பாவைப் பற்றிய இந்தக் குற்றச்சாட்டு புரியும் வயதில்லை என்பது சற்று ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும் அண்ணியை நினைத்தாள். அவள் எப்படி இதை எதிர்கொள்வாள்? அண்ணனை செருப்பால் அடித்துவிட்டு அவள் அம்மாவீட்டிற்கு போய்விடுவாளா? ஏதேதோ எண்ணங்கள். யார் அந்த மதுமிதா? அண்ணன் வேலை பார்த்த அதே பள்ளியில்தானே நானும் படித்தேன். மதுமிதா என்று யாரும் நினைவுக்கு வரவில்லையே. அவளது முகநூல் பக்கத்திற்கு சென்று பார்த்தாள். அவள் ஊர் சென்னை, பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா, பிடித்த எழுத்தாளார் சுஜாதா என்பதைத் தாண்டி வேறெதுவும் இல்லை. ஆறாம் வகுப்பில் தான் சேர்ந்த நாள் ஞாபகத்தில் மலர்ந்தது.

 

ராம்குமார் அண்ணனின் தங்கை என்பதால் ஹெச்.எம் புன்னகைத்தபடியே சித்திரைப்பூவிடம் வந்து “நம்ம ராம் சாரோட தங்கச்சியாம்மா நீ…நல்லா படிக்கணும் செரியா?” என்றார். தலையசைத்துவிட்டு வகுப்பு நோக்கி நடந்தாள்.அவளது தெருவிலிருக்கும் காமாட்சியும் அதே பள்ளியில் சேர்ந்திருந்தாள். இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்கூடத்திற்கு போய் வருவார்கள். காமாட்சிதான் வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவி. அவளது கையெழுத்து அழகாக இருக்கும். காமாட்சியைப் போல நன்றாக படித்து முதல் ரேங்க் எடுத்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தும் அவளால் முதல் ரேங்க் எடுக்கவே முடியவில்லை. பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வரும் வழியில் கோயிலொன்று இருந்தது. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அதன் தெப்பக்குள படிக்கட்டில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தக் குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரைப்பூவிற்கும் அல்லிப்பூவிற்கும் காமாட்சி பெரும் ரசிகையாக இருந்தாள். அவள் அதற்கு செல்லமாக பெயரும் வைத்திருந்தாள். சித்திரைப்பூவும் காமாட்சியும் அங்கு வந்தவுடன் தாமரைகளும் அல்லிகளும் முகம் மலர்ந்து தலைசாய்த்தாடுவது போலிருக்கும். பள்ளியிலிருந்து வரும் வழியில் வாங்கிவந்த சிறுநெல்லிக்காய்களை உப்புடன் சேர்த்து கடித்துத் தின்பார்கள். அந்த தெப்பக்குளத்தின் படிகள் அவர்கள் வருவதற்காகவே காத்திருக்கும்.

 

திடீரென்று ஒரு நாள் காமாட்சி அந்த ஊரைவிட்டே போனாள். அவள் அப்பா கோயமுத்தூரில் புதிய தொழில் ஆரம்பித்திருப்பதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.சித்திரைப்பூவுக்கு காமாட்சியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது ஆனால் அவள் போன பின்னர் நாட்கள் வேகமாக நகரத்துவங்கியிருந்தன. காமாட்சியுடன் சேர்ந்து ரசித்த தெப்பக்குளத்தின் மலர்களை அவள் இல்லாமல் பார்ப்பதற்கு சித்திரைப்பூவுக்கு பிடிக்கவில்லை. கல்லொன்றை எடுத்து அந்த மலர்கள் மீது எறிந்துவிட்டு வீட்டிற்கு போனவள் அதன் பின்னர் அந்தத் தெப்பக்குளத்தின் பக்கமே போகவில்லை.

 

3.

பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அலுவலகத்தின் அருகிலிருக்கும் காபி ஷாப்பில் ஒரு கேப்பச்சினோ ஆர்டர் செய்துவிட்டு காயத்ரிக்காக காத்திருந்தாள். காப்பி வருவதற்கு இரண்டு நிமிடம் முன்னதாக தன் ஆக்டிவாவில் வந்திறங்கினாள் காயத்ரி. சித்திரைப்பூவுக்கு காயத்ரியை பார்த்தவுடனே கொஞ்சம் பதற்றம் நீங்கியது போல் தோன்றியது. உள்ளே நுழைந்த காயத்ரி தனக்கொரு காப்பி சொல்லிவிட்டு சித்திரைப்பூவின் எதிரே அமர்ந்தாள்.

 

“நீ உங்க அண்ணன சந்தேகப்படுறியா?” தன் கண்களை ஊடுருவி பார்த்தபடி அவள் அப்படிக் கேட்டது எதுவோ போலிருந்தது.

 

“நிச்சயமா இல்ல காயூ, அந்தப் பொண்ணு படிச்ச அதே க்ளாஸ்லதான் நானும் படிச்சேன், எங்க அண்ணன் மேல எனக்கு ஒரு பெர்சன்ட்கூட சந்தேகமில்ல”

 

“அப்ப அவ எப்.பில ஏன் அப்படி ஒரு போஸ்ட் போடணும்? பாதிக்கப்படாம ஒருத்தி தைரியமா அப்படி எழுத முன் வருவாளா?”

 

“அதுதான் எனக்கும் புரியல. விஷயம் கைமீறிப் போறத்துக்குள்ள நாம ஏதாவது செய்யணும் காயூ”

 

“முதல்ல அந்த மதுமிதா யாருன்னு கண்டுபிடிக்கணும், நீ அவ ப்ரோபலை நல்லா பார்த்தியா, ஏதாவது இமெயில் ஐடி அல்லது மியூட்சுவல் பெரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?”

 

“இமெயில் இல்ல, இரு யாராவது மியூட்சுவல் பிரண்ட் இருக்காங்களான்னு பாக்குறேன்” கையிலிருந்து கேப்பச்சினோவை மேசை மீது வைத்துவிட்டு தன் மொபைலை எடுத்து முகநூலுக்குள் நுழைந்து தேடினாள்.  எந்த பயனும் இல்லை.

 

“சரி அவ முழுப் பெயரை கண்டு பிடிச்சிட்டாலே அவளை கண்டுபிடிக்கிறது ஈஸியாகிடும்” என்று காயத்ரி சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தாள் சித்திரைப்பூ, “காயு இங்க பாரு” என்றபடி தன் மொபைலில் முகநூலில் வந்திருந்த மற்றொரு பதிவைக் காண்பித்தாள். இன்னுமொருப் பெண் மதுமிதாவைப் போலவே பாலியல் குற்றச்சாட்டை ராம்குமார் மீது வைத்திருந்தாள்.

 

இருவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். சித்திரைப்பூவின் மனம் இறுகியிருந்தது.

 

4.

ராம்குமாரின் உடல் மெல்லியதாய் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகள் நடுங்கியபடியிருந்தன. தன் படுக்கையின் மீது அமர்ந்திருந்தவனின் எதிரே கிடந்த மொபைலில் வரிசையாக அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. நண்பர்கள், தெரியாத எண்கள், என்று வரிசையாக அழைப்புகள். எழுந்து சென்று படுக்கையறையின் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தவன் ஜன்னலருகே நின்றபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். ஜன்னல் கதவைத் திறந்ததும் காற்று முகத்தில் அறைந்தது. பத்து வருடங்களுக்கு முன் நடந்தவை அனைத்தும் ஒவ்வொன்றாய் அவன் முன் தோன்றி மறைந்தன.

 

அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் படித்தது ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. சேர்ந்து பியர் குடிப்பதற்காக நண்பர்கள் ஒரு நாள் இரவு ஒன்றுகூடியிருந்தார்கள். அவனது நண்பன் கண்ணனின் வீட்டில் அன்றிரவு ஆட்டம் பாட்டமாக போய்க்கொண்டிருந்தபோது இரவு பதினோரு மணிக்கு வீட்டின் முன் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டின் கதவைத் தட்டினாள் யுவதியொருத்தி. ராம்குமார்தான் கதவைத் திறந்தான், அவளுக்கு முப்பது வயதிருக்கலாம், மஞ்சள் பூப்போட்ட புடவை அணிந்திருந்தாள். யார் நீங்க என்று கேட்டவனை அலட்சியமாக கடந்து சென்றவள் வரவேற்பறையிலிருந்த சோபாவில் தொம்மென்று அமர்ந்தாள். அவள் கடந்து சென்றபோது அவளது உடலிலிருந்து வெளிப்பட்ட மாம்பழத்தின் வாசனை ராம்குமாரை ஏதோ செய்தது. கண்ணன் அவளைப் பார்த்து “இளச்சுட்ட போல” என்றபடி கண்ணடித்தான். அவளது கையைப் பிடித்து இழுத்தபடியே அருகிலிருந்து அறைக்குள் நுழைந்தான. சற்று நேரம் கழித்து வெளியே வந்த கண்ணனைத் தொடர்ந்து வரவேற்பறையின் தரையில் அமர்ந்து பியர் குடித்துக்கொண்டிருந்த அவனது நண்பர்கள் ஒவ்வொருவராக பக்கத்து அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தனர்.

 

ராம்குமாரின் முறையும் வந்தது.  முதல் முறையாக ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்க்கப்போகிறோம் என்கிற எண்ணம் வந்தவுடன் அவனுக்குள் கிளர்ச்சியும் பயமும் ஒருசேர தோன்றின. அறைக்குள் நுழைந்தவனை பொருட்படுத்தாமல் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அருகே சென்றதும் உடல் வியர்த்துக்கொட்டியது.

 

“இன்னா பஸ்ட் டைமா” கேட்டுவிட்டு சிரித்தாளவள்.  அவள் சிரித்தபோது தெத்துப்பல் தெரிந்தது.  இவனது கையைப் பிடித்திழுத்து அணைக்க முயன்றபோது இதயம் பலமாக அடித்துக்கொண்டது. அடுத்த இருபதாவது நொடியில் அவள் பலமாக சிரிக்கத் துவங்கினாள். அப்போது அவளது தெத்துப்பல் பெருவுருவம் எடுத்து அவனைத் தின்பது போல உடல் துடித்தது. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அந்த அறையைவிட்டு வெளியே ஓடினான். அவளும் விடாமல் வரவேற்பறைவரை வந்து “பொட்ட…சரியான சோப்ளாங்கிடா நீ” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள். அவனது நண்பர்கள் விடியும்வரை அவனைப் பரிகசித்தபடியே இருந்தார்கள்.

 

அன்று அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பின் யாரையுமே பிடிக்காமல் போனது. அவன் பேசுவதே அபூர்வமானது. பள்ளி முடித்து கல்லூரியும் முடிந்தபின்னர் தன் வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தான். அப்போதுதான் முதல் முறையாக ஏழாம் வகுப்புச் சிறுமியொருத்தி அவனது டியூசனில் சேர்ந்தாள். அவள் சிரிக்கும்போது தெரிகின்ற தெத்துப்பல் அதுவரை அவனுக்குள் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மிருகத்தை கண்விழிக்கச் செய்தது. அதன் பின்னர் தெத்துப்பல்லுடன் தான் காண்கின்ற எந்தச் சிறுமியையும் தனக்கு இரையாக்காமல் விட்டதேயில்லை அந்த மிருகம்.

 

குடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை ஜன்னல்வழியே தூர எறிந்துவிட்டு படுக்கையில் கிடந்த மொபைலை எடுத்துப் பார்த்தான். பதிமூன்று மிஸ்டு கால்கள் என்றது மொபைல்த்திரை. அவனது அறைக் கதவு பலமாகத் தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்தவனிடம் தன் மொபைலில் முகநூல் பதிவைக் காண்பித்து சண்டையிட்ட அவனது மனைவி கோபத்தில் அவனைத் தள்ளிவிட்டாள். முதல் தளத்திலிருந்து கீழ்த்தளம் நோக்கி படிக்கட்டில் உருள ஆரம்பித்தான் ராம்குமார்.

 

5.

சித்திரைப்பூவும் காயத்ரியும் காப்பி ஷாப்பிலிருந்து கிளம்பி அலுவலகம் வந்தனர். தன்னிடம் எப்போதும் ப்ரியமாகவே இருக்கும் ராம்குமார் மீது சித்திரைப்பூவுக்கு பரிதாபம் ஏற்பட்டது. இந்நேரம் ராம்குமாருக்கும் முத்துச்செல்விக்கும் விஷயம் தெரிந்திருக்கும், அண்ணி உடைந்துபோயிருப்பாளா அல்லது ராம்குமாரின் சட்டையைப் பிடித்திருப்பாளா என்றெண்ணியபடியே இருந்தாள். ஒருவேளை இந்த முகநூல் பதிவுகள் எல்லாம் நாளை பத்திரிக்கைச் செய்தியாக வந்தால் என்னாகும், அவன் குடும்பம் மட்டும் அல்லாமல் என்னையும் என் குடும்பத்தினர் அனைவரையும் அல்லவா இது பாதிக்கும்? அவளுக்கு வேலை செய்யவே மனமில்லை. டீம் லீடுக்கு  உடம்பு சரியில்லை விடுப்பு எடுத்துக்கொள்கிறேன் என்றொரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். காயத்ரி பார்த்துக்கொள்ளலாம் நீ கலங்காமல் தைரியமாக இரு என்று சொல்லியனுப்பியது கொஞ்சம் மனதுக்கு திடமாக இருந்தது.

 

அலுவலகம் விட்டு வெளியே வந்தவுடன் ஒலா புக் செய்து நேராக பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றாள். சூரியன் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. கடற்கரையில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. ஒன்றிரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு இளம்ஜோடி கடல் பார்த்து அமர்ந்திருந்தனர். கடற்கரை மணலில் இறங்கி கொஞ்சதூரம் கடலோரம் நடந்தவள் யாருமற்ற இடமொன்றில் அமர்ந்தபடி கடலைப் பார்த்தாள். பெரியதாக அலைகள் இல்லாமல் கடல் மெளனித்துக் கிடந்தது. தன் கைப்பைக்குள்ளிருந்து மொபைலை எடுத்தவள் ஜிமெயிலைத் திறந்தாள். அதில் காமாட்சியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலை மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

 

“டியர் சித்திரைப்பூ,

 

உனக்கு என்னை ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை. நாமிருவரும் ஒன்றாக ஆறாம் வகுப்பு படித்தோம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியிலிருக்கும் கோவில் தெப்பக்குளத்தில் அமர்ந்து தாமரையும் அல்லியும் ரசித்திருக்கிறோம். இப்போது நினைவுக்கு வருகிறதா? உன் தோழி காமாட்சிதான். ஊரைவிட்டுப் போனவள் இத்தனை வருடம் கழித்து ஏன் மெயில் அனுப்புகிறாள் என்கிற குழப்பத்தில் இப்போது நீ புருவம் உயர்த்தலாம். என் அப்பாவின் தொழில் காரணமாக ஊரைவிட்டு நாங்கள் போனதாகத்தான் எல்லோரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது நிஜமல்ல சித்திரை. நாம் படித்த பள்ளியில் வேலை பார்த்த உன் அண்ணன்தான் நாங்கள் ஊரைவிட்டே போனதற்கு காரணம். ஒரு நாள் நீ உடம்பு சரியில்லை என்பதால் ஸ்கூலுக்கு வரவில்லை. என் வாழ்வையே திருப்பிப்போட்ட நாள் அதுதான். வீட்டிற்கு போவதற்கு முன் என்னை வந்து ஸ்டாப் ரூமில் பார் என்றார் ராம்குமார். நான் போனது அவரைத் தவிர அந்த அறையில் யாருமில்லை. அன்றுதான் அவன் என்னிடம் தவறாக நடந்துகொண்டான். வெளியே சொன்னால் என்னைக் கொன்றுவிடுவதாக கழுத்தை நெரித்துப்பிடித்தபடி மிரட்டினான். எனக்கு மூச்சு முட்டியது. பயத்தில் அறையின் மூலையில் ஒடுங்கியிருந்தேன். அவன் தேவை தீர்ந்தபின்னர் ஒன்றுமே நடக்காதது போல என்னை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுப்போனான் சித்திரை. அன்றிரவு காய்ச்சல் வந்து அதன் பின்னர் மூன்று நாட்கள் நான் பள்ளிக்கூடமே வரவில்லை. நீ என் வீட்டிற்கு வந்து பார்த்துச் சென்றாய். அடுத்த நாள் காய்ச்சல் சரியானதும் அம்மா ஸ்கூலுக்கு போ என்றபோது அம்மாவிடம் இதைப் பற்றி சொல்லிவிட்டேன். அம்மா அவனை எல்லோர் முன்னாலும் செருப்பால் அடிப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். அப்படி எதுவுமே நடக்கவில்லை. அப்பாவிடம் அம்மா சண்டைபோடும் சத்தம் மட்டும் அவர்களது அறைக்குள்ளிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் மூன்றாவது நாளில் அந்த ஊரைவிட்டே நாங்கள் போய்விட்டோம். அன்று ராம்குமார் என்னிடம் தவறாக நடந்ததை கெட்டகனவாக நினைத்து மறந்துவிடு என்று அடிக்கடி அம்மா சொன்னார். நானும் கொஞ்சம் கொஞ்சமாக அதை மறந்துவிட்டு என் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். போனவருடம் தான் எம்பிபிஸ் முடித்தேன். நேற்று என்னிடம் வந்த பேஷண்ட் ஒருவரிடம் பெயரைக் கேட்டபோது சித்திரைப்பூ என்றார். உடனே உன் ஞாபகம் வந்து முகநூலில் உன் ப்ரோபைலை கண்டுபிடித்து உன் மின்னஞ்சலை எடுத்து இப்போது உனக்கு இந்த மெயிலை அனுப்புகிறேன். ஏனோ இன்று உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லத் தோனறியது. பல வருடங்கள் ரகசியமாய் மனதில் சுமந்தலைந்த பாறையொன்று என் மனதிலிருந்து உருண்டு வெளியேறியதுபோல மனசு லேசாய் இருக்கிறது சித்திரை. காலம் அனுமதித்தால் நாம் சந்திப்போம்.

 

உன் தோழி,

ஆறாம் வகுப்பு காமாட்சி.

 

மின்னஞ்சலை வாசித்து முடித்தவுடன் கடலைப் பார்த்தாள். அலைகள் ஓயாமல்  கரையை அறைந்து கொண்டிருப்பதைப் போலிருந்தது.

 

6.

மதுமிதா, சரஸ்வதி, கோகிலா, ஜோதி என முகநூலில் நான்கு பேக் ஐடிகளை உருவாக்கினாள். அதிகாலை மதுமிதாவாக ஒரு பதிவு, பின் சரஸ்வதி என ஒவ்வொருவரும் ராம்குமாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உண்டான கதையை பதிவிட்டுவிட்டு காயத்ரியை காப்பி ஷாப்பில் சந்தித்தாள். இப்போது கடலின் முன் உட்கார்ந்திருக்கும்போது மொபைல் சிணுங்கியது. ராம்குமாரின் மனைவி பதற்றமாக பேசினாள்.

 

“உங்க அண்ணன் மாடிப்படில தவறி விழுந்து அடிபட்டிருச்சு, ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்” என்றாள் அண்ணி. சித்திரைப்பூ எவ்வித பதற்றமுமின்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

“ம் சரியண்ணி, நீங்க பயப்படாதீங்க நான் இப்ப சென்னைல இல்ல, ஆபீஸ் விஷயமா தில்லிக்கு வந்திருக்கேன். அண்ணனுக்கு ஒண்ணும் ஆவாது நீங்க தைரியமா இருங்க” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு கடற்கரையை விட்டு வெளியேறி மெயின் ரோட்டில் ஆட்டோவொன்றைப் பிடித்து தன் ஹாஸ்டலுக்குச் சென்றாள்.

 

 

7.

 

மூன்று வாரங்கள் கழித்து அண்ணிக்கு போன் செய்து மருத்துவமனையின் முகவரி வாங்கி வேளச்சேரியிலிருக்கும் அந்த மருத்துவமனைக்குச் சென்றாள்.

ரிஷப்ஷனில் விசாரித்து இரண்டாவது மாடியிலிருக்கும் அறைக்குச் சென்றவள் படுக்கையில் கண்கள் மூடி படுத்திருக்கும் ராம்குமாரைக் கண்டாள். இவளைப் பார்த்ததும் அருகில் வந்த அண்ணி “தலையில அடிபட்டதுல நரம்பு பாதிச்சிருக்கு, இனி ஒங்க அண்ணனுக்கு கழுத்துக்குக்கு கீழ உடம்பு வேல செய்யாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருமா… உயிர்மட்டுந்தான் இருக்கும் சித்திரை…உசிரோட இருந்தும் இனி ஒங்க அண்ணன் பொணம்” அழுதபடியே சொன்னவுடன் அவளது கைகளை பற்றிக்கொண்டு ஆறுதல் படுத்தினாள் சித்திரைப்பூ. “கவலைப் படாதீங்க அண்ணி, நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்” என்றவள் டாக்டரின் அறைக்கு நுழைவதற்கு முன் கதவின் வெளிப்புறமிருந்த டாக்டரின் பெயர்ப்பலகையில் ‘டாக்டர் காமாட்சி’ என்கிற பெயரைக் கண்டு விக்கித்து நின்றாள்.

 

பின்னாலிருந்து  “ஹை சித்தி” என்று ஓடிவந்து சித்திரைப்பூவின் கால்களைக் கட்டிக்கொண்டு சிரித்தாள் ராம்குமாரின் எட்டுவயது மகள், அப்போதுதான் முளைக்கத் துவங்கியிருந்த தெத்துப்பல்லுடன்.

 

 

(முற்றும்)

மேலும் சில சிறுகதைகள்

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால்...

Read More

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top