சின்னக்கிளி.குட்டியப்பன்
1.
ஆச்சி பேசுவதே அபூர்வம்.
அவளுக்கென இருக்கும் நார்க்கட்டிலை மாட்டுக்காடிக்கு அருகே போட்டுக்கொண்டு அதில்தான் முழுநேரமும் கிடப்பாள். அவர்கள் வீட்டின் பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் எந்நேரமும் பார்த்துக்கொண்டிருப்பாள். கன்னுக்குட்டியை கட்டியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே பஞ்சாரம் இருக்கும். பழுப்பும் வெண்மையும் கலந்த கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியுடன் மேய்ந்துவிட்டு கருக்கலில் பஞ்சாரத்தின் அருகில் வந்து சூழ்ந்து நின்று கொள்ளும். பெயர்த்தி இருவாட்சிதான் குருணையை பஞ்சாரத்தின் அருகே தினம் இருமுறை தூவி விடுவாள். குஞ்சுகள் தின்றது போக மிச்சமிருக்கும் குருணையை கொத்துவதற்காக சில சமயங்களில் அண்டங்காக்கையொன்று தத்தி தத்தி வரும்.
குருணையை கொத்திக்கொண்டே எப்பொழுதாவது கன்னுக்குட்டிக்கு அருகே காகம் சென்றுவிட்டால் உடனே ஆச்சி கட்டிலில் சாய்த்து வைத்திருக்கும் தென்னைமட்டையால் காகத்தை விரட்டுவாள். பசுமாடு ஒருமுறை ஆச்சியை நோக்கி திரும்பிவிட்டு மீண்டும் அசைபோடத் துவங்கும். ஆச்சிக்கு பசுவையும் கன்றையும் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது அது பட்சிகளாக இருந்தாலும் சரி பூச்சிகளாக இருந்தாலும் சரி. ஆச்சியின் பார்வை ஒரு மிகப்பெரும் ஆலத்தின் நிழல்போல. அதனடியில் எவ்வித தொந்தரவுகளுமின்றி அசைபோடுவார்கள் அம்மையும் பிள்ளையும்.
ஆச்சிக்கு குழந்தை இல்லாமல் போனதால் தன் அண்ணனின் கடைசி மகனை எடுத்து வளர்த்தாள். தாத்தாவும் ஆச்சியும் அவனைக் கொண்டாடினார்கள். யாராவது இது தத்துப்பிள்ளைதானே என்று முகத்திற்கு நேராக கேட்டுவிட்டால் அபூர்வமாக பேசும் ஆச்சியே ஆடித்தீர்த்துவிடுவாள்.
“மாருல பாலைக் குடிச்சு வளர்ந்தாதான் புள்ளயா, உசிரை ஊட்டி வளர்த்தாளும் புள்ளதான்” இடுப்பிலிருக்கும் கடைக்குட்டியை மேலும் இடக்கையால் இறுக்கி மாரோடு அணைத்துக்கொண்டு ஆச்சி சொல்லும்போது எதிர்பேச்சு பேச முடியாமல் போய்விடுவர் தத்துப்பிள்ளைதானே எனக் கேட்டவர்கள்.
குட்டியப்பனை அந்த வீடு சுமந்தது. அந்த வீட்டை குட்டியப்பன் சுமக்கும் வயதில்தான் வேட்டையும் அவன் வாழ்விற்குள் வந்தது. சிலோனிலிருந்து கப்பலில் தூத்துக்குடி வந்த ஒரு வெள்ளைக்காரனிடம் தாத்தா வாங்கி வைத்திருந்த துப்பாக்கிதான் குட்டியப்பனை விளையாட்டு சாமான்களை விட அதிகம் ஈர்த்தது. பதின் பருவத்திலேயே துப்பாக்கியை பழக்கிவிட்டார் தாத்தா, அவருக்கு அவன் எதைக்கேட்டாலும் அதற்கு இல்லை என ஒரு பதில் இருப்பதே தெரியாது. அவ்வளவு பிடிக்கும் குட்டியப்பனை.
தாத்தாவிடம் ஆச்சியும் ஒரு முறை சொல்லிப்பார்த்தாள்.
“எதை வெதைக்கிறமோ அதத்தான் அறுவடை செய்யமிடியும், குட்டியப்பனுக்கு வேட்டைய பழக்கிவிடுறது நல்லதான்னு தெரியல, நேத்து ஒரு மொசலை அடிச்சுட்டு வந்து சமைச்சுத்தாம்மேன்னு கேட்டான், அறுக்கும்போதுதான் அது சினை மொசலுன்னு தெரிஞ்சுது,இந்த பாவமெல்லாம் மொத்தமா சேர்ந்து எம்புள்ளைய ஏதாவது செஞ்சிருமோன்னு மனசு படபடன்னு அடிச்சிகிச்சு”
“கொன்னாப்பாவம் தின்னாப்போச்சுல்லா, நீ செத்த நேரம் எதயும் போட்டு குழப்பிக்காம சும்மா இரி, அவன் வயசுல நான் பாவநாசத்துல புலியையே சுட்டுருக்கேன், என்னை என்ன புலியா வந்து அடிச்சுப் போட்டுச்சுருச்சி? போயி புள்ளைக்கு மொளகு தூக்கலா மொசலுக்கறி வெச்சுக்கொடு” ஆச்சியை எதாவது சொல்லி அடக்கிவிடுவார் தாத்தா. ஆனாலும் மனசுக்குள் “யப்பா சொடலமாடா, எம்புள்ளைக்கு எதுவும் வராம பாத்துக்க” என்றுதான் தாத்தா நினைத்துக்கொள்வதாக ஆச்சி ஒருமுறை சொல்லியிருக்கிறாள்.
2.
பகலெல்லாம் இளங்காளையாய் ஊரைச் சுற்றிக்கொண்டும் இரவானதும் வேட்டைக்குப் போவதுமாய் இருந்தது குட்டியப்பனின் வாழ்வு. எவ்வளவு தொலைவில் விலங்குகள் இருந்தாலும் அவனுக்கு தென்பட்டுவிடும். இருளில் ஒளிரும் கண்களை வைத்தே அது வெளிமானா அல்லது காட்டுப்பூனையா என்பதை சொல்லிவிடும் அளவிற்கு வேட்டையில் தேர்ந்திருந்தான். அதிகாலை வீடு வரும்போது ஜீப்பின் பின்புறம் பெரியதொரு சாக்குப்பையில் உருப்படிகளை சுருட்டிக் கொண்டுவருவான், கூடவே துணைக்குஅவனது சேக்காளியில் ஒருவனும் வருவான். காட்டுப்பன்றி, விருவு, மரநாய், முயல் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆச்சிதான் அத்தனையும் சமைத்துக்கொடுப்பாள். குட்டியப்பனுக்கு விருவுக்கறி என்றால் உயிர். அதனை நன்றாக சுத்தம் செய்து வறுத்துக் கொடுத்தால் சோற்றைக்கூட துறந்துவிட்டு விருவுக்கறியை ஒரு பிடிபிடிப்பான்.
குட்டியப்பனின் கவனம் வேட்டையிலிருந்து பட்டைச்சாராயத்திற்கு மாறியதிலிருந்துதான் எல்லாமும் மாறிப்போனது. எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லிய தாத்தா முதல் முறையாக இதற்கு மறுப்பு சொன்னபோது அவன் கேட்கும் நிலையிலில்லை. அவரும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான் அவனாகவே சாராயத்தை விட்டுவிடுவான் என்று நினைத்துக்கொண்டு அடங்கிவிட்டார். ஆச்சியால்தான் அப்படி இருக்க முடியவில்லை. சாராயவாடையை முதன் முதலாக அவனது அழுக்குச்சட்டையில் அவள் முகர்ந்தபோதுதான் உடைந்தழுதாள்.
“யப்பு குடிய மட்டும் விட்டுருப்பு, நல்லாயிருப்ப” தினம் பலமுறை அவனிடம் ஆச்சி சொன்னபோதும் அவனுக்கு அது பெரியதாகவே தெரியாமல் போனது. குட்டியப்பனுக்கு அவசரமாக பெண் பார்த்து கட்டி வைத்தாள் ஆச்சி. அவனுக்கு அதுவும் ஒரு பொருட்டில்லை என்பது திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்த அவனது குடிப்பழக்கத்திலிருந்து தெரியவந்தது. வயதும் முதுமையும் தள்ளாட்டத்தை ஆச்சியின் மீது திணித்ததில் படிக்கட்டில் இறங்கும்போது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்துபோனது. சமையல் அறைக்கு அருகில் அவளுக்கென்று ஓர் அறையை கட்டிக்கொடுத்தான் குட்டியப்பன். அதில் முடங்கிக் கிடந்தாள் ஆச்சி. குட்டியப்பனுக்கு வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடையொன்றை வைத்துக்கொடுத்துவிட்டுதான் இறந்துபோனார் தாத்தா. அந்த கடைக்கும் போகாமல் கள்ளுக்கடையிலும் சாராயக்கடையிலுமே கிடந்தான் குட்டியப்பன். அம்மா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் எதுவும் அவனது செவிகளில் ஏறுவதாயில்லை. சாராயத்தின் வாசனையை விட்டு வெளியே வரவும்முடியவில்லை. கடையை மூட வேண்டியதாயிற்று.
அம்மாவின் நகையை அடமானம் வைத்து பசுவொன்றை வாங்கிவந்தவன், அந்தப் பாலை விற்று வாழும்படியாயிற்று. ஆச்சி அப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தாள் குடியை விட்டால்தான் மீண்டெழ முடியும் என்று. கேட்காத காதுகளை விடவும் கொடூரமானது கேட்காதது போல் நடிக்கும் காதுகள். அது ஆச்சியின் எந்தவொரு நல்ல வார்த்தைகளையும் அவனுள் அனுமதித்ததேயில்லை.
“யம்மே சும்மா இரும்மே எல்லாஞ் சரியாவும், எடுக்கறப்ப மாத்துத்துணிகூட இல்லாம எடுத்துக்கிடுவான், கொடுக்கறப்ப கூரைய பிச்சிகிட்டு குடுப்பான் மேல இருக்கறவன், நீ பொலம்பாம நிம்மதியா இரி” என்பவனிடம் என்ன சொல்லி புரியவைப்பது என்று நினைத்தபடியே இரவெல்லாம் உறக்கமின்றி தவிப்பாள் ஆச்சி.
குட்டியபன்னுக்கும் ஆச்சி மீது அளவற்ற ப்ரியமிருந்தது. சின்னக்கிளி என்கிற ஆச்சியின் பெயரைத்தான் சி என்று இனிஷியலாக எழுதுவான். தாத்தா ஆச்சர்யப்பட்டு கேட்பார்
“ஆயிரந்தான் ஆத்தா மேல உசிரா இருந்தாலும் இனிஷியலுக்கு எம்பேரத்தானப்பு போடணும்”
“அம்மதான் மூத்திரம் பீ அள்ளி என்னை வளர்த்தா, நீ சிலோனுக்கும் ஊருக்கும்தான அலைஞ்சு திரிஞ்ச, இனிஷயலுன்னா அது சின்னக்கிளிதான்” ஆச்சியை பேர் சொல்லி அழைப்பது அவனுக்கு பிடிக்கும், அது ஆச்சிக்கும் பிடிக்கும்.
“யய்யா அவ பேர இனிஷியலா மட்டுந்தான் போடுவேன்னு பார்த்தா பேரச்சொல்லி கூப்பிடுத, அம்மான்னு கூப்பிடுய்யா” செல்லமாக கடிந்துகொள்வார் தாத்தா.
“எம்புள்ள என்னிய பேரச்சொல்லி கூப்பிடாம வேறயாரு கூப்பிடுவா, நீ கூப்பிடுப்பு” சொல்லிவிட்டு தாத்தாவைப் பார்த்துச் சிரிப்பாள் ஆச்சி.
“ஆத்தாளும் மவனும் சேந்துகிட்டு என்னிய பதராக்கி ஊதிபுட்டியளே” என்பார் தாத்தா.
3.
குட்டியப்பன் கேட்டைத் திறந்தால் மட்டும் “ம்மா” என்று கத்தும் பசு.வேறு யார் திறந்தாலும் அமைதியாய் அசைபோட்டுக்கொண்டிருக்கும். அவனும் அதற்கு வைக்கோல் போடும்போதெல்லாம் அதன் நெற்றியைத் தடவிக்கொடுப்பான். யாருக்கும் புரியாத பாஷையில் அவன் அந்தப் பசுவிடம் பேசுவதாகத்தான் ஆச்சி நினைத்துக்கொண்டிருந்தாள். அவனும் நெடுநேரம் மாட்டுக்காடியில்தான் இருந்தான். சாராயவாடை போகும்வரை அங்குதான் இருப்பான் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். பசுவுக்கு கொடிமுல்லை என்று பெயரிட்டிருந்தான். அவன் கொடிமுல்லை என்று கூப்பிடும்போதெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு அசைந்தாடியபடியே நிற்கும். ஆச்சிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தாலும் குட்டியப்பனின் சந்தோஷம் மட்டும் போதுமென்றிருப்பாள்.
ஒரு மழை நாளின் இரவில் குட்டியப்பன் வீடு வரவில்லை. அம்மையும் மூத்த அக்காளும் ஊரெல்லாம் தேடியும் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆச்சிதான் அம்மையிடம் அந்ந யோசனையைச் சொன்னாள்.
“யம்மாளு நீ ஒண்ணுங் கலங்காத, நம்ம கொடிமுல்லைய அவுத்துவுட்டுப் பாரு அது ஒன்னிய குட்டியப்புகிட்ட கூட்டிக்கிட்டிப் போவுதா இல்லையான்னுட்டு”
கொடிமுல்லை ஓட்டமும் நடையுமாய் அம்மன்கோவிலுக்கு பின்னாலிருக்கும் தோட்டத்தின் முன் சென்று நின்றது. அங்குதான் குட்டியப்பனை பெற்றெடுத்த அம்மையின் சமாதி இருந்தது. அந்தத் தோட்டதில்தான் விழுந்து கிடந்தான். வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தவுடன் ஆச்சியிடம் மூத்த அக்காள் விசயத்தைச் சொன்னாள்.
“எம்புள்ள எங்க மைனிய பாக்க போயிட்டானாக்கும், நா என்ன கொற வெச்சேன்னு தெரியலயே” ஆச்சி அன்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள். ஆச்சியை அப்படி அழுது நாங்கள் பார்த்ததில்லை.
“நீங்க கெடந்து அழுவாதீய குடிச்சா எங்க போறோம் என்ன செய்யிதோமுன்னு தெரியுமாக்கும், அவிய தோட்டத்துக்கு சேக்காளியோட சீட்டாட கூட போயிருக்கலாமுல்லா” அம்மா எவ்வளவோ தேற்றிப் பார்த்தாள். ஆச்சியின் கண்ணீர்தான் நின்றதே தவிர அழுகை நிற்கவில்லை.
4.
ஆச்சியின் கட்டில் அருகே எப்போதும் முக்காலியொன்று இருக்கும். கால் நடக்க முடியாமல் போனதற்கு பின் அந்த முக்காலியை அடிமேல் அடிவைத்து நகர்த்திக்கொண்டே வீட்டிற்குள் நடமாடுவாள். குட்டியப்பன் டவுணுக்கு போய்விட்டு வரும்போதெல்லாம் ஆச்சிக்கு ஏதாவதொரு இனிப்புப்பண்டம் வாங்கிவருவான். முட்டைகோஸ், முந்திரிகொத்து,ஏணிப்படிமிட்டாய்,பூந்தி என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இனிப்போடுதான் ஆச்சியிடம் போவான்.
“யம்மே நாசரேத் போயிருந்தேன் ஒனக்குப் பிடிக்குமுன்னுட்டு முந்திரிகொத்து வாங்கிட்டுவந்தேன், நாலு எடுத்து தின்னுப்பாரு சும்மா தேனால்லா இனிக்கி” முந்திரிக்கொத்தை கொடுத்துவிட்டு ஆச்சியின் கால்மாட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொள்வான். ஆச்சியின் கால்களை எடுத்து தன் மடியில் வைத்து மெதுவாய் பிடித்துவிடுவான். அப்பொழுதெல்லாம் ஆச்சியின் முகத்தில் மலர்ச்சியும் பெருமையும் ஒன்றாய் குடிகொள்ளும்.
“யப்பு நீ எதுக்குப்பு காலைப் பிடிச்சுவிடுத, நீ போயி புள்ளைகளுக்கு முந்திரிகொத்தை கொடுப்பு, ஒன் நாலாவது மவ இருவாட்சிக்கு முந்திரிகொத்துன்னா உசிருல்லா”
“நான் காலை பிடிச்சுவிடாம வேறு யாரும்மே பிடிச்சுவுடுவா? நீ சொகமா இருந்தாத்தான எனக்கு சந்தோசம்?”
“யப்பு எனக்கென்னப்பு கொறச்சலு, நா நல்லாத்தான் இருக்கேன், நீ அந்த யழவெடுத்த குடிய மட்டும் விட்டிருப்பு” ஆச்சியின் இந்தவொரு வாசகத்திற்கு மட்டும் குட்டியப்பனிடம் என்றுமே பதிலில்லை. மடியிலிருந்த கால்களை எடுத்து படுக்கையில் வைத்துவிட்டு அவள் அறையை விட்டு வெளியே வந்தான். நேராக அழிக்கம்பிகள் செங்குத்தாக இருக்கும் கூடத்திற்கு வந்தான். அங்கிருந்து அந்தக் கம்பிகளின் இடைவெளி வழியே விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகன்கள் இருவரையும் பார்த்தான். காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது எனத்தோன்றியது. நேற்றுதான் திருமணம் ஆனது போலிருந்தது அதற்குள் ஆறு பிள்ளைகள். மூத்தவளுக்கும் கடைக்குட்டியும் பதினைந்து வருட வித்தியாசம். காலத்தின் முன் மாறாமல் இருப்பது தன் குடிப்பழக்கம் மட்டும்தானோ என்று நினைத்தவன் விழியோரம் துளிர்த்த நீரை துடைத்துவிட்டு முந்திரிகொத்தை எடுத்துக்கொண்டு பிள்ளைகள் விளையாடும் வேப்பமரத்தடிக்குச் சென்று ஒவ்வொருவருக்கும் அதைப் பிய்த்து வாயில் ஊட்டினான்.
கொடிமுல்லை அவனைக் கண்டவுடன் தலையை ஆட்டிக்கொண்டு சத்தமாக மூச்சுவிட்டது.
“உனக்கில்லாமலா, வாயத்தொர கொடி” என்றவாறு அதற்கும் கொஞ்சம் முந்திரிகொத்தை ஊட்டிவிட்டான். வேப்பங்காய்களை பொறுக்கிக்கொண்டிருந்த மூன்றாவது மகளிடம் தானும் அமர்ந்து காய்களை பொறுக்கி கூடையில் போட்டான். அப்பாவிடம் சாராயவாடை வருகிறதா என்று நாசியுயர்த்தி முகர்ந்து பார்த்தாள். வாடை இல்லை என்றதும் மலர்ச்சியுடன் அப்பாவுடன் சேர்ந்து காய்களை பொறுக்கினாள்.
4.
கன்னுக்குட்டியையும் பசுவையும் பார்த்துக்கொண்டிருந்த ஆச்சி வெகுநேரம் அப்படியே இருந்ததாக இருவாட்சிக்கு தோன்றியது. ஓடிச்சென்று பார்த்தவள் ஆச்சியிடம் எவ்வித அசைவும் இல்லை என்பது தெரிந்தவுடன் நேராக அம்மாவிடம் ஓடிச்சென்று விசயத்தை கூறினாள். அடுப்பாங்கரையில் அரிசி கழுவிக்கொண்டிருந்த அம்மா அப்படியே அதைப் போட்டுவிட்டு ஓடிவந்து ஆச்சியை உசுப்பினாள்.
“யத்தே யத்தே, எந்திங்க”
சற்று நேரம் கழித்து ஆச்சி கண்களைத் திறந்தாள். அம்மாவைப் பார்த்ததும் ஆச்சியின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“யத்தே ஏன் அழுவுறிய” அம்மா கேட்டதிற்கு பதிலேதும் சொல்லாமல் பசுவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் ஆச்சி. அசைபோட்டுக்கொண்டிருந்த பசுவின் அருகில் படுத்திருந்த கன்னுக்குட்டியிடம் எழுந்து சென்ற ஆச்சி வாஞ்சையுடன் அதன் நெற்றியைத் தடவிக்கொடுத்தாள். பின் மீண்டும் கட்டிலுக்குத் திரும்பியவள் கட்டிலில் சரிந்தாள்.
நீண்டதொரு கடற்கரை. அதில் தனியே நின்றிருந்தான் குட்டியப்பன். அவனைச் சுற்றிலும் நடனமிட்டுக்கொண்டிருந்தன ஆளுயர பாட்டில்கள். அதனுடன் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தான். கடல் அலையொன்று தன் கோரப் பற்களைக் காட்டியபடி அவனை நோக்கி வந்ததை அவன் அறியவில்லை. அவனது காலைப் பிடித்திழுத்து கடலுக்குள் வீசியது அந்தக் கோரப்பல் அலை. கடற்கரையிலிருந்த ஆச்சி ஓடிச் சென்று கடலுக்குள் குதித்தாள். திடுக்கிட்டு விழித்த ஆச்சிக்கு மூச்சிரைத்தது. குட்டியப்பன் இன்னும் வீடு திரும்பவில்லை.
அவனது வருகைக்காக காத்திருந்தாள்.
விளக்கு வைத்த பின்பும் குட்டியப்பன் வீடு திரும்பாததால் ஆச்சியின் முகம் கவலையில் வாடி இருந்தது. அன்றிரவு வீட்டிலிருந்த தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுத்த அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள்.
பதினாறு நாட்களுக்குப் பின் அம்மாவின் கட்டிலும் அதன் அருகே படுத்துறங்கும் கடைக்குட்டியின் கட்டிலும் இருக்கும் திசையை பார்த்தபடியே கிடந்தாள் ஆச்சி.
ஆச்சி பேசுவதே அபூர்வம்.
மேலும் சில சிறுகதைகள்
ஜடேஜாவைக் காதலித்தவள்
ஜடேஜாவைக் காதலித்தவள் 1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும்...
Read More