தேரி நாவல் விமர்சனம்

            தேரி நாவல் விமர்சனம்

                   ம.வடிவேல்முருகன்

அடர்ந்த செம்மண் பரப்பையும் அதனைச் சார்ந்து இயங்குகிற பல்லுயிர்களையும் களமாகக் கொண்டு தேரியில் வாழும் மக்களின் வாழ்வியலை எண்ணி எண்ணிப் பொறுக்கிக் கோர்த்துக் கொடுத்த இந்நூல் இலக்கிய உலகிற்கு ஓர் ஆரம்;தேரி இலக்கியம்.

 

எழவெடுத்த சாதியை மண்டைக்குள் நுழைய விட்டுக் கொண்ட மேல் சாதியினர் மாந்தநேயத்தை கோரப் பற்களால் கிழித்து, கொடுமையும் கொலையும் வரிசை போட்டு, கீழ் சாதியினரை உயிரோடு சவக்குழியில் தள்ளி மூடும் அவலக் காட்சிகளில் ஆசிரியர் உள்ளம் நைந்து எழுதியிருக்கிறார். அதற்காக ஒற்றைப் பனை மரத்தின் கீழ் நீல நிறப் பெண் முகத்தில் உறுப்புகள் எதுவும் அற்று கண் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து, கண்ணீர் மட்டும் வடிந்து வருவதாக காட்டும் கனவுக் கற்பனை, படிப்பவர் மனதில் அது உருவாக்குகின்ற பயம், நாவலில் அடுத்தடுத்த அத்தியாயத்தில்  அக்கனவின் தேவை உலகத் தரத்திலானது. பெரும்பாலும் நாவல்களில் சாதிய வன்மம் குறிப்பிடப்படும் போது கீழ் சாதியின் பெயரை எளிதாகக் குறிப்பிடக்கூடிய ஆசிரியர்கள் ஆதிக்க சாதியின் பெயரை குறிப்பிடுவதில்லை, ஆதிக்க சாதிகள் பல. ஆனால் அவைகளின் குணம் ஒன்றே என்பது ஆசிரியர் குறிப்பாக எண்ணத் தோன்றுகிறது.

தேரி நிலத்தின் தாது மணல் கொள்ளை, நிலத்தடி நீர், அதையும் தாண்டி நிலமே கொள்ளை போவதை காட்சிப்படுத்துவதற்கு, பிரமிக்கத்தக்க துணிவு வேண்டும். அதன் தொடர் கருத்தாக தேரி நிலத்தின் வளமும், பல்லுயிர்களும், மக்களும், ரணவதையில் சிக்கவுள்ள கொடுமைக்கான அபாய சங்கை ஊதி மண் காக்கும் மக்கள் போருக்கு எழுப்புகிறார்; ஆனால் எல்லோருக்கும் விடிவதில்லையே? அதற்கான உணர்வுகள் படிப்பவர்கள் மனதில் எழுவதை தடுக்க முடியாது தான்.

 

தொம்மை அண்ணாச்சியின் வாழைத் தோட்டத்தை அழித்து, நிலத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவரை  நாண்டு கொண்டு சாகவிட்ட தேரி நிலத்தின் ஆன்மா களியாட்டமாடி சிவப்பாக விகசித்து விரிவதைக் காட்டுகிறார்.

 

தேரி மண்ணில் விளங்கும் சம்பிரதாயம், நம்பிக்கைகள், பொட்டம்மையின் மந்திர தந்திரங்கள் மூலமும், வேதக் கோயிலுக்கு வழங்கும் கொடை, ஊர் கோவிலுக்கு வழங்கும் கொடை, கனவில் வரும் ஒத்தைப் பனைமரப்  பெண்ணுக்கு சடங்கு கழிக்க வைத்தல் மூலமும் ஆசிரியர் காட்டித் தருகிறார்.

 

கழுதைகளுக்கும் வண்ணாக்குடிகளுக்கும் இடையேயான உறவானது பொருளியலாக, அழகியலாக, உணர்வியலாக ருசுவான ஒன்று; பிரிந்தால் ஒன்றால் மற்றது வாடும். வண்ணார்குடியின் வீட்டுப் பிள்ளைகள் கழுதைகள். கதையின் இறுதியில் கழுதைக் குட்டிகள் செல்லக்குட்டியின் காலை உரசிக் கொண்டு நின்றது சான்று.

 

மேட்டுக்குடியினரின் ஆதிக்க உணர்வுக்கு நிலைக்களமாக உள்ளது நிலவுடமைப் பொருளாதாரம் என்பதை வண்ணார்குடிகள் வந்தேறிகள் என்றழைக்கும் கூர்மையான சொல்லாடல் மூலம் உறுதிப்படுத்துகிறார். நிலைத்து பரப்பில் வாழ்கின்றவர்கள் வந்தேறிகளை, தீட்டு செய்தல், மனிதப் பண்புகளை காயடித்தல், திராவகம் பட்ட புண்போல் எரிந்து அழிவதை காட்டும். வெளுக்கும் மனிதர்கள் மீதான சொல்லம்புகளாலும் காம வம்புகளாலும் மிகக் கூர்மையாகக் காட்டுகின்றார் நூலார்.

 

நாவல்களில் எப்போதுமே ஆசிரியர் கணிசமான இடத்தை அடைத்துக்கொள்வார். இந்நாவலில் ஆசிரியர் தன்னை ஒதுக்கிக்கொண்டு கதை மாந்தர்களை வட்டார மொழியில் களமாட வைத்து நடத்திச் செல்வது பேரளவு ஆசிரியரின் உயிர்ச் சக்தியை மென்று விழுங்குவது; அதனாலேயே மலர்வது. அதிலும் பிசிறு தட்டாமல் இயக்குவது நாடகமும் இலக்கியமும் ஒருசேர வாய்க்கப் பெறும் மூளை அதிர்வுகளில் இருந்து வெடித்துக் கிளம்பும் தெளிந்த ஓட்டம். தூத்துக்குடிமற்றும் நெல்லை வட்டார மொழியில் உள்ள அருமையான சொற்கள் நிலைக்கும் வண்ணம் பதியப்பட்டுள்ளன. மொழிக் காதல் தீரா என அறிய முடியும்.

 

நாவலைப் படிக்கும் போது திரைப்படம் பார்க்கின்ற உணர்வு; சம்பந்தமில்லாமல் இரண்டு காட்சிகள் விறுவிறுப்புடன் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் புத்தகத்தை மூடி வைக்க இயலாமல் செய்து விடுகிறது. அத்தியாயத் தொடக்கத்தில் இடப்படும் தலைப்புகள் கவனத்தை சிதைய விடாமல் அழைத்துச் செல்கின்றன. முக்கால்வாசிக் கதையோடிய பின்புதான் ஏதோ ஒரு சரடு இரண்டு காட்சிகளையும் இணைக்கிறது என்பதன் பொறி தட்டுகிறது. முன்னமே பெயரைச் சொல்லி இருந்தால் புரிந்திருக்கும். நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் இணைக்கும் சரடு தங்க ராணியின் அம்மா; செவ்வந்தி. திக்கு முக்காடி செவ்வந்தியை சரியாக பிடித்துக் கொள்ள சில பேரால்தான் முடியும்.

 

ஒவ்வொரு காட்சியும் முடியும் இடத்தில் கழுதையை காட்டுவது பாருடே ஆக்கங்கெட்ட கூவை என்பதைத் தவிர வேறென்ன. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பதிக்கப்படும் தேரி நில உயிரினங்களின் படங்கள் நம்மை அம்மண்ணில் விளையாட அழைக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத் தொடக்கத்திலும் தேரியாத்தாவின் நெஞ்சில் நிற்கும் பனை மரங்கள் மண்ணையும் உயிரையும் நேசிப்பவளுக்கு முறை செய்தல்.

 

நெஞ்சம் நிறைந்த இருவர்

சிவப்புச் சட்டை அண்ணாச்சி; வளவு, வீடு, செவ்வந்தியின் அம்மாவுக்கு பாடை தூக்கும் நிகழ்வு, மயானக்கரை இப்படி எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் தன் குரலை உயர்த்தி ஒடுக்கப்பட்ட ஜனத்திற்கு காவல்காரனாய் இருக்கிறார். பொது நீதியை மனிதப்பயிருக்கு நீர் போல பாய்ச்சுகிறார். அவக வெளுத்துக் கொடுக்கலைனா நம்ம வெள்ளையும் வெள்ளையும் போட்டு லாந்த முடியுமா? என்பதைச் சொல்ல ஆழம் இருக்க வேண்டும். சிவப்புச் சட்டை அண்ணாச்சி, சிவப்பு சட்டைக்காரர்தான், இது ஆசிரியரின் மனக்குரலோ என்ற சந்தேகம் எழாமலில்லை.

 

கணவனைக் காதலன் போல நிபந்தனை இன்றி நேசிக்கும் அபூர்வகுணப் பெண் வேண்டுவது ஆணின் கனவு. தங்கமும் ஒரு வாயில்லா ஜீவன் தானே மாமா நாமளே கூட்டிக்கிட்டு வந்து பாத்துக்கிருவமே இப்படி ஒரு வார்த்தையைச் சொல்ல வெட்சிக்கு செல்லக்குட்டியின் மீதிருந்த காதலை எண்ணிப் பார்க்க எண்ணிக்கை தோல்விதான்.

 

மனதைக் கவர்ந்த கதை மாந்தர்கள்

கண்ணாடிக்காரரிடம் தோன்றிய கோபத்தை உள்வாங்கிக் கொண்டு தன் பிள்ளைகள் தங்கவேலுக்கும் தங்கராணிக்கும் பழுதின்றி கடத்தியவள் செவ்வந்தி. ஒரே ஊரிலிருந்தும் தன்குணத்தால் வண்ணாக்குடிக்கு பிறந்த தன் மகனை விட்டு ஒதுங்கியே இருந்திருக்கிறாள் செவ்வந்தி. செவ்வந்தி தன் பெயருக் கேற்ற வீரசாலி, கைம்பெண்ணான தன் கையைப் பிடித்து இழுத்த கண்ணாயிரம் காணாமல் போனதும், ஆட்டுக்கு தழை பறிக்கும் அண்டியை ரத்தத் தோய்வோடு கையில் பிடித்து அமர்ந்து கொண்டு தங்கராணி மாலையில் வந்த போது பெருஞ்சிரிப்பு சிரித்ததும் கோயில் ரத்தக்காளி தானே?. தன் தோழி பேச்சியைக் காணாமற் செய்த பொட்டம்மையை ஆண் என்று கூட பாராமல் மார்பில் அமர்ந்து அவனின் கழுத்தை அருவாளால் அரிந்ததும் புரட்சிப் பெண்ணின் மனநிலையை ஒத்தது தானே. செவ்வந்தி கோபத்தாலும் வீரத்தாலும் வாழுகிறாள்.

 

அசரியா, பாதாள முனி, செல்லக்குட்டி நட்பை விட செவ்வந்தி பேச்சி நட்பு உசத்தியானது. செவ்வந்தியின் சடங்குக்குப் பந்தல் போட வந்த சந்தோசத்தை அவளுக்குக் கண் முன்னே நிறுத்தியதிலிருந்து காதல் முற்றிப்போய் கருவுண்டாகி கருக்கலைப்பிற்கு பொட்டைம்மையிடம் சென்றது வரை, செவ்வந்திக்கு பேச்சி சுவாசமானாள். செவ்வந்தி வயிற்றில் வாங்கிக் கொண்டு வந்ததை கதறி முடித்து விடாமல் கருக்கலைக்க விதைகள் வாங்கிக் கொடுத்தவள்; அதற்காக செத்தும் போனாள். பேச்சியின் புகைப்படம் மாடாக் குழியிலிருந்து இறங்கி செவ்வந்தியின் நெஞ்சில் அவ்வப்போது ஏறிப் படுத்துக்கொள்ளும். பெண்களின் நட்பும் காவியமாகுமென்பதை உணர்த்தும் எழுத்துகள்.

 

சந்தோசத்தை இந்நூல் அசகாய சூரனாக, பெரிய வேலைக்காரனாகக் காட்டி இருக்கிறது. இதே சந்தோசம் செவ்வந்திக்கு வயிற்றுச் சுமையைக் கொடுத்துவிட்டு பார்த்துப் பார்த்து நொந்து செத்துப் போனான். செவ்வந்தியை தொடும் போது அந்த அறிவில்லாத கோழையுடனான உறவு பெண்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி, ஏனென்றால் ஆணுக்கு ஒரு நிமிடம் தானே?

 

செல்லக்குட்டி படித்தவன், பண்பானவன், ஒழுக்கமானவன் ஆனால் காதலித்தவளை கரம் பிடிக்கத் துணிவில்லாதவன். யார் யாருக்கோ ஒடுங்கி சாதிய கட்டுமானங்களைக் காரணங்காட்டி தங்கராணியை நடு வெள்ளத்தில் விட்டுச் சென்ற செல்லக்குட்டி மனதில் குத்தப்படும் நெருஞ்சி முள்.

 

மைனராக வலம் வந்த மேட்டுக்குடி மைக்கேல் பாதியிலேயே காணாமல் போய்விட்டான். மைக்கேலின் குழி பறித்தலும், சுயநலத்தை முன்னிட்டு யாரையும் தீர்த்துக் கட்ட போடும் சதி திட்டங்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

 

தேரி நாவல் வலியோடு கடந்து போகும் பாதை அன்று. வானத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உருவத்தில் நீதியை மனக்கண்ணில் இட்டு நிரப்பும் ஓவியம். நாம் அனுபவிக்க வேண்டியது அதன் அழகோடு சேர்த்து செயலையும் தான்.

Scroll to Top