அறல்

அறல்

1.

கடுமையான குளிர். இவ்வளவு குளிரை இதற்கு முன் நான் உணர்ந்ததேயில்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாய் விறைத்துக்கொண்டிருந்தது. இருள் சூழந்திருக்கும் இந்த அறைக்குள் நான் எப்படி வந்திருப்பேன் என்பதும் எனக்கு ஞாபகமில்லை. மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தேன். சதுர வடிவ தொட்டிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டதைப் போன்றதொரு உணர்வு. கனவு போலிருக்கிறது. ஏன் இந்த அறை இவ்வளவு அடர்த்தியான இருளால் சூழப்பட்டிருக்கிறது? ஏனிந்த பேரமைதி? விடை தெரியாத கேள்விகளால் குழம்பிப்போயிருந்த கணம் யாரோ முதுகிற்கு பின்னாலிருந்து அழைப்பது போலிருந்தது. அந்தக் குரல் சன்னமாகவே காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்க முடியாதபடி உடல் இறுகியிருந்தது. அசைய முடியவில்லை. இடவலமாகவும் திரும்பமுடியவில்லை. இவ்வளவு இறுக்கத்தை வாழ்நாளில் இதற்கு முன் உணர்ந்ததுமில்லை. அந்தகாரத்தை கிழித்துக்கொண்டு அந்தக் குரல் மட்டும் செவிகளை உரசிச் சென்றது. உற்று கவனித்தேன்

“உன்னை வரவேற்கிறேன், என் பெயர் ஜெனி, இங்குதான் நானும் வசிக்கிறேன், உன் பெயர் என்ன?”

அந்தக் குரலின் வசீகரம் இந்தக் கடும் குளிரிலும் மனதிற்கு இதமாக இருந்தது. அல்லது இதமாக இருப்பது போலத் தோன்றியது. அது ஒரு பெண் குரல் என்பதாலா? இப்போது எனக்குள் மேலுமொரு கேள்வி எழுந்தது “நான் ஆணா பெண்ணா திருநங்கையா?”  எந்தப் பாலினம் நான் என்பதைக் கூட மறந்துபோனேனா, என் உடலின் அங்கங்களை தொட்டு ஸ்பரிசித்தால்தானே நான் எந்தப் பாலினமென்பது என்னால் உணரமுடியும்? ஆனால் அது எப்படி சாத்தியம்? என் கைகளும் அல்லவா மரத்துப்போயிருக்கிறது. எனக்கு மார்பகங்கள் இருக்கிறதா என்பதை பார்த்துவிடலாம் என்றால் இந்த இருள் அதற்கும் வாய்ப்பளிக்கவில்லையே.  அந்தக் குரலின் வசீகரம் எனக்குப் பிடித்திறது என்பதால் நான் ஆணோ அல்லது திருநங்கையோ என்று முடிவு செய்யலாமா? ஏன் ஒரு பெண்ணிற்கு மற்றொரு பெண்ணின் குரல் பிடிப்பதில்லயா? எதிர்பாலினத்திற்கு மட்டும்தான் பிடிக்கவேண்டுமா என்ன?

“என்ன தீவிர சிந்தனை போலிருக்கிறது?” மீண்டும் ஜெனி.

இவளும் ஏன் இந்த இருள் சூழ்ந்த அறையில் இருக்கிறாள்? வசிக்கிறேன் என்று சொன்னாளே, இங்கே எப்படி வசிக்க முடியும்? இது அனைத்தும் கனவா? என்னால் இப்போது என்னைக் கிள்ளிப்பார்க்கவும் முடியாத சூழலில் அல்லவா இருக்கிறேன். 

“என்… பெயர்… அறல்”  ஒவ்வொரு சொல்லும் இடைவெளிவிட்டு வந்து விழுந்தது. 

“அருளா?”  

“அருள் இல்லை அறல்”

“இப்படியொரு பெயரை நான் கேள்வி பட்டதே இல்லை” சொல்லிவிட்டு இந்த இருளுக்கு வலித்துவிடாதபடி சிரித்தாள் ஜெனி.

“அறல் என்பது தமிழ்ப்பெயர்” வார்த்தைகள் சற்று தடுமாறி வெளிக்குதித்தன.

“நல்ல பெயர்தான், இங்கே இன்னொருவரும் வசிக்கிறார்” என்றாள்.

இந்த இருளுக்குள் இன்னொருவரா? ஜெனியிடம் பேச்சை வளர்க்கலாமா அல்லது மெளனமாக இருந்துவிடலாமா என யோசித்தேன். அவள் குரலை வைத்துப் பார்க்கும் போது அவள் வயது கொஞ்சமாகத்தான் இருக்கவேண்டும். 

“யார் அந்த இன்னொருவர்?”  தயக்கத்துடன் உரையாடலைத் தொடர்ந்தேன்.

“அவள் பெயர் மதுக்குட்டி, இதோ என்னருகே நல்ல உறக்கத்திலிருக்கிறாள்”

“ம் சரி, நாம் எங்கே இருக்கிறோம்? ஏன் இருட்டாக இருக்கிறது? ஏனிந்த கடும்குளிர்?” தெரிந்துகொள்ளும் ஆவலில் வரிசையாக கேள்விகளை அடுக்கினேன். அவளிடமிருந்து உடனே பதில் இல்லை. ஒரு நீண்ட மெளனத்திற்கு பின் அவளது பெருமூச்சின் சப்தம் கேட்டது. 

“உன் எல்லா கேள்விகளுக்குமான விடை நாளை விடியும்போது தெரியும் அறல்.. அதுவரை காத்திரு, எனக்கு உறக்கம் வருகிறது, முடிந்தால் காலையில் சந்திப்போம் குட்நைட்” சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள். 

அதென்ன ‘முடிந்தால் சந்திப்போம்’ என்கிறாள், என் முதுகிற்கு பின்னால் இருப்பவளால் என்னைச் சந்திக்க முடியாதா? அவளிடமிருந்து அதற்குப் பின் எவ்விதச் சலனமுமில்லை. உறங்கியிருப்பாள். இந்தக் குளிரில் எப்படி உறங்க முடிகிறது அவர்களால்? என்னுடலுக்கும் இந்தக் குளிர் பழகிவிடுமா? அவள் என்னிடம் பேசும்போது மனது எடையற்றுப்போனதை கவனித்தேன். உடல்தான் கனம் கூடியிருந்தது. 

சரி, நான் யார்? எதனால் இங்கிருக்கிறேன். கண்கள் மூடி மீண்டும் தீவிரமாக சிந்திக்கத் துவங்கினேன். கண்கள் சொருக நானும் உறங்கிப்போனேன்.

2.

வெளிச்சம் முகத்தில் படர ஆரம்பித்தபோதுதான் மெல்ல கண்விழித்தேன். எனக்கு முன்பு வரிசையாக சதுர வடிவ தொட்டிகள்  இருந்தன. சிலவற்றில் யாருமில்லை. சில தொட்டிகளில் அசைவற்று என்னைப்போலவே சிலர் இருந்தனர். முகத்தில் அறைந்த வெளிச்சம் கணநேரத்தில் மறைந்துபோனது. அந்தச் சில நொடிகளில்தான் எனக்கு முன்பிருந்த வரிசையை கவனித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரியத் துவங்கியது. இனி இந்த இடத்தைவிட்டு பழைய வாழ்விற்குள் நுழைவது சாத்தியமில்லை. ஓடித்திரிந்த என் முந்தைய வாழ்வின் சித்திரம் என் மனதெங்கும் விரிந்தது. ஒருவேளை மீண்டும் அந்த வாழ்விற்கு மாறினாலும் அவ்வாழ்வு நிரந்தரமானதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். இந்த இருள்தான் மிச்சமிருக்கும் என் வாழ்வுக்கான இடம் என்பது புரியத்துவங்கியபோது சுதந்திரமானதொரு வாழ்வை வாழ்ந்தபோது அது கொடுத்த மகிழ்ச்சியை நிரந்தரமானதென்று எவ்வளவு தவறாக நினைத்திருக்கிறேன் என்று நினைத்து வருந்தினேன். மனது வலித்தது. அந்த வாழ்வுக்குள் சென்றுவிட இயலாதா என மனம் ஏங்கித்தவிக்க ஆரம்பித்தபோதுதான் ஜெனியின் குரல் கேட்டது.

“குட்மார்னிங் நல்ல உறக்கமா?” 

“ம் குட்மார்னிங்..எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை.. உடலின் அசதியில் அப்படியே உறங்கியிருப்பேன்”  அவள் குரல் கேட்டது மனதில் வலியை லேசாக்கியது போலிருந்தது.

“முதல் நாள் இங்கே வந்தபோது எனக்கும் அப்படித்தானிருந்தது. இங்கே வந்து ஒருவாரம் ஆகிவிட்டதால் இப்போது அசதி இல்லை. குளிருக்கும் பழகிவிட்டது உடல்”  நேற்றை விட இன்று அவள் உற்சாகமாகப் பேசியது போலிருந்தது. 

“எனக்கு குட்மார்னிங் கிடையாதா?”  மற்றொரு பெண் குரல். மதுக்குட்டியாகத்தானிருக்க வேண்டும்.

“குட்மார்னிங் மதுக்குட்டி, என் பெயர் அறல்”  

“ஓ தெரியுமே ஜெனி சொன்னாள். நீங்கள் விழிக்கும்வரை உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” மதுக்குட்டி ஜெனியைவிட இளமையானவளாக இருக்க வேண்டும். அவள் பேச்சில் ஒருவித துள்ளல் தன்மை இருந்தது.  அன்று முழுவதும் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் என் முதுகைப்பார்த்து பேசினார்கள். அதாவது இருளில் என் முதுகு இருக்கும் இடம் நோக்கி. நான் அசைவற்று அவர்களது குரல்களுக்கு பதிலிட்டுக்கொண்டிருந்தேன்.  அவர்கள் இருவரிடமும் பேசினாலும் மனது மெல்ல மெல்ல ஜெனியின் மீதிருந்த ஈர்ப்பு குறைந்து மதுக்குட்டியின் மீது மையல் கொள்ள ஆரம்பித்தது. ஜெனியின் கேள்விகளுக்கு அளவாகவும் மதுக்குட்டியின் கேள்விகளுக்கு அதிகமாகவும் என்னிலிருந்து பதில்கள் வந்து விழுந்தன.

“இங்கிருந்து தப்பிச் செல்ல முடியுமா?”  எனது இந்தக் கேள்விக்கு இருவரிடமும் பதிலில்லை. 

மதுக்குட்டியின் விசும்பல் சத்தம் கேட்டது. ஜெனி அவளை தேற்றுவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். தப்பிச் செல்லல் அவ்வளவு எளிதில்லை என்பது புரியத் துவங்கியது. ஆனால் என் வாழ்வில் முடியாது என்பதே இல்லை. எப்படியும் தப்பிக்க வழி பிறக்கும் என்று என் இறுகிய உடலைப் போலவே மனதையும் உறுதியாக வைத்துக்கொள்ளத் துவங்கினேன். இப்போது மதுக்குட்டியின் விசும்பல் நின்றிருந்தது. எப்படி தப்பிப்பது என யோசிக்கும்போது ஜெனியின் குரல் கேட்டது:

“தப்பித்தல் பற்றி பேசினாலே கலங்கிவிடுகிறாள் மது” 

“ஏன் மது உனக்கு உன் மீது நம்பிக்கை இல்லையா”  மதுக்குட்டியை மது என்றது ஒருவித கிறக்கத்தை தந்தது. அவள் மீது அதற்குள் எனக்கு உரிமை வந்துவிட்டதா?

“என் அருகிலிருக்கும் தொட்டிகளில் இருந்தவர்கள் எல்லோரின் மரணமும் என் கண் முன் தான் நிகழ்ந்தது. நாமும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம் இதில் தப்பித்தலை பற்றி எங்கிருந்து யோசிப்பது?”  

அவள் கேட்டதில் உண்மையிருந்தாலும், மற்றவர்களுக்கு நிகழ்ந்தது தனக்கும் நிகழ்ந்துவிடும் என்று நம்புவது முட்டாள்தனமாக எனக்குத் தோன்றியது.  மதுக்குட்டியை தேற்றும் விதமாக நானும் ஜெனியும் நம்பிக்கை வார்த்தைகளை அவள் மீது தெளித்தோம். சற்று நேரத்தில் அவளுக்குள்ளும் நம்பிக்கை பிறந்தது.

“நீங்கள் சொல்வதும் சரிதான், நாம் எதுவாக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் ஆகவேண்டுமே தவிர பிறர் நிலையைக் கண்டு நமக்கும் அது நேர்ந்துவிடுமோ என அச்சம் கொள்வதை தவிர்க்க வேண்டும்”  மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் அவள் பேசியது மனதிற்கு நிறைவாக இருந்தது.

“ஜெனி, இன்று காலை நம் மீது விழுந்த வெளிச்சம் எத்தனை நொடிகள் நீடித்தது என்பதை கவனித்தாயா?” எனக்குள்  திட்டமொன்று உருப்பெற ஆரம்பித்தது.

“கவனித்தேன் அறல். இன்று பத்து நொடிகள் இருக்கும், நேற்றும் அதற்கு முந்தைய நாளும் கூட பத்து அல்லது பன்னிரண்டு நொடிகள்தான் இருந்ததாக ஞாபகம்”

“பத்து நொடிகளில் நாம் தப்பிப்பது எளிதல்ல, நம்மால் அசையவும் இயலவில்லை. இந்த உடலின் இறுக்கம் தளர்ந்தால்தான் நாம் தப்பிக்க முடியும். உடலைக் கட்டிப்போட்டது போல் இருக்கிறது. நமக்குத் தேவை ஐயாயிரத்து ஐநூறு நொடிகள், அதாவது தொண்ணூறு நிமிடங்கள்”

“அது சாத்தியமில்லை அறல், பத்து நொடிக்கும் ஐயாயிரத்திற்கும் வெகு தூரமல்லவா?”  ஜெனியில் குரலில் நம்பிக்கையில்லை.

“நான் யோசிக்க வேண்டும் ஜெனி, ஆனால் ஒன்று நிச்சயம் என என் உள்மனம் சொல்கிறது. அது நம் தப்பித்தல்” என் குரலின் உறுதி அவர்களுக்கு நம்பிக்கையை தந்திருக்க வேண்டும். 

“சரி நாங்கள் காத்திருக்கிறோம் அறல், நீ யோசித்து ஒரு வழியைச் சொல்” சொல்லிவிட்டு எனக்கான அமைதியை தந்தார்கள்.

நான் ஈர்ப்பு விதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். நீ எதுவாகவேண்டும் என நினைக்கிறாயோ அதுவாகிறாய் என்ற வாசகத்தின் நீட்சிதான் ஈர்ப்பு விதி. கண்கள் மூடி இந்த இருளுக்குள்ளிருந்து தப்பித்து என் பழைய வாழ்விற்குள் நுழைவதாக மீண்டும் மீண்டும் என் மனத்திரையில் நினைக்கத் துவங்கினேன். அன்றிரவு முழுவதும் உறக்கமின்றி நானும் ஜெனி, மதுக்குட்டியும் அந்தகாரத்திலிருந்து வெளிச்சத்திற்குள் ஊடுருவி விடுவதாக எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்த கனத்த இருளை விட உறுதியாக இருந்தது என் மனதெங்கும் வியாபித்திருந்த தப்பித்தலெனும் வேட்கை.

3.

மறு நாள் கண்விழித்தபோது உடலின் இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது. என்னால் உடலை கொஞ்சமாய் அசைக்கவும் முடிந்தது. கதவிடுக்கின் வழியே வெளிச்சம் பாய்ந்து கொண்டிருந்ததால் உடல் திருப்பி பின்னாலிருக்கும் ஜெனியையும் மதுக்குட்டியையும் பார்க்க முடிந்தது. இருவரும் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள், ஜெனியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். மதுக்குட்டி கண்களால் எனை முத்தமிட்டுச் சிரித்தாள்.

“நாம் தப்பித்துவிடலாம் எங்கள் உடலின் இறுக்கம் தளர்கிறது அறல்”  ஆனந்தக் கண்ணீருடனே சொன்னாள் ஜெனி.

என்னுடலின் இறுக்கம் முழுவதுமாக தளர்ந்தபோது ஓடிச்சென்று ஜெனியையும் மதுக்குட்டியையும் பற்றிக்கொண்டு கதவிடுக்கின் வழியே வெளியே குதித்தேன்.

அந்த சிமெண்ட் தரையில் குதித்தவுடன் அருகிலிருக்கும் பெரும் சுவர் தென்பட்டது. அதன் வழியே மிகப்பெரியதொரு குழாய் அவ்வீட்டின் வெளிப்புறத்திற்கு சென்றது.

“சீ இதென்ன இப்படி நாற்றமெடுக்கிறது” நாசியைப் பொத்திக்கொண்டே என்னையும் ஜெனியையும் பின் தொடர்ந்தாள் மதுக்குட்டி. மூவரும் அந்தக் குழாயின் வழியே வெளியேறி வாடிய நிலையிலிருந்த பூச்செடியொன்றின் அடிப்பாகத்தில் வந்து விழுந்தோம். 

4.

பூச்செடி தலையுயர்த்திப் பார்த்தது. மிதமான காற்றடித்ததில் லேசாய் அசைந்தபடியே நின்றது. “நீங்கள் யார்?” என எங்களிடம் கேட்டது பூச்செடி.

“குளிர்சாதனப்பெட்டியின் அதி குளிரூட்டிக் கதவுகளின் பின்னால் கவிந்திருக்கும் ஆழ்ந்த இருளில் அமர்ந்திருந்த ஐஸ் கட்டிகள் நாங்கள். சில இரவுகளுக்கு முன் நீரிலிருந்து ஐஸ் துண்டங்களாக மாறினோம். என் பின்புறம் அமர்ந்திருந்தவளின் பெயர் ஜெனி.அவளருகே அமர்ந்திருந்தவள் மதுக்குட்டி.

நாங்கள் வசித்த குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிரூட்டிக் கதவை வீட்டின் உரிமையாளர் கவனக்குறைவால் சரியாக மூடாமல் போனதால்  ஐஸ்கட்டி உடலைவிட்டு தப்பித்து எங்கள் நீர் உடலுக்குள் மீண்டும் நுழைந்து உனது வேருக்கு எங்கள் உயிரைக் கொடுக்கப் போகிறோம்” என்றேன் நான்.

“அறல், இந்தப் பூச்செடியில் மூன்று மலர்களாக நாம் மலர்வோம் அல்லவா?” என்றாள் மதுக்குட்டி.

“இல்லை.நாம் மூவரும் ஒரே மலராகத்தான் மலர்வோம்” என்றபடியே மதுக்குட்டியையும் ஜெனியையும் அணைத்துக்கொண்டே ஈரம் படர்ந்த மண்ணுக்குள் புதைந்துபோனேன்.

மேலும் சில சிறுகதைகள்

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால்...

Read More

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top