கடல் என்பது மிகப்பெரும் சிறை
மீன்கள் பாடுவதை கேட்டிருக்கிறாயா
அவை தனித்தனியாகவும்
மொத்தமாகவும் சேர்ந்து பாடுவதை
நான் கேட்டிருக்கிறேன்
அந்தப் பாடல்கள் அனைத்திலும்
வானமும்
மின்னும் நட்சத்திரங்களும்
மங்கிய நிலவும் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
ரகசியத்தை உனக்குச் சொல்லவா?
ஏன் எந்தவொரு பாடலிலும்
கடலும் அலையும் ஆமைகளும்
நண்டுகளும் இல்லை என்பதறிவாயா?
பன்னெடுங்காலமாய் மீன்களின் விறைத்த
பார்வையின் காரணம் யோசித்திருக்கிறாயா?
இல்லை.
மீன்கள் பாடுவதையே நான் கேட்டிராதபோது
அந்தப் பாடல்களின் அர்த்தம்
எனக்கெப்படித் தெரியும்?
நீயே அதன் காரணத்தையும் சொல்லிவிடு.
சரி
ஒரே வரியில் சொல்கிறேன் கேள்.
கடல் என்பது மிகப்பெரும் சிறை.
மேலும் சில கவிதைகள்
No posts found!