தேரி என்பது கடற்கரையோர பகுதிகளில் மணல் மேடுகளும் மண் குன்றுகளும் இணைந்து செம்மண் பூமியோடு கலந்த காணப்படுகிற நிலப்பரப்பு. இதில் பனை மரங்கள் அதிகமாக காணப்படும் தமிழ்நாட்டின் வங்க கடற்கரையோர நிலப்பரப்பில் தேரிகள் அதிகம் காணப்படுகின்றன தேரிகளை மையமாக வைத்து தமிழில் நாவல்கள் சிறுகதைகள் அதிகம் வெளிவந்தது இல்லை. இந்த நூல் தேரியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல்.
பல கவிதை நூல்களை எழுதியுள்ள எழுத்தாளரின் முதல் நாவல் இது.தனது மண் சார்ந்த படைப்பில் தான் வாழ்ந்த பகுதியின் தன்மையோடு பொருந்திய கதைக்களத்தில் தனது அனுபவங்களையும் பொருத்தி இந்நாவலை எழுதிமிருக்கிறார்.
தேரியில் வாழும் மக்களின் மனநிலை, மண் பரப்பிற்கு ஏற்ப செம்மண் பூமியில் நீர் கலந்தால் எவ்விதமான வேறுபாடும் இல்லாமல் மண் முழுவதுமாக தன்னை கரைத்துக் கொண்டு நீரோடு இணைந்து வாழுமோ அதே போல இந்தப் பகுதியின் மக்களும் தமது அன்பினால் ஒருவருக்கொருவர் எவ்விதம் அன்பு செலுத்துகின்றனர் என்பதை இந்த நாவல் எழுதிச் செல்கிறது.
சாதிக் கட்டமைப்புகள் எவ்விதம் மக்களின் அடி மனதில் ஓயாது குதித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளைப் போல தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும் காற்றின் வேகத்தை போல எண்ணற்ற வடுக்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும் சாதியின் கொடுங்கரங்கள் இன்றும் கிராமங்களில் பல்வேறு நிலைகளில் மனித மனங்களுக்குள் புகுந்து கொண்டு அவர்களை பலவிதமான இன்னல்களுக்கும் உட்படுத்திக் கொண்டே இருக்கின்றன என்பதையும் இக்கதை கோடிட்டுக் காட்டுகிறது.
ஒரு இயல்பான கிராமத்தில் சாதியை மையமாக வைத்து நிகழும் காதலும் காதல் சார்ந்த குடும்பமும் எவ்விதம் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்கிறது என்பதை அழகாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். மர்ம நாவலின் ஒவ்வொரு பக்கங்களும் அடுத்த வரியும் நகர்வும் எதை நோக்கிச் செல்லும் என்பதை கதையை வாசிக்கும் வாசகனுக்குத் தொடர்ச்சியாக திருப்பங்களை எதிர்நோக்கி இருக்கும்படி எழுதப்படும். அதைப்போல இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்தடுத்த நிகழ்வுகளை யூகிக்க முடியாத வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது.
செம்மண் நிலப்பரப்பில் நிகழும் இரண்டு தலைமுறைக் கதைகளை தனித்தனியான கதைக்களங்களாக எழுதிச் சென்று இறுதியில் அவற்றை இணைத்து ஒற்றைப் புள்ளியில் முடிவை அழகான திருப்பத்துடன் கொண்டு செல்கிறது நாவல். வந்தேறிகள் என்று அழைக்கப்படும் வெளியிலிருந்து வந்த மக்கள் அந்த கிராமத்தில் ஏற்கனவே வசித்துக் கொண்டிருக்கும் மக்களிலிருந்து எவ்வாறு பிரித்து எடுக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கான சமூக அங்கீகாரம் இறுதிவரை வழங்கப்படாமல் அடித்தட்டு நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டு அடிமைத்தனத்தை மேலும் மேலும் வளர்த்து வரும் சமுதாயத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நாவல்.
கழுதைகளை வைத்துக் கொண்டு தனது அன்றாட வாழ்வை நகர்த்தும் வறுமை நிலையில் தொழில் செய்யும் செல்லக்குட்டியை மையமாக வைத்து ஒரு கதையும் மேல் தட்டில் வளமாக வாழும் செவ்வந்தியை மையமாக வைத்து ஒரு கதையும் எழுதப்படுகிறது.இடையில் கிராம மக்களின் வெகுளித்தனமான மனப்பான்மையை எவ்வாறு தனக்குச் சாதகமாக பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்பதை காண ஒரு கதை மாந்தராக பொட்டம்மை என்ற கதாபாத்திரம் வருகிறது.அந்த ஊரில் அடிக்கடி ஆடுகள் திருடப்படுகின்றன. அதை யார் செய்தது என்ற தேடுதல் ஒரு பக்கமும் அந்த ஊரில் வாய் பேசாமல் ஒவ்வொருவருக்கும் வைத்தியம் பார்க்கும் பொட்டம்மை கதாபாத்திரம் மறுபக்கமும் மக்களின் அறியாமையை வெளிப்படுத்த காரணிகளாகின்றன.
செல்லக்குட்டியும் தங்கராணியும் காதலிக்கிறார்கள் .செவ்வந்தியும் சந்தோஷ்ராஜ்ம் காதலிக்கிறார்கள் இதில் செல்லக்குட்டி சந்தோசராஜ் வந்தேறிகள். அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் அந்த ஊரில் யாரிடமும் கிடைப்பதில்லை. ஆனால் மேல்தட்டு வர்க்கமான செவ்வந்தியும் தங்கராணியும் இவர்களை காதலிப்பதை அவர்கள் குடும்பம் எவ்விதம் கட்டுப்பாடுகளின் வழியாகவும் அடிமைத்தனத்தின் வழியாகவும் பிரிக்கிறது என்பதை கதை நிகழ்வு நாம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் எழுதிச் செல்கிறது. ஒரு கட்டத்தில் தங்கராணி காணாமல் போகிறார் வீட்டில் பாட்டியின் தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக செல்லக்குட்டி வெட்சியைத் திருமணம் செய்ய நேர்கிறது
அதேபோல சந்தோஷராஜுக்கும் செவ்வந்திக்கும் இடையிலான உறவில் செவ்வந்தி கர்ப்பம் அடைகிறார் குழந்தை பிறக்கிறது அதே சமயம் சந்தோஷராஜும் காணாமல் போகிறார் .இப்போது செவ்வந்தி வீட்டில் செவ்வந்திக்கு அதிகமான பலத்த காவல் போடப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்கிறார். இப்படியான நிகழ்வில் பல வருடங்களுக்குப் பிறகு தங்கராணி பற்றிய செய்தி செல்லக்குட்டிக்கு தெரிய வருகிறது செல்லக்குட்டி தங்கராணி செவ்வந்தி மூவருக்குமான உறவு என்ன என்பதை நாவலின் இறுதிப் பக்கங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் திருப்பத்துடனும் விடை கூறுகிறது.
இரண்டு பெரு முதலாளிகளின் தோப்புகளை கண்காணிப்பதற்காக செல்லக்குட்டியும் தங்கராணியின் அண்ணன் தங்கவேலுவும் பணியமர்த்தப்படுகிறார்கள். செல்லக்குட்டி தனது வேலையை செவ்வனே செய்து தோப்பை பல மடங்கு பெருக்கி மிகப்பெரிய சோலையாக மாற்றிக் காட்டுகிறார் .அதே சமயம் தங்கவேலுவின் தோப்பில் இரவில் திருட்டு மணல் அள்ளப்பட்டு யாருக்கும் தெரியாமல் அந்த வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் செல்லக்குட்டி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை அடிப்படையாக வைத்தும் தனது மனைவியின் நகைகளை வைத்தும் தான் வேலை பார்த்த தோப்பையே விலைக்கு வாங்கிக் கொள்கிறார்.
விதி யாரை விட்டது? அரசாங்கத்தின் நிலமெடுக்கும் திட்டத்தின் கீழ் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக செல்லக்குட்டியின் தோப்பு பறிபோகிறது செல்லக்குட்டியின் முதலாளியாக இருந்தவர் இந்தத் தகவலை செல்லக்குட்டியிடமிருந்து மறைத்து தனக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விற்று விடுகிறார்.அதை உணராமல் செல்லக்குட்டி தனது அத்தனை சந்தோஷங்களையும் இழந்து ஒரு பிடி மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்தபடி தனது வாழ்வின் நிலையாமையில் இருந்து மீண்டும் புதியதொரு வாழ்க்கைக்கு தயாராகிறார்.
இந்த நாவலில் கதை மாந்தர்களாக பல பேர் உலவினாலும் ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமான தளங்களில் நின்று கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றது. செல்லக்குட்டியின் நண்பர்களாக வரும் அசரியா, பாதாள முனி இருவரும் அவனுக்கு துன்பம் வரும் பொழுதும் உதவி செய்து அவனை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் அக்கறையோடு செயல்படுவது ஒரு நல்ல நட்பின் இலக்கணத்தை அவர்களுக்குள் எழுதிச் செல்கிறது. அதேபோல செல்லக்குட்டியின் மனைவி வெட்சி இந்த கதையின் மிகப்பெரிய தூண் எனலாம். ஒவ்வொரு முறையும் செல்லக்குட்டி துவண்டு விழும்போதும் அவனைத் தேற்றி இயற்கையின் அழகோடும் உயிரினங்களின் மீது தான் வைத்த பாசத்தோடும் இந்த உலகின் நீதிகளை எடுத்துச் சொல்லும் வெட்சி உண்மையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும் அன்பை, கருணையை விதைக்கும் தாயாகத்தான் தென்படுகிறார்
ஒரு கட்டத்தில் தங்கராணி மனநிலை தவறி அனாதை இல்லத்தில் விடப்படுகிறார். தனது கணவனின் முன்னாள் காதலி என்று தெரிந்தும் அவளை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து தனது குழந்தையைப் போல பேணிப் பாதுகாக்க கணவனுக்கு உத்தரவிடும் வெட்சியின் கதாபாத்திரத்தில் அழகாக வடித்துச் செல்லும் ஆசிரியர் செல்லக்குட்டியின் வாயிலாகவே அவளது பாதங்களுக்கு பூ போட்டு ஆராதனை செய்கிறார்.
வாழ்க்கை நம்மைத் தொடர்ச்சியாக உழைப்பை உண்மையுடன் செய்யும்படி செய்தாலும் ஒவ்வொருவரின் மனதிலும் முன்னேற வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டி விட்டாலும் காலம் நல்லவர்களை தொடர்ந்து சோதிக்கும் என்பதும் இதில் நட்சத்திரங்களின் மின்னுதலென தெளிவாகிறது. கடும் உழைப்பினாலும் மண் மீது தான் கொண்ட நேசத்தினாலும் முன்னேறிச் செல்லும் செல்லக்குட்டியின் வாழ்வில் ஒற்றை நொடி எல்லாவற்றையும் இழக்க வைத்து விடுகிறது.
மீண்டும் தனது உழைப்பை நிறுத்தி விடாமல் மண்ணின் வாசம் பிடித்தபடியே தனது கழுதையுடனும் ஆசை மனைவியுடனும் தனது பயணத்தை தொடர்கிறான் செல்லக்குட்டி .
மனித மனங்களில் உள்ளாடி நிற்கும் அன்பையும் கருணையையும் இந்த நாவல் அடிநாதமாய்க் கொண்டு விளக்கிச் செல்கிறது. அதேசமயம் தான் வாழ்வதற்காக தன்னைச் சுற்றி உள்ளவர்களை வீழ்த்தி முன்னேறிச் செல்லும் ஒரு சமூகமும் வஞ்சக எண்ணத்தாலும் சதிச் செயலாலும் இயற்கையை அழித்தபடி பயணிக்கும் மனிதர்களும் இந்நாளில் நமக்கு காணக் கிடைக்கிறார்கள்.
நாவலில் வரும் ஒவ்வொரு பெண்களும் தங்களைச் சார்ந்தவர்களை நல்லவிதமாக ஆளாக்கி சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல எவ்விதம் தம்மையே அர்ப்பணிக்கிறார்கள் என்பதும் அவர்களின் தாய்மை உணர்வென நமக்கு எடுத்துக்காட்டுகிறது பெண்களை இழிவுபடுத்துபவர்கள் கொடுங்கனவுகளின் வழியாக தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளும் நிலைக்கு செல்லப்படுவதும் கிராமத்தையே ஏமாற்றி தன் கைக்குள் அடைத்துக் கொண்ட வைத்தியன் இறுதியில் காணாமல் போவதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
நாவலில் நட்பின் இலக்கணம் அழகாக கட்டமைக்கப்பட்டு ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைப் பாதையில் சிறப்பான பயணங்களுக்கு நட்பை துணையாகக் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது. தாய்ப்பாசம், காதல் ,சாதிக் கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகள் ,அடிமைத்தனத்தின் இன்னல்கள் என பல்வேறு முடுச்சுகளை ஒன்றிணைத்து கரிசல் மண்ணின் ஈரத்துடனும் மணல் குன்றுகளின் உயரத்துடன் நாவல் சிறப்பான மனிதர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
-இளையவன் சிவா மடத்துக்குளம்