ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்

 

 

 

 

1.

கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும் போனதும் கண்மணியின் உலகம் திறந்துகொள்ளும். அவளது வீட்டிற்கு எதிரே இருக்கும் புளியந்தோப்பில் அவளை விட வயதில் சிறியவர்களுடன் விளையாடுவாள். எறிபந்து, பிள்ளையார்பந்து, கோலி, நொண்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டுகளால் அவளது பொழுதுகள் நிறைந்திருந்தன. அவள் போகுமிடமெல்லாம் அவளுடனே ஓடும் அவளது நாய் செவலை.

 

ஒரு நாள் திடீரென வயிற்றைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவளை வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது என நிறுத்திவைத்தாள் அம்மா. தட்டானைப் போல பறந்து திரிந்தவளுக்கு வீட்டிற்குள் அடைந்து கிடக்க விருப்பமில்லை. வெளியே போக முடியாமல் மூச்சுத் திணறியவளுக்கு அப்பா வாங்கிவந்த சிறிய தொலைக்காட்சிப் பெட்டி வேறோர் உலகத்தைக் காண்பிக்க ஆரம்பித்தது. அதிலும் கிரிக்கெட் போட்டிகளை அதிகம் ரசிக்க ஆரம்பித்தாள் கண்மணி.

எல்லோருக்கும் சச்சின் பிடித்தது. சிலருக்கு அசார். ஆனால் கண்மணியின் பார்வை எப்போதும் அஜய் ஜடேஜாவின் மீதே நிலைத்தது. கலகலவென சிரித்துக்கொண்டே அங்குமிங்கும் துடிப்புடன் ஓடித்திரியும் ஜடேஜாவைக் கண்டதும் கண்மணியின் மனதெங்கும் இனம்புரியா மகிழ்ச்சி பரவியது.

ஜடேஜா டிவிக்குள்ளிருந்து வெளியே குதித்து தன்னுடன் பேசிச் சிரிப்பதாகவும், ஜடேஜா தன்னை ரசிப்பதாகவும் தீர்க்கமாக நம்பத் துவங்கினாள்.

செய்தித்தாளில் ஜடேஜாவின் புகைப்படம் வரும்போதெல்லாம் அதை வெட்டி சேகரிக்கத் துவங்கினாள். அதிலும் குறிப்பாக ஜடேஜா சிரிப்பது போலிருக்கும் படங்கள் அவளது ரகசிய புத்தகத்தின் பக்கங்களை ஆக்கிரமித்தன. ஜடேஜாவும் அவளும் நதிக்கரையொன்றில் கைகோர்த்து நடந்து போவதாக கனவுகள் வர ஆரம்பித்தன. ஜடேஜா மைதானத்தில் ஆடும் போது தான் மட்டுமே அவனது ஆட்டத்தைக் காண்பதாகவும் அவளைப் பார்த்து கண்சிமிட்டியபடியே அவன் ஆடுவதாகவும் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தாள்.

 

“வயசுப்புள்ள நெதமும் டிவிபொட்டி முன்னால ஒக்காந்திருந்தா வெளங்குமாக்கும்…ஏ கண்ணு ஒன்னத்தாம்ளா செவிடி மாரில்லா ஒக்காந்திருக்க…நாங் கெடந்து கரையிரேன் ஒனக்கு கேக்குதா இல்லயாளா”  ஊதாங்குழலால் அடுப்பை ஊதியவுடன் அதிலிருந்து எழும்பும் புகை கண்களுக்கு எரிச்சலைத் தந்ததால் முந்தானையால் கண்களைத் துடைத்தபடியே கண்மணியிடம் கேட்டாள் அம்மா.

 

கண்மணியோ வெள்ளை நிற உடுப்பும் வட்டத்தொப்பியுடன் மைதானத்தில் நின்றபடி சிரித்துக்கொண்டிருக்கும் ஜடேஜாவுடன் மனதால் பேசியபடி இருந்தாள்.

 

“யோளா…இங்கதான் இருக்கியா இல்ல கருங்கல்லா மாறிட்டியா”  தோள் தொட்டு அம்மா உசுப்பிய பின்புதான் நினைவுக்குத் திரும்பினாள் கண்மணி.

 

“யம்மோவ் கொஞ்ச நேரம் நிம்மதியா டிவி பாக்க உடுதியா…எப்பாரு சலம்பிக்கிட்டு”

 

“ஆமாடியம்மா நீ மவராணி கணக்கா ஒக்காந்துகிட்டு டிவி பாப்ப…நான் இங்க அடுப்படில வெக்கைல வெந்து சாவணுமாக்கும்…டிவிய அமத்திப்புட்டு வந்து செத்த நேரம் ஒத்தாசையா இரி…சோலி நெறயா கெடக்கு” அம்மா சலித்துக்கொண்டபோது இன்னிங்ஸ் ப்ரேக் வந்தது. உணவு இடைவேளைக்காக கிரிக்கெட் வீரர்கள் பெவிலியன் திரும்பினார்கள்.

 

டிவியை நிறுத்திவிட்டு அம்மாவிடம் வந்தாள் கண்மணி. அம்மா சொன்ன வேலைகளை செய்தபடியே இருந்தாலும் மனதெங்கும் ஜடேஜாவின் சிரிப்புதான் நிரம்பியிருந்தது.

 

 

 

2.

வற்றிய குளத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களிடையே ஒரு பெயர் மட்டும் மிகப் பிரபலமாக இருந்தது. தங்கதுரை கிரிக்கெட் மட்டையுடன் இறங்கிவிட்டால் அவனது ஆட்டத்தைக் காண ரசிகர்பட்டாளமே கூடிவிடும். ஒவ்வொரு பந்தும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசித் தள்ளுவான். அவனைச் செல்லமாக கோல்ட் என அழைத்தனர் நண்பர்கள். கோல்ட் குளக்கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தது ஊருக்குள்ளும் பேச்சாக இருந்தது.

 

“ஏல நம்ம பெரியவரு மொவன் என்னமா அடிக்காங்க…நேத்து மேட்ச் பார்க்க போயிருந்தேன்…ஒன்பது பந்துல இருவத்தி மூணு ரன்னு…ஏ அடிச்சுட்டு சும்மா சிங்கம் மாரில்லாடே நிக்கான்”

 

“நீ போனவாரம் கோல்டு ஆட்டத்த பாக்கலபோல…பதினெட்டு பந்துல ஐம்பதடிச்சுப்புட்டான்…சச்சினு அப்ரிதி எல்லாம் அந்தாக்க போவ வேண்டியதுதான்…கோல்டுதாம்ல அடுத்த சச்சினு என்ன சொல்லுத”

 

ஊரெங்கும் கோல்டின் ஆட்டம் பற்றிய பேச்சாக இருந்தது. கண்மணியின் காதுகளுக்கும் கோல்டின் ஆட்டம் பற்றி சேக்காளிகள் மூலமாக தகவல் வந்தது. கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தில் அவனது ஆட்டத்தைப் பார்க்கச் சென்றவள் சொக்கிப் போய் நின்றாள். அவனது ஆட்டம் ஜடேஜாவின் ஆட்டத்தை நினைவூட்டியது. அதிலும் ஒவ்வொரு முறை பந்தை எதிர்கொள்ளும் முன்பும் மட்டையை கைகளால் சுழற்றும் அந்த ஸ்டைல் ஜடேஜாவை அப்படியே அவள் கண்முன்னால் நிறுத்தியது.

 

கோல்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் தவறாமல் பார்க்கத் துவங்கினாள். வெயில் பூக்கும் நாளொன்றில் கோல்டும் கண்மணியும் சந்தித்தபோது மெதுவாய் ஒரு மலர் அவர்களிடையே மலர்ந்தது. தன்னைவிட பத்து வயது மூத்தவன் என்கிற எண்ணமே அவளது மனதில் தோன்றவில்லை. அவனது சிரிப்பும் ஜடேஜாவின் சிரிப்பைப் போலவே இருந்தது அவளுக்கு சிலிர்ப்பைத் தந்திருந்தது.

 

கண்மணிக்கு தான் காண்பது கனவா நினைவா என்றே உணரமுடியவில்லை. முதன் முதலாக தன்னை ஓர் ஆண் ரசித்துப் பார்க்கிறான் என்கிற உணர்வே வித்தியாசமானதாக இருந்தது. அதுவும் தான் அதிகம் ரசித்த ஆட்டக்காரன்.

 

தங்கதுரையும் கண்மணியும் ஊர் எல்லையிலிருக்கும் கோவில் அருகே சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

 

தங்கதுரை மைதானத்தில் மட்டுமல்லாமல் காதல் மொழிகள் பேசுவதிலும் கோல்டாக இருந்தது கண்மணியை வெகுவாக கவர்ந்தது.

 

“கண்ணு…நாம ரெண்டுபேரும் அந்தா இருக்கு பாத்தியா பனமரம் அதுல ஒரு சோடி கிளிக இருக்கு..அதுக மாதிரி சொகமா சந்தோசமா எப்பவும் வாழணும் செரியா?”  என்றவனின் விரல்களைக் கோர்த்துக்கொண்டு தன் எதிர்காலக் கனவுக்குள் வீழ்ந்தாள்.

 

ஓர் அந்தியில் யாருமற்ற வாழைத்தோப்பிற்குள் தன்னை முழுவதுமாக அவனுக்குக் கொடுத்தாள் கண்மணி.

 

3.

கண்மணியை ஊரெங்கும் தேடியும் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் கண்மணியின் அப்பா.  தங்கதுரையை பிடித்து விசாரித்தார்கள். அவன் தானும் கண்மணியைத் தேடுவதாகவும் அவள் இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகவும் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். தலையில் அடிக்கும் அவனது கைகளை விலக்கிவிட்டு அவனது செவிட்டில் அறைந்தார் ஏட்டு ஆத்திமுத்து.

 

“யோல கிறுக்கு மூதி…பொட்டப்புள்ளய காங்கலன்னுட்டு அவிய சொல்லுதாவ…ஒங்கூடதான் அவள கடைசியா பார்த்ததா சேதி…நீ என்னம்ல தூக்குல தொங்கப்போறம்னுட்டு அழுவுத? அவ சோலிய கீலிய முடிச்சிப்புட்டியோ?”  கேட்டுக்கொண்டே மேலும் இரண்டு அடிகளை இறக்கினார் ஏட்டு.

 

“யண்ணே எனக்கெதுவுமே தெரியாதுண்ணே…கட்டுனா அவளத்தான் கட்டணும்னு கெடக்கேன்…கண்டுபிடிச்சு கொடுத்துருங்கண்ணே”

 

“ஆமா இவரு பெரிய இவரு…அவளத்தான் கட்டுவாராம்லா…செருப்பால அடி…அவ மைனர் தெரியுமுல்லா…அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்ட செத்த மூதி…”  மீண்டும் ஒரு அறை கன்னத்தில் விழுந்தது.

 

“யண்ணே நீங்க வீட்டுக்கு போங்க…ஒங்க மொவள சீக்கிரம் கண்டுபிடிச்சுரலாம்” என்று நம்பிக்கையூட்டி கண்மணியின் அப்பாவை அனுப்பி வைத்தார் ஆத்திமுத்து.  தங்கதுரையிடம் எவ்வளவு விசாரித்தும் கண்மணி காணாமல் போனதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். தங்கதுரையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ஊருக்குள் ‘பெரியவர்’ என்று அழைக்கப்படும் அவனது அப்பா.

 

நாட்கள் நகர்ந்தன. கண்மணி கிடைக்கவேயில்லை.

 

கண்மணியின் அம்மாவும் அப்பாவும் ஜோஸியரிடம் சென்றார்கள். அவர் இன்றிலிருந்து ஏழாவது நாள் அல்லது ஏழாவது மாதம் கண்மணி வீடு திரும்புவாள் என்றார். வீடு திரும்பும் வழியெங்கும் அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.

 

ஏழு நாட்கள் ஏழு மாதங்களாகி ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. மகள் தொலைந்த துக்கத்தில் அம்மா நோய்மையில் விழுந்தாள். எப்போதும் வாசலையே பார்த்தபடி கட்டிலில் கிடந்தாள். பேச்சும் நின்றுபோனது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அம்மாவிடமிருந்து ஒரு சொல் கூட வெளிப்படவில்லை. அம்மாவின் அருகிலேயே கிடந்தது செவலை.

 

4.

கண்மணியின் அம்மா மெளனித்த பிறகு அப்பாவுக்கு பேசுவதற்கென்று யாருமில்லை. தலைப்பாகைக்குள் வைத்திருக்கும் சுருட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு கழுதைகளுடன் அதிகாலை கிளம்பிவிட்டார். நேராக வாய்க்காலுக்குப் போனவுடன் கழுதைகள் சுமந்து வந்த பொதியை வாய்க்காலோரம் இறக்கி வைத்துவிட்டு சூரியன் எழும் திசை நோக்கி பார்த்தபடி உட்கார்ந்துகொண்டார். அதிகாலைச் சூரியனின் கதிர்கள் உடலெங்கும் பட்டுத் தெறித்தன. கழுதைகள் அருகே புற்களை மேய்தபடி நின்றிருந்தன. அப்பாவின் கண்களோரம் துளிர்க்க ஆரம்பித்தது கண்ணீர்.

 

“யப்பு கண்மணி என்னைய மன்னிச்சிரு ஆத்தா, தப்புப்பண்ணிட்டேம்ப்பு தப்பு பண்ணிட்டேன்” என்று முணுமுணுத்து துடித்தன அப்பாவின் உதடுகள்.

 

வாய்க்காலில் ஓடுகின்ற தண்ணீரின் மேல் மிளிர்ந்தபடி நகர்ந்துகொண்டிருக்கும் வெயிலை பார்த்தவரின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

 

 

 

 

5.

கள்ளுக்கடையிலிருந்து வெளி வந்த கண்மணியின் அப்பாவை இரண்டு பேர் இருட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள். ஆறடி உயர காம்பவுண்ட் சுவரின் நடுவே அமைந்திருக்கும் பெரிய வீடு அது. அவ்வீட்டின் வளவில் நின்றிருந்த பெரியவர் ஓங்கி மிதித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார் அப்பா. தடுமாறி எழுந்து நின்றவரின் கைகளை பின்புறமாக கட்டினர் அந்த இருவர்.

 

குரலை உயர்த்தியபடி பேசத் துவங்கினார் அந்தப் பெரியவர்.

 

“கோட்டாளம், நான் யாரு என் சாதிசனம் என்னன்னு ஒனக்குத் தெரியும், ஆனா ஒம் மவளுக்கு அது தெரியல பாத்தியா…எம் மொவன்கூடல்லா சுத்துதா. நேத்து தேரிக்காட்டுலயும் முந்தா நேத்து வாழைத்தோப்புலயும் எம்மவங்கூட சுத்துனதா கேள்வி.. நீ என்ன செய்யுதன்னா, நேரா வூட்டுக்குப் போயி அவ கால முறிச்சு மொடமாக்கிப் போட்டுரு. பொறவு எம்மவனும் அவள எட்டிப்பாக்க மாட்டான். என்ன நாஞ் சொல்லுறது ஒம் மண்டையல ஏறுதா?” 

 

அப்பாவின் உடல் நடுங்கியது, வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. பேசுவதற்கு நா எழவில்லை. குடித்திருந்த கள்ளின் போதை தெளிந்துவிட்டது போலிருந்தது.

 

 

“ஐயா நீங்க சொல்லுற சேதி எல்லாமே புதுசா இருக்குங்க…எம் மொவ பச்சப்புள்ள…வயசுக்கு வந்து மூணுமாசங்கூட ஆவல..அவள வேணும்னா எந்தங்கச்சி ஊருக்கு அனுப்பி வச்சுப்புடுதேன்…ஆனா காலை ஒடைக்க மட்டும் சொல்லாதீங்க சாமீ”  அப்பாவின் குரல் உடைந்து சொற்கள் தடுமாறின.

 

“பச்சப்புள்ளங்க… வயசுக்கு வந்துட்டாங்க…வயசுக்கு வந்தப் பொறவு என்னவே பச்சப்புள்ள? சரி நீ காலை ஒடைக்க வேண்டாம், நாங்க பாத்துக்கிடுதோம்”  சொல்லிவிட்டு அந்த இருவரையும் பக்கத்தில் அழைத்து மெதுவாக ஏதோ அவர்களிடம் சொன்னார். அவர்கள் தலையாட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்து இருளுக்குள் மறைந்தார்கள்.

 

“ஐயா…மன்னிச்சு வுட்டுருங்க எசமான்…எம்புள்ளய ஒண்ணுஞ் செஞ்சிப்புடாதீங்க…நாங்க வேணும்னா ஊரைக் காலி பண்ணிக்கிடுதோம்”

 

“இந்த வாயி மயித்துக்கு ஒண்ணுங் கொறச்சல் இல்ல…நீ ஊரை காலி பண்ணிக்கிட்டா எவம்ல ஊருத்துணிய தொவைப்பான்…நாங்க அழுக்குச் சட்டையப் போட்டுக்கிட்டு லாந்தணுமோ? செருக்குயுள்ளா…பொத்திகிட்டு நில்லு. இப்ப ஒம்மவ காலை ஒம்முன்னாலயே ஒடைக்கேனா இல்லியான்னுட்டு பாரு…” கர்ஜித்தார் பெரியவர். அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

 

கண்மணியின் வாயில் துணியால் கட்டி இழுத்துக்கொண்டு வந்தார்கள். மிரட்சியில் அவளது கண்கள் துடித்தன. கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு நிற்கும் தன் அப்பாவைப் பார்த்தவுடன் திமிறியவளை அந்த இருவரும் பிடித்துக்கொண்டார்கள்.

 

பெரியவர் தன் இடக்கையால் அவளது முகத்தை பிடித்து மேல் உயர்த்தினார்.

 

“சும்மாவாம்ல எம் மவன் இவ பின்னால போயிருக்கான்…வக்காலி நல்லாத்தாம்ல இருக்கா ஒம்மொவா…இவ கால மொடமாக்குறதுக்கு பதிலா…” அவர் சொல்லி முடிப்பதற்குள் “யம்மே” என்றோர் அலறல் சத்தம் கேட்டது.

 

கண்மணியின் இடதுபுறம் நின்றிருந்தவனின் வலது காலைக் கடித்து இழுத்தபடி உறுமிக்கொண்டு நின்றது செவலை. அவன் காலை உதறிவிட்டு நொண்டியபடியே ஓடத்துவங்கினான். அவன் ஓடுவதைக் கண்ட இரண்டாமவன் தன் காலைக் காப்பாற்றிக்கொள்ள மறுபுறம் இருளுக்குள் ஓடி மறைந்தான். செவலை வாயில் வழிகின்ற இரத்தத்துடன் பெரியவரை நோக்கி முன்னேறியது.

 

நாயைக் கண்டவுடன் சுதாரித்தவர், வேட்டியை இறுகக் கட்டியிருந்த பெல்ட்டை உருவி அதை நோக்கி வீசினார். பெல்ட்டின் ஒரு முனை நாயின் முகத்தில் பட்ட மறுவினாடி வலி தாளாமல் பெருங்குரலெடுத்து கத்தியபடி பின் வாங்கியது செவலை. அதற்குள் தன் வாயில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து எறிந்துவிட்டு அப்பாவின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டாள் கண்மணி.

 

“நாய ஏவுதியளா…சாவுங்கல” என்றபடி கண்மணியை நோக்கி கையை உயர்த்தியபடி முன்னால் ஓர் அடி எடுத்து வைத்த பெரியவரை நோக்கி மீண்டும் முன்னேறி ஓடி வந்து பாய்ந்தது செவலை. அவர் சுதாரிப்பதற்குள் அவரது வலது கையைக் கடித்து இழுத்தது. வலி தாளாமல் சரிந்தவர் சத்தமிட்டு கத்தியதில் அக்கம்பக்கத்திலிருந்து அரவம் கேட்டது. இதற்கு மேல் இங்கே இருக்கக்கூடாது என்றபடி கண்மணியைக் கூட்டிக்கொண்டு அந்த வீட்டின் பின்கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார் அப்பா. வாயெங்கும் இரத்தம் வடிய அவர்களைப் பின்தொடர்ந்தது செவலை.

 

அம்மாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் அவள் பயந்துவிடுவார் எனக் கண்மணியிடம் சொன்னவர் வீட்டிற்குள் வந்தததும் சிறியதொரு பையில் கண்மணியின் உடைகளை எடுத்துவைத்தார். அம்மா அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

 

கொஞ்சம் பணத்தை அவள் கையில் திணித்தபோது ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றிருந்தாள் கண்மணி.

 

“எதுக்குப்பா இதெல்லாம்”

 

“இன்னிக்கு நம்ம செவலை கடிச்சது ஊர் பெரியவருப்பு…காலையில மொத பொணம் நீதான்…இப்பவே நீ ஊரைவிட்டு போவணும்…இன்னும் செத்த நேரத்துல மொத பஸ்ஸு வந்திரும்…நேரா தூத்துக்குடில போயி எறங்கி அங்கயிருந்து பஸ்ஸ புடுச்சி பழனிக்கு போயிருப்பு…பச்சைமுத்து மாமா வூடு தெரியும்லா…பழனி பஸ் ஸ்டாண்டலிருந்து நடந்தா நாலு நிமிசந்தான்…அங்க போயி இருந்துக்க…நான் ரெண்டு நாளுல வந்து பாக்கேன். செரியா?” 

 

அவள் அதற்கு உடன்படவில்லை. இளம் ரத்தம் தன் மீது என்ன தவறு எனக் கேள்வி கேட்டது. அப்பாவுக்கு புரியவைக்க நேரமில்லை. நேராக பஸ்ஸ்டாண்டிற்கு அழைத்து வந்து தூத்துக்குடி செல்லும் அதிகாலைப் பேருந்தில் கண்மணியை ஏற்றிவிட்டார். செவலை பேருந்தின் பின்னால் கொஞ்ச தூரம் ஓடி பின் முடியாமல் மூச்சிரைத்தபடி நின்றிருந்தது.

 

6.

கண்மணியை இரண்டு நாட்களாக காணாமல் ஊரெங்கும் பேச்சாக இருந்தது. அவளது வீட்டிலிருக்கும் நாயும் பூனையுமே சோர்வுடன் இருப்பதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். அதிகாலையில் வாசலுக்கு நீர் தெளிக்க எழுவது வழக்கம், அன்றும் அதிகாலையில் எழுந்து வெளியே சென்றவள் திரும்பி வரவேயில்லை என்றபடி முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் கண்மணியின் அம்மா. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கண்ணாயிரம் தன் வேட்டி மடிப்பிலிருந்த மூக்குப்பொடி மட்டையைத் திறந்து கொஞ்சமாய் பொடியை எடுத்து நாசிக்குள் உறிஞ்சியபடி தன் பேச்சைத் துவங்கினார்.

 

“எதுக்குங் கவலப்படாதிய…அவ என்ன சின்னப் புள்ளயா…சேக்காளி வீட்டுக்கு பக்கத்தூருக்கு எங்கயாவது போயிருப்பா…”

 

“சேக்காளி வீட்டுக்கு சொல்லாமப் போவாளா…அப்படியே போனாலும் ரெண்டு நாளா அங்க என்ன சோலி கெடக்கு?…கொஞ்சம் யோசிச்சு பேசுங்க அண்ணாச்சி”  வெற்றுடம்புடன் சாரத்தைக் கட்டிக்கொண்டு தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்தபடியே கண்ணாயிரம் பேசி முடிக்கும் முன்பே இடைமறித்தார் பக்கத்துவீட்டு மாரி அண்ணன்.

 

கண்மணியின் அப்பா எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவரது காலை தன்னுடலால் உரசியபடி நிற்கும் பூனையின் மீது அவரது கண்கள் நிலைத்திருந்தன. இந்த இரண்டு நாட்களில் ஊரிலுள்ள பாதிபேர் வீட்டிற்கு வருவதும் தங்களது கருத்தைச் சொல்லிச் செல்வதும் வாடிக்கையாகியிருந்தது. சிலர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். சிலர் அவள் வெளிக்குப் போகும் இடத்தில் காத்துக் கருப்பு அடித்திருக்கும் என்றெல்லாம் பயமுறுத்தியிருந்தார்கள்.

 

“எம்புள்ள எங்கப் போச்சுன்னு தெரியலையே…ரெண்டு நாளா கெடந்து புலம்புதேன் அந்தச் சாமிக்கும் காது கேக்கல…இங்க இருக்கறவியளுக்கும் காது கேக்க மாட்டிக்கி…” சாடைமாடையாக அப்பாவைக் குத்திக்காண்பித்தாள் அம்மா.

 

ஊர் முழுவதும் தேடிப்பார்த்தாயிற்று. ஊர் எல்லையிலிருக்கும் தூர்ந்த கிணற்றிலும்கூட பார்த்தாகிவிட்டது. ஊரைச் சுற்றியிருக்கும் குளம், குட்டை, வாய்க்காலிலும் சல்லடைபோட்டு சலித்தாகிவிட்டது. பக்கத்தூரிலிருக்கும் ரயில் நிலையம், தண்டவாளம் எனத் தேடாத இடமில்லை. அதெப்படி ஒரு பதின்ம வயதுப் பெண் திடீரென்று மாயமாய் மறைந்துவிடுவாள் என்பது அம்மாவுக்குப் புதிராகவே இருந்தது.

 

அம்மாவிடம் விஷயத்தைச் சொல்வதா வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே அப்பாவின் இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. பெரியவர் நாய்க்கடி வைத்தியத்திற்காக வெளியூர் சென்றிருப்பதாக பேசிக்கொண்டார்கள். இனி கண்மணியைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்த அப்பா பழனிக்குப் போனார்.

 

“என்னண்ணே சொல்லுதிய…கண்மணிய பழனிக்கு அனுப்பிவிட்டியளா…அவ இங்க வரவே இல்லயே” பச்சைமுத்து சொன்னபோது அப்பா உடைந்து போனார். தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

 

 

7.

நினைவிலிருந்து மீண்ட கண்மணியின் அப்பா, துணிகளை துவைத்து, உலர்த்தி மூட்டையாகக் கட்டி கழுதைகள் மீது ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பும் வழியில் அவரைக் கடந்து சென்றது பச்சைநிற அம்பாசிடர் கார். அதன் பின்புற சன்னல் வழியே கழுதைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சிரித்தாள் சிறுமியொருத்தி. கண்மணி இருந்திருந்தால் தனக்கும் இப்படியொரு பெயர்த்தி இருந்திருப்பாளே என்கிற வேதனை அப்பாவின் முகத்தில் தென்பட்டது. தன் வீட்டை நோக்கி கழுதைகளைப் பத்திக்கொண்டே சென்றார் அப்பா.

 

கார் நேராக பெரியவரின் வீட்டு முன்பாக நின்றது. அதிலிருந்து தன் மனைவி மகளுடன் இறங்கிய தங்கதுரையை கட்டிப்பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பெரியவர்.

 

சிறுமி ஓடிச்சென்று பெரியவரின் வேட்டியைப் பற்றி இழுத்தாள். அவர் அவளைத் தூக்கிக் கொஞ்சியபடியே வீட்டிற்குள் நுழைந்தார். சிறுமி அவரிடமிருந்து இறங்கி வீடெங்கும் குதியாட்டம் போட்டாள். சிறிதுநேரத்தில் சிறுமியை அழைத்துக்கொண்டு தன் பண்ணைத் தோட்டத்திற்குச் சென்றார் பெரியவர். வீட்டிலிருந்து ஐந்துகிலோமீட்டர் தொலைவில் ஊருக்கு சற்று வெளியே அமைந்திருந்தது அந்த மிகப்பெரிய தோட்டம். மாமரங்களும், புளியமரங்களும் அடர்ந்திருந்தன. பெரியதொரு கொடுக்கிக் கம்பை எடுத்து கொடுக்காப்புளி மரத்தில் சிறுமிக்காக சில காய்களை பறித்துப்போட்டார் பெரியவர். அவள் ஆசையுடன் அதை வாங்கித் தின்ன ஆரம்பித்தாள். பெரியவரின் தோளிலிருந்து குதித்தவள் தோட்டத்தின் உட்புறம் நிற்கும் செடிகளையும் மரங்களையும் பார்த்துக்கொண்டே ஓடினாள்.

 

பண்ணைத் தோட்டத்தின் பின்புற மூலையிலிருக்கும் சிறிய அறையைப் பார்த்துக்கொண்டே சிறிது நின்றாள். அந்த அறையிலிருந்து கேவல் ஒலி கேட்டது.

 

“கண்ணு இங்கெல்லாம் வரக்கூடாதுப்பு…வா தாத்தா ஒனக்கு பலூன் வாங்கி வச்சிருக்கேன்…ஊதித் தாரேன்” என்றபடி பெரியவர் அவளைத் தூக்கிக்கொண்டு நடந்தார். சிறுமியின் பார்வையோ அந்த மூலை அறையிலேயே நிலைத்திருந்தது.

 

அந்த அழுக்கடைந்த அறைக்குள் ஒடுங்கியிருந்த பெண் எப்போது அறைக்கதவு திறக்கும் தனக்கான உணவுத் தட்டு எப்போது வருமென கால்களில் கட்டியிருக்கும் இரும்புச் சங்கிலியை பிடித்து உருட்டிக்கொண்டே கதவிடுக்கில் கசியும் சிறுவெளிச்சத்தைப் பார்த்தபடி காத்திருந்தாள்.

 

பெரியவர் சிறுமிக்கு பலூனை ஊதிக்கொடுத்துவிட்டு பண்ணைத் தோட்டத்தின் வேலையாளிடம்,

 

“பொட்ட நாயிக்கு இன்னும் சாப்பாடு வக்கிலியா இசக்கி?” என்றார்.

 

(முற்றும்)

மேலும் சில சிறுகதைகள்

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால்...

Read More
watercolor, eye, look-7993918.jpg

சித்திரைப்பூ

சித்திரைப்பூ   1. இப்படி ஒரு விடியலிருக்கும் என்று சித்திரைப்பூ நினைத்துப்பார்க்கவில்லை. அதிகாலை ஐந்து முப்பதுக்கு மொபைல் அலாரம் அடித்தபோது எழுந்தவள் மொபைல் டேட்டாவை உயிர்ப்பித்ததும் முகநூலுக்குள்...

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top