கதவுகள்

கதவுகள்

 

 

1.

இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால் சாத்தியமா என இருநிமிடம் யோசித்தாள் செளமியா. தொடர்ச்சியான அலைபேசி உபயோகத்தால் ஏற்படும் தூக்கமின்மையும், எதற்கென்றே தெரியாமல் படுக்கையில் படுத்துக்கொண்டே ஸ்கோரல் செய்தபடி சமூக ஊடகங்களில் உலாவுவதும் அவளுக்குள் ஒருவித அயர்ச்சியைத் தந்திருந்தது. ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பான காலத்தில் தானொரு தீவிர வாசிப்புக் கொண்ட பெண்ணாக இருந்ததும் அந்த வாசிப்பின் மூலம் வாழ்வின் மீதான புரிதலும் நேசமும் ஸ்மார்ட் போன் தன் வாழ்வில் நுழைந்ததற்கு பின் தொலைந்துவிட்டதே என்கிற ஏக்கம் தினம் தினம் அவளைத் தின்று தீர்த்தது. இருபத்தி நான்கு வயதிலும் குழந்தைமை மாறாத தன் துடுக்குப் பேச்சினால் தனக்குக் கிடைத்த நண்பர்கள் அனைவரும் ஸ்மார்ட் போனின் வருகைக்குப் பின்னால் அதனுள்ளே புதைந்துபோன தன் சுயத்தால் பிரிந்துவிட்டனரோ என்றும் தோன்றியது.

 

அதுவும் ஒருவகையில் உண்மைதான். எப்போதும் போனும் கையுமாக இருந்ததில் முதலில் அவள் இழந்தது சொற்களை. முன்பெல்லாம் யாருக்காவது பிறந்தநாள் என்றால் போன் செய்து வாழ்த்துவது இப்போது வாட்சப்பில் ஒரு ஸ்டிக்கர் அனுப்புவதுடன் நின்றுபோனது. பேச நினைத்தாலும் வார்த்தைகள் வருவதில்லை. ஒரு மெசேஜில் வாழ்த்து முடிந்துவிடுகிறது.  தான் எதையெல்லாம் இழந்தேன் என்கிற பட்டியலை மனதிற்குள் போட்டுப் பார்த்தாள். 1. சொற்கள் 2. புன்னகை 3. தூக்கம் 4. சுறுசுறுப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போனது. இதற்கு என்ன செய்யலாம் எப்படி இந்ந மொபைல் பூதத்திடமிருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தபோதுதான் ஒருவாரம் மொபைலுக்கு விடுப்புக் கொடுக்கலாம் எனத் தோன்றியது. அவள் முகநூலில் பதிவிட்டவுடன் சில நிமிடங்களிலேயே ஐம்பதிற்கும் அதிகமான லைக்குகள் வந்தன. இந்த மொபைல் பூதத்திடம் சிக்காதவர்களே இல்லை போல என நினைத்துச் சிரித்தவள் லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு தன் தோள்பையை எடுத்துக்கொண்டு தன் விடுதிக்கு கிளம்பினாள்.

 

 

செளமியா சென்னையிலொரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். சொந்த ஊர் திருச்சி. சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வேளச்சேரியில் ஒரு பி.ஜியில் தங்கியிருப்பவள். அவளது அறைத் தோழி சரண்யாவிடம் அடுத்த ஏழு நாட்கள் மொபைல் போன் உபயோகிப்பதில்லை என்கிற தன் முடிவைச் சொன்னதும் அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.  இதெல்லாம் நடக்கிற காரியமா என்றபடியே ஹெட்போனை மாட்டிக்கொண்டு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்க்கத் துவங்கினாள். செளமியாவுக்கும் இது கடினம் என்றே தோன்றியது.  இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை. மொபைலையும் ஸ்விட்ச் ஆப் செய்தாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு எங்காவது தனியாக பயணிக்கலாம் எனத் தோன்றியவுடனே லேப்டாப்பை திறந்து புக்கிங்.காமிற்குள் நுழைந்தாள். வெகு நாட்களாக போக நினைத்திருந்த வயநாடு ஞாபகத்தில் வந்தவுடன் ‘வயநாடு’ எனத் தேடினாள். மொத்தம் முண்ணுற்றி இருப்பத்தி ஆறு தங்குமிடங்களை தேடுதல் முடிவாக காட்டியது புக்கிங்.காம். அதில் மலைகிராமமான மெப்பாடி எனும் ஊரின் அழகு வெகுவாக கவர்ந்தது. அங்கிருக்கும் ஓர் விடுதியில் நான்கு நாட்கள் தங்குவதற்காக பதிவுசெய்து தன் கடனட்டை வழியே அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்தாள். பின், கோவையிலிருந்து வயநாடு செல்வதற்காக ஒரு டாக்ஸியும் புக்செய்து,  அதனை பிரிண்டருக்கு அனுப்பி எல்லாவற்றிலும் ஒரு பிரதி எடுத்துவிட்டு மடிக்கணிணியை மூடி வைத்தாள்.

 

தனியே ஓர் பயணம், தனக்குப் பிடித்தமான மலைப்பிரதேசப் பயணம். அதுவும் மொபைல் போன் இல்லாமல் என்று நினைத்தவுடன் மனதெங்கும் பயம் கலந்த ஒருவித உணர்வு மேலெழத் துவங்கியது.  ஆனாலும் முடிவு எடுத்தாகிவிட்டது இனி பின்வாங்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தவள் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் தன் தோள்பையில் அடைத்தாள். எல்லாம் எடுத்தாகிவிட்டதா எனச் சரிபார்த்துவிட்டு நிம்மதியாக உறங்கிப்போனாள். மறுநாள் அதிகாலை எழுந்தவுடன் விமானநிலையத்திற்கு போவதற்கு கேப் புக் செய்யவில்லையே என மொபைலை எடுக்கப் போகும்போதுதான் இன்னும் ஒருவாரத்திற்கு போனை எடுக்க முடியாதே என்கிற எண்ணம் வந்தது. நல்ல உறக்கத்திலிருக்கும் சரண்யாவை எழுப்பி அவளது போனில் கேப் புக் செய்தாள். இரண்டாவது தளத்திலிருந்து இறங்கி கீழ்தளத்திற்கு வந்தவள் வரவேற்பறையில் சிறிது நேரம் காத்திருந்தாள். அங்கிருந்து அந்தத் தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதிகாலைப் பனியினூடாக ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தெரு நாயொன்று விடுதியின் கேட்டை முகர்ந்து பார்த்துவிட்டு சிறுநீர் கழித்துச்சென்றது. பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்ட பைக்கை உருட்டிக்கொண்டே செல்லும் இளைஞனின் தலைமயிர் சிகப்பும் பச்சையும் கலந்த நிறத்திலிருந்தது. என்னடா இது புள்ளீங்கோவிற்கு வந்த சோதனை என்று நினைத்தபடி மெல்லியதாய் புன்னகைத்துக்கொண்டாள். அவளை விமான நிலையம் கூட்டிச் செல்ல வந்து நின்றது வெண்ணிற இன்டிகோ கார். காருக்குள் ஏறியதும் மனனம் செய்திருந்த டிரிப் பின் நம்பரை ட்ரைவரிடம் சொன்னாள். விமான நிலையம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்ததும் முதலில் பூமியின் ஞாபகம்தான் வந்தது. பூமிநாதன் தன் முகநூல் பதிவைப் பாத்திருப்பானா தெரியவில்லையே என்கிற கலக்கம் ஏற்பட்டது. பூமிநாதன் அவளுடன் ஒரே டீமில் பணிபுரிபவன். அவளை விட வயதில் சிறியவன் என்பதால் அக்கா என்று அவன் முதலில் கூப்பிட்டபோது சிரிப்புதான் வந்தது. ஐ.டியில் எல்லோரையும் பெயர் சொல்லி அழைப்பதுதான் வழக்கம். அந்த கார்பரேட் உலகிற்குள் தான் முதல் முதலாக நுழைந்தபோது இருந்த வெள்ளந்தித்தனம் அவனிடமும் இருந்தது கண்டவுடன் அவனைப் பிடித்துவிட்டது. அக்கா என அவன் அழைப்பதும் சொல்லுடா தம்பி என இவள் பதிலிடுவதும் உடனிருந்த மற்ற டீம் மெம்பர்களுக்கு முதலில் விசித்திரமாகவும் பின் பழகியும்விட்டது. அவன் இந்நேரம் இருபது வாட்சப் மெசேஜாவது அனுப்பியிருப்பான். சே அவனிடம் சொல்லாமல் வந்தது தப்பு என்கிற எண்ணம் வந்த மறுகணம், எல்லோரிடமும் எல்லாமும் சொல்லவேண்டியதில்லையே இது என் வாழ்வு என் முடிவுகளை நான் எடுப்பதற்கு ஏன் எல்லோரிடமும் சொல்லிக்க்கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமும் கூடவே தோன்றியதால் பூமியை மறந்துவிட்டு கார்கண்ணாடி வழியே வானத்தைப் பார்த்துக்கொண்டே பயணித்தாள். கார் விமான நிலையத்தில் அவளை இறக்கிவிட்டுச் சென்றது.

 

விமான நிலையத்திற்குள் நுழைய முயல்கையில் காவலுக்கு நின்றவர் விமான டிக்கெட்டையும் ஐ.டியையும் காண்பிக்கச் சொன்னார். கைப்பையில் பிரிண்ட் செய்து வைத்திருந்த டிக்கெட்டையும் ஐ.டியையும் காண்பித்துவிட்டு உள்நுழைந்து போர்டிங் பாஸ் வாங்கியவள் சோதனை முடித்து கேட்டிற்கு வந்தாள். விண்ணில் பறக்கும் விமானப்பறவைகளை பார்த்து ரசிப்பது ஒருவகை இன்பம் எனில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்களைப் பார்ப்பது வேறுவகை இன்பம். அந்த பெரும் கண்ணாடிச் சுவரின் வழியே நின்றிருக்கும் விமானத்தின் அழகை ரசித்தவள், இப்பொழுது போன் கையிலிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தாள். ஒருவகையில் ஸ்மார்ட்போனும் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குதான். தன்னைத் தவிர அங்கே உட்கார்ந்திருக்கும் எவருமே கண்ணாடிச்சுவரின் வழியே உள்விழும் காலைச்சூரியனின் கதிர்களை பார்க்கவில்லை என்பது பெரும் துயரமாக இருந்தது. எல்லோருடைய பார்வையும் மொபைலுக்குள் மட்டும்தானிருந்தது. மொபைல் இல்லாத சிறுமியொருத்தி கையிலோர் பொம்மையை வைத்துக்கொண்டு அதற்கு மட்டுமே புரிகின்ற மொழியில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள். அந்தக் காட்சி அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

 

 

2.

கேரளத்தின் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதும் உடல் ஒரு கணம் சிலிர்த்தடங்கியது. மெப்பாடியில் அவள் முன்பதிவு செய்திருந்த விடுதி மலைமுகட்டிலிருந்தது. ரோட்டிலிருந்து அந்த விடுதிக்கு செல்லும் ஒத்தையடிப்பாதை சீரானதாக இல்லை. ஆனால் அந்தப் பாதைக்கு இருபுறமும் பச்சைப் பசேலென்றிருந்தது. உயர்ந்த மரங்களும் கொடிகளும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.  குளிர்ந்த காற்றை சுவாசித்தபடியே அந்தப் பாதை வழியே மேலே ஏறியதும் விடுதி தென்பட்டது.  அதை விடுதி என்பது தவறு. மலைமுகட்டிலிக்கும் ஒற்றை வீடு என்பதே சரி. அந்த வீட்டின் முன் நின்று அழைப்புமணியை அழுத்தினாள். ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் கதவைத் திறந்தார் வயதான பெண்மணி ஒருவர். அவருக்கு எழுபத்தைந்து வயதிற்கும் மேலிருக்கலாம். பார்ப்பதற்கு இந்தியர் போலில்லை. இவளைப் பார்த்ததும் புன்னகைத்தவர் தன் பெயர் மார்கரெட் என்றபடியே அவளை வீட்டிற்குள் கூட்டிச் சென்றார். அந்த வீட்டின் வரவேற்பறையின் சுவரில் ஏராளமான பறவைகளின் ஒளிப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தன் மகன் எடுத்தப்படங்கள் இவை என்றும் அவன் இப்போது தென்னாப்ரிக்காவிற்கு சென்றிருப்பதாவும் சொல்லிக்கொண்டே வரவேற்பறையிலிருந்த கணிப்பொறி முன்னமர்ந்து அவளது முன்பதிவை சரிபார்த்துக்கொண்டார்.

 

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தன் கணவருடன் இந்தியாவிற்கு வந்த போது நம் கலாச்சாரமும் இயற்கை எழிலும் பிடித்துவிட்டதால் வயநாட்டிலேயே தங்கிவிட்டதாகவும் தன் கணவரின் மறைவுக்குப் பின் இந்த வீட்டை தங்கும் விடுதியாக மாற்றி வாழ்ந்து வருவதாகவும் சொன்னார். செளமியா அந்த கனிந்த முகத்தையும் முதிர் வயதிலும் உற்சாகம் குறையாத அவரது பேச்சையும் ரசித்துக்கொண்டே அவரைப் பின் தொடர்ந்தாள். அந்த வீட்டின் கீழ்தளத்தின் ஓர் அறையில் தான் வசிப்பதாக சொன்னவர், மேல் தளத்திலிருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றை அவளுக்காக தயார் நிலையில் ஒழுங்குபடுத்தியிருப்பதாகச் சொல்லிவிட்டு மாடிப்படியில் ஏறத்துவங்கினார். அந்த வீட்டின் தரைகள் மரத்தாலானது என்பதால் இவர்கள் நடக்கும்போது ஏற்படும் ஒலி செளமியாவுக்கு உடனே பிடித்துப்போனது. எல்லாத் தரைகளும் ஒலியெழுப்புவதில்லை. ஒலி எழுப்பும் தரைகள் நம்முடன் ஏதோவொரு உரையாடலைத் துவங்க முற்படுகின்றன. நிசப்தத்திலிருந்து சப்தத்திற்குள் நுழைந்து மீண்டும் நிசபதத்திற்குள் மூழ்கிவிடுவதற்குள் அந்த உரையாடலை அவை தொடங்கியாக வேண்டிய பதைபதைப்புடனிருக்கின்றன. நாம் அதன் குரல்வளையில் அழுத்தமாக மிதித்து, ஆரம்பிக்கும் முன்பே அந்த உரையாடல்களை முடித்துவைத்துவிடுகிறோமே என்று நினைத்தபடியே படிகளில் ஏறி அறை நோக்கி செல்லும் மார்கரெட்டைப் பின் தொடர்ந்தாள்.

 

அறையின் கதவைத் திறந்துவிட்டு ஏதேனும் உதவி வேண்டுமெனில் தொலைபேசியில் எண் ஒன்றை அழுத்துமாறு சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பின் அறைக் கதவை தாழிட்டுவிட்டு அங்கிருந்த மிகப்பெரிய மெத்தையின் மீது அமர்ந்தாள், அந்த மெத்தை போடப்பட்டிருந்த கட்டில் பழங்கால அரண்மணையில் ராணியின் படுக்கையறை கட்டிலைப்போலிருந்தது. அந்த அறையின் ஆழ்ந்த அமைதி அவளுக்குத் தேவையாய் இருந்தது. குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்தவள் அதன் விசாலத்தையும் சுத்தத்தையும் கண்டு மெய் மறந்து நின்றாள்.    குளியலறையின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கண்ணாடித்தாள் போன்ற விரிப்பில் பாதம் பட்டதும் ஏதோவொரு மலரின் மீது மிதித்தவிட்ட உணர்வைத் தந்தது. அப்படியொரு மிருதுவான தரைவிரிப்பை இதற்கு முன் அவள் கண்டதேயில்லை. அந்த விரிப்பைக் கடந்து சென்று ரெயின் ஷவரின் மிதமான சுடுநீரில் குளித்தபோது உடலெங்கும் படர்ந்திருந்த பயணச்சோர்வு கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்துவங்கியதை உணர்ந்தாள். குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு பசியெடுத்தது. அவளுக்கான அறையை பூட்டிவிட்டு கீழ்தளத்திற்கு வர யத்தனிக்கையில் அதே தளத்திலிருக்கும் மற்றோர் அறை பூட்டியிருப்பதைக் கவனித்தாள்.

 

மாடிப்படியில் இறங்கி கீழ்தளத்திலிருக்கும் சமையலறைக்குச் சென்று தான் வாங்கி வந்திருந்த ரொட்டியை அங்கிருந்த ப்ரட் டோஸ்டரில் டோஸ்ட் செய்து ஜாமும் சீஸும் வைத்துச் சாப்பிட்டாள்.  அந்த வீட்டின் சமையலறை, அங்கு வந்து தங்குபவர்களும் உபயோகப்படுத்தும்படி இருந்தது. ப்ரிட்ஜ்ஜில் ஆப்பிள் ஜூஸ் இருப்பதாக மார்கரெட் சொன்னதால் அதில் கொஞ்சம் கண்ணாடித் தம்ளரில் ஊற்றிக் குடித்தாள். 

 

அந்த மாலைப் பொழுதின் மலையழகைக் காண்பதற்காக அங்கிருந்து கிளம்பி ஒத்தையடிப்பாதை வழியே மெயின் ரோட்டிற்கு வந்தவள் அந்த மலைச்சாலையில் நடக்கத்துவங்கினாள். அவ்வப்போது வாகனங்கள் அவளைக் கடந்து சென்றாலும் அதிகமான போக்குவரத்து இல்லாமல் அந்த இடம் ரம்மியமாக காட்சியளித்தது. சற்று தொலைவில் ஓர் மரத்தில் கிளிகள் இரண்டைப் பார்த்தவுடன் அதைப் படம் எடுப்பதற்காக தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவிட்டு மொபைலைத் தேடியவள், சென்னையிலேயே மொபைலை விட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தவுடன் அந்தக் கிளிகளை கண்களால் படமெடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தாள். காணும் இடமெல்லாம் பச்சையாய் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

 

இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும் என்பதால் மீண்டும் வந்த வழியே நடந்தபோது குளிர்க்காற்று வீசத்துவங்கியிருந்தது. வேகமாக நடந்து ஒத்தையடிப்பாதை வழியே மேலேறி வீட்டிற்கு திரும்பினாள். வரவேற்பறையிலிருந்த மார்கரெட் நாளை காலை தான் வெளியூருக்குச் செல்வதாகவும் மூன்று நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொன்னார். தான் தனியாக இந்த வீட்டில் இருக்கப்போகிறோம் என நினைத்தவுடன் அவள் முகத்தில் பயம் அப்பிக்கொண்டது. அதை கவனித்தவர் அவளருகே வந்து பயப்பட வேண்டாம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு அழைத்துப்பேசு என் சகோதரரின் எண் இது அவர் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறார் என்றபடி ஓர் தொலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்தார். மேலும், அவள் செக்கவுட் செய்யும் நாளுக்குள் தான் திரும்பிவிடுவதாகவும் சொல்லிவிட்டு அவர் அறைக்குள் போய்விட்டார். கீழ்தளத்திலிருந்து மேல்தளம் வந்து தன் அறையைத் திறந்தவள் களைப்பின் மிகுதியால் உடனே உறங்கி விட்டாள்.

 

3.

அதிகாலையே விழிப்புத் தட்டிவிட்டதால் எழுந்து நெட்டி முறித்தவள் அந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தொலை தூரத்திலிருக்கும் மலைகளின் பின்னாலிருந்து சூரியன் மெல்ல எழுந்து கொண்டிருந்தான். அந்த உதயத்தின் காட்சியில் லயித்தவள் தொலைவில் வீடுகள் எதுவும் தென்படுகிறதா எனவும் பார்த்தாள். கண்ணுக்கு எட்டியவரை மரங்கள் மட்டுமே தென்பட்டன. எந்தவொரு வீடும் இல்லை. தூரத்தில் ஒரே ஒரு தேவாலையத்தின் கோபுரம் மட்டும் தென்பட்டது.  தினமும் காலையில் எழுந்தவுடன் அம்மாவுக்குத்தான் முதலில் போன் செய்வாள். ஏழு நாட்கள் போனைத் தொடப்போவதில்லை என்பதை அம்மாவிடம்தான் முதலில் சொன்னாள். அப்புறம் எப்படிமா என்கிட்ட பேசுவ என்று அம்மா கேட்டதும் உடனே அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தனிமையிலிருந்து விட்டு வந்தால்தான் தன்னால் மீண்டும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும் என்று அம்மாவுக்குப் புரியவைத்தாள்.

 

மணி ஏழு. 

 

பல் துலக்கிவிட்டு கீழிறங்கி சமையலறைக்குச் சென்றவள் தேநீர் தயாரித்து ஒரு கோப்பையில் ஊற்றிக்கொண்டு ஆப்பிள் ஒன்றையும் எடுத்துக்கொண்டு தன் அறைக்குத் திரும்பினாள். இன்று கந்தன்பாரா அருவிக்கு போக வேண்டும் என்கிற உற்சாகத்தில் ஜன்னல் வழியே தூரவானை ரசித்தபடி தேநீரைப் பருகினாள். அந்தத் தேநீர்ச்சுவை தொண்டைக்குள் இறங்குவதும் ஜன்னல் வழியே நுழைந்த ஜில்லென்ற காற்று அவளது கூந்தலைத் தழுவி செல்வதும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன. சற்று நேரத்தில் மிதமான வெயிலடிக்கத் துவங்கியதால் ஆப்பிளை கடித்துக்கொண்டே குளிப்பதற்காக ஹீட்டர் சுவிட்சை போடுவதற்கு குளியலறைக்கு வெளியே தேடியபோது அங்கே சுவிட்ச் எதுவும் இல்லாததால் குளியலறைக்குள் நுழைந்து ஹீட்டர் சுவிட்சைத் தேடினாள். அது கதவின் பின்னாலிருந்தது. கதவுக்குப் பின்னால் செல்வதற்காக கதவை சாத்திவிட்டு ஹீட்டர் சுவிட்சைத் போட்டுவிட்டு குளியலறைக் கதவை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. வாயில் கவ்வியிருந்த ஆப்பிளை எடுத்து வாஷ் பேசின் அருகே வைத்துவிட்டு கதவை இழுத்துப் பார்த்தாள். கதவு அசையவில்லை. அது பல வருடங்கள் பழமையான மரக்கதவு. சிறு சிறு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதவு நேற்று அறைக்குள் வந்தபோதே ஈர்த்தது. அந்த முதிய பெண்மணி வீட்டைக் காண்பிக்கும்போதே அதைக் கட்டிய போது தானும் தன் கணவரும் எவ்வளவு ப்ரியத்துடனும் அக்கறையுடனும் கட்டினோம் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தது இவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

 

எவ்வளவு முயன்றும் மூடிய கதவைத் திறக்க முடியவில்லை. செளமியாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. நெஞ்சு பலமாக அடித்துக்கொண்டது. திறக்காத கதவின் மீது கோபம் வந்து அதை ஓங்கி எத்தினாள். கால் பெருவிரல் வலித்தது. தன் முழு பலத்தையும் திரட்டி கதவைப் பிடித்திழுத்தாள். காரணமே சொல்லாமல் வாழ்விலிருந்து நம்மை நீக்கிவிட்டு ஏதேனுமொரு இடத்தில் பார்க்க நேர்கையில் எவ்வித சலனமுமின்றி நம்மைக் கடந்துசெல்லும் சிலரைப் போல அந்தக் கதவும் எவ்வித சலனமுமின்றி மெளனித்திருந்தது. கதவிடுக்கின் வழியே ஏதேனும் கம்பியோ அல்லது சிறுகுச்சியோ விட்டு கதவின் முன்பக்க தாழ்பாளை நீக்கிவிட முடியுமா என யோசித்தாள். அதற்கு கதவிடுக்கும் கம்பியும் தேவை. இரண்டுமே இல்லை என்பதால் சோர்ந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பயத்தின் கரங்கள் ஒரு சர்ப்பமென ஊர்ந்து ஊர்ந்து அவளது கழுத்தைச் சுற்றிக்கொண்டு மூச்சைத் திணறச் செய்தது. 

 

குளியலறையில் ஓர் சிறிய ஜன்னலிருந்தது. ஆனால் அது ஏழு அடிக்கும் மேலிருந்ததால் இவளால் அந்த ஜன்னலை எட்ட முடியவில்லை. அங்கிருந்த ப்ளாஸ்டிக் வாளியொன்றை கவிழ்த்து கவனமாக அதன் மீது ஏறி ஜன்னலைத் தொட முயன்றாள். ஜன்னலின் விளிம்பைத் தான் தொடமுடிந்தது. ஏமாற்றத்துடன் கீழ் இறங்கியவள் ஜன்னலை நோக்கி ஹெல்ப் மீ ஹெல்ப் மீ என கத்தத் துவங்கினாள். பத்து இருபது முறை கத்தியவுடன் தொண்டை வறண்டுவிட்டது போலிருந்தது. எச்சிலை விழுங்கிக்கொண்டு மீண்டும் சில முறை கத்தினாள். கண்களிலிருந்து கண்ணீரும் உடம்பிலிருந்து வியர்வையும் அவளை நனைத்தபடியே இருந்தன.

 

குளியலறையிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றவள் கைகள் ஏந்தி கொஞ்சம் நீரைப் பிடித்து தன் முகத்தில் வீசினாள். அவளது முகத்தில் பட்டுத் தெறித்த நீர் கண்ணாடியையும் நனைத்து கோடுகளாய் கீழிறங்கியது. முகத்தில் நீர் பட்டவுடன் மனதுக்குள் லேசாய் தைரியம் வந்தது. சிறு வயது முதலே விடுதி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டதால் நிறைய கேலிகளையும் கிண்டல்களையும் கடந்து சுயம்பாக வாழ்வில் முன்னேறியிருந்தாள். நல்லதொரு வேலையும் கிடைத்த பின்னர்தான் யாரிடமும் எதற்காகவும் உதவி பெறாமல் தனக்கான தேவைகளை தானே கவனித்துக்கொள்ளும் தைரியமும் அவளுக்குள் தோன்றியிருந்தன. எந்தவொரு சிக்கலான விஷயத்திற்கும் கட்டாயம் ஓர் தீர்வு இருக்கும் என்பதை முழுமையாக நம்புகிறவள் என்பதால் இந்த அறைக்குள்ளிருந்து தப்பிப்பதற்கும் ஓர் வழி இருக்கத்தான் செய்யும் என நம்பத் துவங்கினாள்.

 

காலம் கருணையற்றது. அது யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. தன் கடிகாரமும் படுக்கையறையில்தான் இருந்தது என்பதால் இப்போது மணி எத்தனை இருக்கும் என்பதை அவளால் உணரமுடியவில்லை. பசிக்க ஆரம்பித்தது. குளியலறைக்குள் அவள் கடித்துவிட்டு வைத்த ஆப்பிள் மட்டும் இருந்தது. வேறு ஏதேனும் உண்பதற்கு இருக்கிறதா என்று தேடினாள். வெறெந்த உணவும் அங்கில்லை. ஆப்பிளை எடுத்து ஒரு கடி கடித்து நன்றாக அதை மென்று தின்னத் துவங்கினாள். அதன் சாறு தொண்டைக்குள் இறங்கும் போது அமிர்தமென இனித்தது. மிச்சமிருக்கும் ஆப்பிளை ஒரு டிஷ்ஷூ பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்திக் கொண்டாள். தாகமெடுத்தது. வேறு வழியில்லை குழாய் நீரைத்தான் குடித்தாக வேண்டும். அது சென்னையில் அவள் வசித்த விடுதியின் குழாய் நீரைப் போல உப்புநீராக இருந்தால் என்ன செய்வது என்கிற கலக்கத்துடனே கொஞ்சமாய் நீரைப் பிடித்துக் குடித்துப்பார்த்தாள். அது உப்புமில்லாமல் இனிக்கவும் செய்யாமல் ருசியற்றிருந்தது. நீரைக் குடித்தவுடன் அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

 

நீண்டதொரு அமைதியால் சூழப்பட்டிருந்தது அந்த அறை. முழங்காலைக் கட்டிக்கொண்டு அதன் மேல் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள் செளமியா. கடவுளே என்னைக் காப்பாற்று எப்படியாவது இந்த நரகத்திலிருந்து என்னை வெளியே எடுத்துவிடு என அவளது இதழ்கள் முணுமுணுக்கத் துவங்கியிருந்தன. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தைரியம் வந்தது. எழுந்து கதவை பலம்கொண்டு இழுக்க ஆரம்பித்தாள். வைராக்கியத்துடன் அசைவின்றி நின்றிருந்தது கதவு.  ஜன்னல் வழியே நுழைந்த வெயில் கதவில் படர்ந்தபோது நானும் உன்னுடன் சேர்ந்து கதவைத் திறக்க முயல்கிறேன் என வெயில் தன்னிடம் சொல்வது போலிருந்தது. கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் சோர்வுற்றவள் அங்கிருந்த தரைவிரிப்பில் படுத்துக்கொண்டாள்.

 

களைப்பில் கண்ணயர்ந்தவளை கீச் கீச் எனும் ஒலி தட்டி எழுப்பிற்று. மெதுவாக கண்களைத் திறந்ததும் தான் எங்கிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்து எழுந்தவள் கீச்சொலி வந்த ஜன்னலைப் பார்த்தாள். அங்கே அணிலொன்று அறைக்குள் எட்டிப்பார்த்தபடி வாலுயர்த்தி கத்திக்கொண்டிருந்தது. அவளுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தனிமையின் வலியை அவள் நன்குணர்ந்தவள் என்பதால் தன் தனிமையை பகிர்ந்துகொள்ள கடவுள் அனுப்பிய மற்றோர் உயிர்தான் இந்த அணிலென நிம்மதிப்பெருமூச்சு விட்டாள். வெயில் இறங்கத் துவங்கியிருந்தது. இப்பொழுது மணி மாலை ஐந்தை தாண்டியிருக்கும் என்று யுகித்தவளுக்கு இருட்டிய பின்னர் எந்த வெளிச்சமுமின்றி இந்தக் குளியலறைக்குள் எப்படி இருக்கப் போகிறோம் என்கிற பயமும் தொற்றிக்கொண்டது.  ஹீட்டரின் சுவிட்சை குளியலறைக்குள் வைத்துவிட்டு குளியலறையின் லைட்டிற்கான சுவிட்சை அறைக்கு வெளியே வைத்த விடுதியின் உரிமையாளரை சபித்தாள்.

 

குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கத் துவங்கியவுடன் குளிப்பதற்கென மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துவாலைகளை எடுத்து உடலோடு சுற்றிக்கொண்டாள். அந்தப் பூந்துவாலைகள் அவளுக்காக குளிருடன் போராடத் துவங்கின. மிச்சமிருந்த ஆப்பிளை இரண்டு கடி கடித்துத் தின்றுவிட்டு வெகுநேரம் சுவரில் சாய்ந்து கால்நீட்டியபடியே அமர்ந்திருந்தாள். ஏதேதோ எண்ணங்கள் அவளைச் சூழ ஆரம்பித்தபோது களைப்பின் மிகுதியால் உட்கார்ந்தபடியே உறங்கிவிட்டிருந்தாள்.

 

4.

கண் விழித்தபோது விடிந்திருந்தது. தான் எப்போது உறங்கினோம் என்பதும் எப்போது தரைவிரிப்பில் படுத்தோம் என்பதும் அவளுக்கு நினைவில் இல்லை. வெளியே மழை பெய்யும் சத்தம் கேட்டது. மழை என்றால் குழந்தையாகவே மாறிவிடுபவள் இப்போது எவ்வித மகிழ்வுமின்றி அமர்ந்திருந்தாள். இன்றும் தான் வெளியேறாவிட்டால் என்ன நடக்கும்? யாராவது வந்து தன்னை காப்பாற்றிவிட மாட்டார்களா? என்ன தவறு செய்தேன்…ஏனிந்த சிறைத் தண்டனை? நான் இறந்துவிடுவேனா? ஒருவேளை நான் இறந்துவிட்டால் யார் அம்மாவிடம் என் இறப்பைச் சொல்வார்கள்? அம்மாவால் எப்படி என் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியும்? அவளுக்குள் கேள்விகள் ஒவ்வொன்றாய் முளைக்கத் துவங்கின. ஏதாவது செய்ய வேண்டும். எப்படியாவது தப்பித்தாக வேண்டும். உயிர் வாழவேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் மார்கரெட் வந்துவிட்டால் என்னைக் காப்பாற்றிவிடுவார். அதுவரை போராடவேண்டும் என்று நினைத்துக் கொண்டவள், எழுந்து பல்துலக்கினாள். கண்ணாடியில் தெரிகின்ற தன் பிம்பத்துடன் பேசியபடியே பல்துலக்கி முடித்து முகம் கழுவியவுடன் மனது தெளிவானது போலிருந்தது.

 

நேற்று குளிக்கவில்லை என்பதால் உடை களைந்து ரெயின் ஷவர் இருக்குமிடத்தின் அடியில் சென்று நின்றாள். தன் சென்னை விடுதியிலிருக்கும் ஷவருக்கும் இந்த ரெயின் ஷவருக்கும் இடையேயான வித்தியாசம், இது மிகப்பெரியதாக சதுர வடிவிலிருந்தது. அதிலிருந்து குதிக்கும் வெதுவெதுப்பான நீர்த்துளிகள் மழையில் நனைவதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது. கண்கள் மூடி நின்றவளின் உச்சி தொட்டு, மார்பில் இறங்கி உடலெங்கும் ஓர் நதியென ஓடி காலடியில் வீழ்ந்து மரணித்தன நீர்த்துளிகள். அவளது மூளை வேகமாக சிந்திக்கத் துவங்கியது. குளித்தவுடன் பசியெடுக்கும். பசித்தால் உண்பதற்கு என்ன செய்வது? யோசித்தபடியே குளித்து முடித்து துவாலையால் தலைதுவட்டி உடலைத் துடைத்து உடைக்குள் நுழைந்துகொண்டாள்.

 

அந்தக் குளியலறையின் மூலையில் தொட்டிச் செடியொன்று இருந்தது. அதன் இலைகள் அரச மரத்தின் இலைகள் போலிருந்தன. முதலில் அதுவொரு செயற்கைச் செடியோ என நினைத்தவள் அருகில் சென்று அதன் இலையை கிள்ளியபோதுதான் அதுவும் தன்னைப் போலொரு உயிர் என்பதை உணர்ந்து கொண்டாள். செடியிலிருந்து ஓர் இலையை மட்டும் பிய்த்தெடுத்து முகர்ந்து பார்த்தாள். அது எவ்வித வாசமும் இல்லாமல் இருந்ததால் அந்த இலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி மீண்டும் நுகர்ந்து பார்த்தாள். இப்போது அதிலிருந்து ஒருவகை வாசம் எழுந்து வருவது போல் தோன்றிற்று. இப்படியொரு வாசனையை இதற்கு முன்பு அவள் உணர்ந்ததேயில்லை.  பசி அதிகமானது.

 

இலையை கடித்து தின்னலாம் எனத்தோன்றியதால் கொஞ்சமாய் பிய்த்து வாயில் போட்டு மென்றவள் அதன் கசப்புச்சுவை தாங்கமுடியாமல் துப்பி விட்டு வாயைக் கொப்பளித்தாள். அப்படியிருந்தும் அந்தக் கசப்பு நாவில் மிச்சமிருந்தது. அந்தக் கசப்புடனே கதவருகே சென்றவள் தன் வலிமையை ஒன்று திரட்டி கதவை இழுக்க ஆரம்பித்தாள். வருடங்கள் பலவற்றை கடந்திருந்த அந்த இறுக்கமான கதவு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. விரக்தியில் ஓங்கி கதவில் பலமுறை குத்தியவள் சோர்வுற்று அப்படியே கீழே உட்கார்ந்தாள். கை வலித்தது.

 

இந்த திறக்காத கதவும் என் மனதும் ஒன்றுதானே? திடீரென்று அவளுக்கு வெண்மதியின் ஞாபகம் வந்தது. தன் அலுவலகத்தில் பக்கத்து டீமில் வேலை பார்ப்பவள். ஒரு நாள் அலுவலகம் முடிந்து வெளியே வரும்போது தயக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இவள் மீதான காதலை அழகான இருவரிகளால் வெளிப்படுத்தியவள். அப்போது அதிர்ந்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து தன் விடுதிக்குப் போனதும் அவளையும் அவள் தன் காதலைச் சொன்ன விதத்தையும் வெகுநேரம் மனதால் அசை போட்டபடியிருந்தாள். ஒரு பெண் மற்றொரு பெண்ணை நேசிக்கிறேன் என்கிறாளே இதை எப்படி எடுத்துக்கொள்வது? நாம் நண்பர்களாக இருப்போம் எனச்சொல்லியிருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டியதில்லை ஆனால் வெண்மதி தன்னை ஏன் காதலிப்பதாக சொல்ல வேண்டும்?

 

பெண் என்றாலே மோசமானவர்கள் எனும் எண்ணம் அழுந்தப் பதிந்திருந்ததால் வெண்மதிக்கு உடனே எந்த பதிலும் அவளால் சொல்லிவிட முடியவில்லை. தன் அம்மாவை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வரும். அம்மாவின் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்ததேயில்லை. எதற்கெடுத்தாலும் கோபம். எல்லாவற்றிலும் அப்பாவைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர் என்பதால் சிறு வயது முதலே பெண்களே இப்படித்தானிருப்பார்கள் என்கிற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டிருந்தது. பூமிநாதன் அக்கா என்றபோதுகூட அவனொரு ஆண் என்பதால்தான் அவனைச் சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. வெண்மதியைப் பற்றி இவளுக்கு அதிகமாய் எதுவும் தெரியாது என்பதும் அவள் மீது எந்தவொரு ஈர்ப்பையும் தரவில்லை.

தினமும் அலுவலகம் முடிந்து வெளியே வரும்போதெல்லாம் வெண்மதி இவளது பதிலுக்காக காத்திருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் கடந்து சென்றுவிடுவாள். பத்து நாட்கள் கழித்து இவளது எண்ணுக்கு புதியதோர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது யாராக இருக்கும் எனும் குழப்பத்தில் போனை எடுத்தவளுக்கு வெண்மதியின் வித்தியாசமான குரல் பிடித்துப்போனது. அந்தக் குரலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக தோன்றியது. அவள் தன் பெயரை உச்சரிக்கும்போது ஏற்படும் ஒலி ஒருவித இனம்புரியாத கிறக்கத்தை இவளுக்குள் விதைத்தது.

 

மிகுந்த நிதானத்துடனும் அமைதியுடனும் அவள் பேசிய சொற்கள் அனைத்தும் இவளுக்குள் ஏதோவொன்றை உடையச் செய்தது. ஆனாலும் ம் என்று மட்டும் பதிலிட்டு அந்த அழைப்பைத் துண்டித்தாள். தன் வாழ்வுக்குள் நுழைய விரும்பும் ஓர் உறவை அவ்வளவு எளிதில் அனுமதிப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. திறக்காத இந்தக் கதவைப் போல தன் மனதை பூட்டியே வைத்திருந்தாள். வெண்மதியும் அவளது மனக்கதவை திறந்துவிடும் நம்பிக்கையில் காத்திருந்தாள். அவளது காதலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ எனத் தோன்றியது. ஒருவேளை இந்தச் சிறைக்குள் தன் வாழ்வு முடிந்துபோனால் வெண்மதி என்ன செய்வாள்? இரண்டு நாட்கள் அழுதுவிட்டு மீண்டுவிடுவாளோ? இல்லை அவளது கண்களில் தான் பார்த்தது நிஜமானதொரு நேசத்தை. அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. எனக்கும்  அவளைப் பிடிக்கத்துவங்கியது என்பது கூடத் தெரியாமல் முடிவுற வேண்டுமா என் மீதான அவள் நேசம்?

 

யோசித்துக்கொண்டே இருந்தவள் பசி அடங்குவதற்காக தண்ணீர் குடித்தாள். ஜன்னலின் வழியே கொஞ்சமாய் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. நேற்று அடித்த வெயில் இன்றில்லை. மழை ஓய்ந்த பின்னாலும் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. அந்த அணிலையும் இன்று காணவில்லை. தான் மிகுந்த தனிமையில் இருக்கிறோம் எனத் தோன்றியதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

 

5.

பொழுது சாயும் நேரத்தில் அந்த வீட்டின் கதவு திறந்து உள்நுழைந்தார் மார்கரெட். மூன்று நாட்களில் வருவதாக சொல்லிச் சென்றவர் இரண்டாம் நாளில் திரும்பியிருந்தார். நேராக சமையலறைக்குச் சென்றவர் சரியாக மூடப்படாத ப்ரிட்ஜ்ஜைக் கண்டதும் கோபமுற்று செளமியாவின் அறையிலிருக்கும் தொலைபேசியைத் தொடர்பு கொண்டார். பதிலில்லை என்பதால் மேல்தளத்திற்கு வந்து செளமியாவின் அறைக் கதவை தட்டினார். கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததும் வெகு நேரம் தட்டியும் அவள் கதவைத் திறக்காததால் ஏதோ தோன்ற தன்னிடமிருந்த மாற்றுச் சாவியின் மூலம் கதவைத் திறந்துகொண்டு உள் நுழைந்தார். இருட்டாக இருந்த அறையில் செளமியாவைக் காணாததால் குளியலறைக்குள் இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்ள குளியலறைக் கதவைத் தட்டிக்கொண்டே குரல் கொடுத்தார். உள்ளே உறக்க நிலையிலிருந்தவள் மார்கரெட்டின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து கதவருகே சென்று தன்னால் வெளியே வரமுடியாமல் தவிப்பதைச் சொன்னாள். மார்க்கரெட் அவளைச் சமாதானப் படுத்திவிட்டு, கதவைத் திறக்க முயன்றார். அதன் தாழ்ப்பாள் உட்புறமாக உடைந்து கதவு அசைக்கமுடியாதபடி இருந்தது புரிந்துவிட்டது. உடனே கீழ்த்தளம் வந்து சகோதரருக்கு போன் செய்தார்.

 

அரைமணி நேரத்தில் அங்கு வந்த சகோதரரின் உதவியுடன் கதவை உடைத்துத் திறந்தார். கதவு திறந்தவுடன் கண்களில் நீர் வழிய ஓடிச்சென்று மார்கரெட்டை கட்டிக்கொண்டு வெகுநேரம் நின்றிருந்தாள் செளமியா.

 

அவளுக்குள் இறுக்கமாக மூடியிருந்த மற்றோர் கதவும் அன்றுதான் திறந்துகொண்டது.

 

 

(முற்றும்)

மேலும் சில சிறுகதைகள்

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...

Read More
watercolor, eye, look-7993918.jpg

சித்திரைப்பூ

சித்திரைப்பூ   1. இப்படி ஒரு விடியலிருக்கும் என்று சித்திரைப்பூ நினைத்துப்பார்க்கவில்லை. அதிகாலை ஐந்து முப்பதுக்கு மொபைல் அலாரம் அடித்தபோது எழுந்தவள் மொபைல் டேட்டாவை உயிர்ப்பித்ததும் முகநூலுக்குள்...

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top