தேரி : ஒரு நிலப்பகுதியின் செவ்வாழ்க்கை

தேரி : ஒரு நிலப்பகுதியின் செவ்வாழ்க்கை

  • இ சு அஜய்சுந்தர்

 

நாவல் எனும் இலக்கிய வகைமை வரலாற்றில் மண் சார்ந்த நாவல்களுக்குத் தனி குணாம்சமும் முக்கியத்துவமும் உண்டு. எல்லா இலக்கியங்களும் ஏதோவொரு களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுவதே எனினும் மண் சார்ந்த இலக்கியங்கள் என்பவை அம்மண்ணின் இயற்கை மற்றும் மனிதர்களின் தன்மைகளைக் கதைப்போக்கின் ஊடாகத் தெளிவாகப் பதிவுசெய்பவை. அவ்வகையில் கரிசல், கொங்கு, நாஞ்சில், நடுநாடு, கீழத்தஞ்சை போன்ற எண்ணற்ற வட்டார இலக்கியங்கள் தமிழில் எழுந்துள்ளன. கி.ரா, பூமணி, சோ. தர்மன், சண்முகசுந்தரம், சூரியகாந்தன், பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், குமாரசெல்வா, கண்மணி குணசேகரன், சோலை சுந்தரபெருமாள் போன்ற பல தமிழ் இலக்கியவாதிகளை எடுத்துக்காட்ட இயலும். அதில் திருநெல்வேலியைச் சுற்றிய பகுதிகளை அதன் மண் மணத்தோடு பதிவு செய்த நவீன எழுத்தாளர்களும் இலக்கியங்களும் வெகு சிலவே ஆகும். தேரி மண் என்று சொல்லப்படும் செம்மண் பகுதிகளைக் களமாகக் கொண்டு எழுந்துள்ளது ராஜேஷ் வைரபாண்டியனின் தேரி நாவல்.

தமிழில் செம்மண் எழுத்துப் பற்றிய இலக்கியப் பதிவு சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. ‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே’ எனும் சங்க இலக்கிய உவமைத் தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களிடையில் மிகவும் வியப்பையும் போற்றுதலையும் ஏற்படுத்திய தொடராகும். அதனைப் போலச்செய்தார் புதுக்கவிதையின் முன்னோடியில் ஒருவரான மீரா. யானும் நீயும் எவ் வழி அறிதும்? எனும் அப்பாடலின் வரியை,

நீயும் நானும்

ஒரே மதம்…

திருநெல்வேலிச்

சைவப் பிள்ளைமார்

வகுப்பும் கூட,..

என மாற்றிப் பகடிக் கவிதையாக்கினார் அவர். செம்மண் பற்றிய குறிப்பையுடைய கவிதையில் அவர் திருநெல்வேலியை இணைத்தது எதேச்சையானதா எனத் தெரியவில்லை.  இத்தேரி நாவலும் தேரி மண்ணின் இயற்கையை மட்டும் பதிவுசெய்யாமல் அம்மண்ணின் மக்களையும் அதன் சாதிய இறுக்கத்தையும் பதிவுசெய்கிறது.

தேரி நாவலின் கதை, வழக்கமான இளைஞர்களின் காதல் கதைதான். ஆனால் அக்கதையில் சாத்தியப்படும் அளவிற்குச் சாதி கொடுமையைப் பேசுகிறது நாவல். தேரியின் மொழி தவழும் இளைஞர்கள், அவர்களின் காதல், அதில் ஏற்படும் சாதிய சிக்கல்கள், தோழமை, உறவுமுறை, சண்டை சச்சரவுகள், தொழில் ஆகிய மனித செயல்பாடுகளை விவரிக்கிறது நாவல். இவற்றை விவரிப்பதில் நாவல் கொண்டுள்ள கதையமைப்பே அதை தனித்துவமானதாக்குகிறது.

செல்லக்குட்டி, தங்கராணி, கனகாம்பரம், அசரியா, பாதாளமுனி எனும் இளைஞர்களைச் சுற்றிய ஒரு கதை. அதற்கு இணைநிலையாக, செவ்வந்தி, சந்தோசராஜ், பேச்சி என நகரும் ஒரு காதல் கதை. இரண்டு வெவ்வேறு கதைகளாக மாறி மாறிப் பயணிக்கும் நாவல், பதினைந்தாம் அத்தியாயத்தில் ஒரே கதையாக ஒன்று சேர்கிறது. அதாவது, இரண்டு கதைகளுக்குமான தொடர்பு அங்கே சொல்லப்படுகிறது.

முப்பத்தி நான்கு(34) அத்தியாயங்களை உடையது நாவல். முதல் பதினைந்து(15) அத்தியாயங்கள் வரை ஒற்றைப்படை எண்ணிலான அத்தியாயங்கள் செல்லக்குட்டி – தங்கராணியை மையமாகக் கொண்டு நகர்பவை. இரட்டைப்படை எண்ணிலான அத்தியாயங்கள் செவ்வந்தி-சந்தோசராஜை மையமாகக் கொண்டவை. முதல் கதை, செல்லக்குட்டி தன் காதலை நண்பர்களிடம் விவரிப்பதில் தொடங்குகிறது. அவன் அப்பெண்ணின் பெயரைக் கண்டுபிடிக்க முயலும் அதே வேளையில் தங்கராணியும் அவனைக் காதலிக்கிறாள். தொடக்கத்தில் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்ளத் தொடங்கி பிறகு இரகசியமாகச் சந்தித்தல் என வளர்கிறது அவர்கள் காதல். இதற்கிடையில் தங்கராணியின் அண்ணன் தங்கவேலு தன் நண்பன் மைக்கேலுடன் சேர்ந்துகொண்டு அவர்கள் காதலை எதிர்க்கிறான். அதைத் தடுக்க என்னென்னவோ செய்கிறான். அவளது அப்பாவும் அக்காதலை எதிர்க்க அவளது அம்மாவோ தான் காதலுக்கு எதிரானவளில்லை என்றும் இருந்தாலும் செல்லக்குட்டி வேண்டாம் என்றும் கூறுகிறாள். அதேபோல சிறுவயதிலிருந்து தன் பெற்றோர் இல்லாமல் தனது ஆச்சியுடன் வாழும் செல்லக்குட்டி, தன் ஆச்சியிடம் இந்தக் காதல் குறித்து கூறும்போது அவளும் தங்கராணியை மறந்துவிடச் சொல்கிறாள். இருவரும் காரணம் புரியாமல் செய்வதறியாது திகைக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் காதல் தொடர்கிறது.

இரண்டாவது கதை, செவ்வந்தியின் பள்ளி நாட்களில் தொடங்குகிறது. பதினைந்து வயதில் பூப்படையும் செவ்வந்தி சாதிப்பற்று மிகுந்த அவரது அப்பா கண்ணாடிக்காரர் விமரிசையாகச் சடங்கு செய்கிறார். அதில் எடுபுடி வேலைக்கு வந்த சந்தோசராஜ் மீது காதல்கொள்கிறாள் செவ்வந்தி. பேச்சியின் உதவியுடன் அவனைத் தேரியில் சந்திப்பதும் பேசுவதுமாக அவர்கள் காதல் வளர்கிறது.

இப்படியாக வளரும் இரண்டு காதல்களிலும் ஒரே குறுக்கீடாக இருப்பது சாதி. அதனாலேயே தங்கவேலு செல்லக்குட்டி மீது வன்மம் கொண்டு திரிகிறான். அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் தனது நண்பன் மைக்கேலுடன் சேர்ந்துகொண்டு இடைஞ்சல் ஏற்படுத்துகிறான். எப்படியாவது தீர்த்துக்கட்டிவிடத் துடிக்கிறான். தன் தங்கை மீதும் தொடர்ந்து கோபத்தை உமிழ்கிறான். வந்தேறி வந்தேறி எனச் செல்லக்குட்டியைத் திட்டும் அவனது சாதியவெறி அவனை பாதாளமுனி வீட்டை எரிக்கச் செய்கிறது. ஆனால் அதே சாதியைச் சார்ந்த ஒரு பெண்ணை இவனது ஆசைக்குப் பயன்படுத்திக்கொள்கிறான் தங்கவேலு. செவ்வந்தியின் அப்பா கண்ணாடிக்காரரும் இதேபோல சாதிப்பெருமை பேசித்தான் திரிகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சந்தோசராஜ் மீது காதல்கொண்டு அவனை அவ்வப்போது இரகசியமாக தேரியில் சந்தித்துவந்த செவ்வந்தி ஒருநாள் அவனுடன் உறவுக்கொண்டதனால் கர்ப்பமாகிவிடுகிறாள். இது அவள் வீட்டிற்குத் தெரிகிறது. யார் அவளது கர்ப்பதிற்குக் காரணம் எனக் கேட்டு கண்ணாடிக்காரர் அவளை அடிக்கிறார். ஆனால் அப்பாவின் சாதிவெறி தெரிந்த அவள் இறுதிவரை சொல்லாமல் தவிர்க்கிறாள்.

சாதியால் இரு காதலும் உடைக்கப்படுகிறது. செல்லக்குட்டி வீட்டிற்கு வந்துபோன சேதியைக் கேட்டு சாதிவெறியால் தனது தங்கை தங்கராணியின் முடியைப் பிடித்து சுவற்றில் மோதுகிறான் தங்கவேலு. அவள் தனது நினைவை இழக்கிறாள். இறுதிவரை அவளுக்கு நினைவு திரும்பவே இல்லை. செல்லக்குட்டிக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்கின்றனர். தனது மகள் செவ்வந்தியின் குழந்தைக்கு சந்தோசராஜ்தான் அப்பா எனத் தெரிந்ததும் அவனைக் கட்டி வைத்து அடிக்கின்றனர் கண்ணாடிக்காரரும் அவரது மகனும். சந்தோசத்தின் குழந்தையை அவனது கையிலேயே கொடுத்து அவனையும் அவனது தாயையும் ஊரைவிட்டே விரட்டுகின்றனர். செவ்வந்திக்கு வேறொருவனுடன் திருமணம் நடக்கிறது. சில வருடத்தில் செத்துப்போகிறான் சந்தோசம்.

ஏற்கனவே சொன்னதுபோல, இந்நாவலின் தனித்துவம் தனித்தனிக் கதைகள் போன்று அமைக்கப்பட்ட இரு கதைகளின் இணைப்பே ஆகும். ஒரே உருப்படிவத்தில்(Pattern) அமைக்கப்பட்ட இரு கதைகளின் இரண்டு அடுத்தடுத்த தலைமுறையின் கதைகள் என்பது வாசகருக்கு உறுதியாக வியப்புணர்வை ஏற்படுத்தும். 15-ஆம் அத்தியாயத்திற்கு முன்பே சிறு சிறு குறிப்புகள் காணப்பட்டாலும் அதில்தான் வாசகருக்கு வெளிப்படையாக அது உணர்த்தப்படுகிறது.

இந்த முக்கியத் திருப்பம் அல்லாமல் கதையில் மற்றொரு முக்கியத் திருப்பமும் உள்ளது. இருபத்தி ஏழாம் அத்தியாயத்தில் வாசகருக்குக் கூறப்படுகிறது அது. இறக்கும் தருவாயில் செவ்வந்தியின் அம்மா ஒரு இரகசியத்தைச் சொல்லிவிட்டு இறக்கிறாள். இதுவரை அவர்கள் குடும்பத்தில் யாருக்குமே தெரியாத இரகசியத்தை செவ்வந்தியின் அம்மா அவளது அக்காவிடம் சொல்ல, அவள் செவ்வந்தியிடமும் பிறரிடமும் சொல்கிறாள். குடும்பமே இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறது.

வெளியே இல்லாமல் போய்விட்டதைப் போல ஒரு தோற்றமிருந்தாலும் தமிழ் நிலப்பரப்பு முழுவதும் வியாபித்திருக்கும் சாதிவெறி இந்நாவலின் மைய நீரோட்டமாக இருக்கிறது. சந்தோசராஜ் தேரி நிலப்பகுதியில் கழுதைகளை மேய்த்துத் திரியும் சலவைத்தொழில் செய்பவன். அதனாலேயே அவனும் அவனுக்குப் பிறந்த குழந்தையும் செவ்வந்தியிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிறந்ததாகக் கருதப்பட்ட செல்லக்குட்டியும் சாதியினாலேயே ஒடுக்கப்படுகிறான். தங்கவேலு அவனை வந்தேறி வந்தேறி என்று சொல்லி தனது ஆதிக்கத்தை நிறுவ முயல்கிறான். ஆனால் அவனது ஆணதிகாரத்தைக் காட்டுகிறான். அதாவது, தன்னை ஆதிக்கசாதியாக நினைத்துக்கொண்டு குறிப்பிட்ட சாதி ஆண்களைத் தீண்டாமல் அவன் தவிர்த்தாலும் அச்சாதிப் பெண்களைக் கீழ்சாதி எனத் தவிர்க்காமல் தனது தேவைக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறான் அவன். முதலில் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி தேரிக்காட்டிற்கு அழைத்துச் சென்று தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான். இது மைக்கேல் மூலமாக வாசகருக்குச் சொல்லப்படுகிறது. பின்னால் சித்திரப்பூ என்ற மற்றொரு பெண்ணையும் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் அவள் அவனது செருப்பைப் போட்டுபார்க்க முயலும்போது அவளது சாதியைச் சொல்லி அவளைத் திட்டுகிறான். பின்னால், அவனது சாதித் திமிரால் ஒரு கட்டத்தில் அவளைக் கொலையே செய்துவிடுகிறான். அவனது சாதிய வன்மம், “வந்தேறி நாய குளிப்பாட்டி நடூவூட்ல வெச்சாலும் அது நக்கி நக்கிதாம்ல திங்கும்” போன்ற உரையாடல்களால் வெளிப்படுவதைக் காணலாம். தங்கவேலுவைப் போலவே கண்ணாடிக்காரர் பாத்திரமும் சாதிய வன்மமுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. சலவைக்குத் துணி எடுக்க தனது வீட்டுக்கு வந்தவன் படியில் கால் வைத்து துணிகளை வாங்கினான் என்பதற்காக அவன் நெஞ்சிலேயே உதைத்தவர்தான் கண்ணாடிக்காரர். அப்பகுதியின் சாதிய இறுக்கம் எப்படி இருக்கிறது என்பது செல்லக்குட்டியின் மூலம் சொல்லப்படுகிறது. அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவனைத் துரத்துகிறது சாதி. ஊரிலும் சாதி. குலத்தொழிலைவிட்டு படிப்பின் மூலம் வேலைக்குப் போனால் அங்கும் சாதி அவனைத் துரத்துகிறது. வாத்தியாராக இருக்கும் செல்லக்குட்டியை பள்ளி வாத்தியார் மட்டுமில்லாமல் மாணவர்களும் சாதியின் பேரால் அவமதிக்கிறார்கள். சாதி தமிழ்ச் சமூக நினவிலியில் எந்தளவு படிந்து போயிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது.  சாதிவெறி பிடித்துத் திரியும் தங்கவேலுவிற்கு அண்ணாச்சி கூறும் அறிவுரை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

“ஏலேய் தங்கவேலு… சாதி வேறங்கறது தானம்ல ஒம் பிரச்சன? இன்னிக்கு அவிய இல்லாட்டி ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா லாந்த முடியுமால? அவய நம்ம ஊருக்குப் பொழுப்புத் தேடி வந்த சாதிதாம்ல. அதுக்காவ அவிய புள்ளைகள நம்ம பயலுவ பார்க்காமலாவே இருக்கியா..ஏ போனவாரங்கூட ஆத்திமுத்து மவள எவனோ ஒரு பய அசிங்கமாப் பேசியிருக்கான். அவ கெணத்துல குதிக்கல்லா போயிட்டா… யோல நமக்கு ஒரு ஞாயம் அவியளுக்கு ஒரு ஞாயமால… செல்லக்குட்டிக்கு என்னம்ல கொறச்சலு… டிகிரி முடிச்சிருக்கான். நீ எட்டாப்புலயே மூணு வருசம் கெடந்து பள்ளிக்கூடத்தவிட்டு ஓடிவந்த பய ஒனக்கு டிகிரின்னா என்னனு தெரியுமால??”

மேலும்,

“பாத்தியா குலத்தொழிலோட நின்னுடாம ஜம்முன்னு ஏசி கடைல சோலியும் காக்கான். நீ இன்னும் சாதி மூதின்னு ஓலப்பாயில நாயி மோண்டமாரி சலம்புத…”

என்றும் கூறுகிறார். கல்வியில், பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் சாதி ஒருவரைத் தாழ்த்தியே வைத்திருக்கும் நிலையைக் கேள்விக்குட்படுத்துகிறது இந்த உரையாடல். செல்லக்குட்டி சாதியை வைத்து தன்னை ஒடுக்குவதை நினைத்து பல இடங்களில் ஆதங்கப்படுகிறான். அடிபட்டு வீடுதிரும்பும் சந்தோசராஜின் அம்மாவின் புலம்பலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “இந்த ஊர்ல நமக்கெங்கல வாய் இருக்கு? நமக்குன்னு பேச எங்க நாதி இருக்கு? அவிய துணிய நாம வெளுப்பா வெளுக்கணும். ஆனா அவிய புத்திய நம்மால வெளுக்க முடியுமால?” என்கிறாள். அதேபோல சந்தோசராஜ் செவ்வந்தியிடம் “எதிர்த்து முட்டித் தூக்கி எறிய எவ்வளவு நேரம் ஆகும் புள்ள. ஆனா அப்படி நாஞ் செஞ்சா அது எங்க சனத்தைல்லா பாதிக்கும்? எங்க தெருவையே எரிச்சுப்புடுவாவளே? வந்தேறின்னா எளக்காரமாத்தான பார்க்காவ?” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான். நாவலின் ஒவ்வொரு காட்சி முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கும் சிறு படங்களில் கழுதையும் கொடுக்கப்பட்டிருப்பதை ஒரு எதிர்ப்பரசியலாகப் பார்க்கலாம்.

தேரி நாவல் சலவைத் தொழிலாளிகள் சாதிய ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாவதைப் பதிவு செய்திருந்தாலும், அதை விரிவாகப் பதிவுசெய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு தொழில் செய்யும் தொழிலாளிகள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்க்கையையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் விரிவாகத் தமிழில் சில நாவல்கள் பதிவுசெய்துள்ளன. சுளுந்தி, தோல், சோளகர்தொட்டி போன்ற நாவல்களைக் கூறலாம். அதைப் போல இதில் சலவைத் தொழில் செய்யும் சமூகத்தினரின் வாழ்க்கை விரிவாகப் பதிவுசெய்யப்படவில்லை. கழுதை மேய்க்கச் செல்வது, அவற்றைப் பராமரிப்பது, துணி எடுக்கச் செல்வது என சில செய்திகள் மட்டுமே இடம்பெறுகின்றன. காதலை மையமிட்ட நாவல் என்பதால் அது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றையும் விரிவாகப் பதிவுசெய்திருந்தால் தேரி இன்னும் சிறப்பான நாவலாக அமைந்திருக்கும். இதை இந்நாவலின் ஒரு சிறு குறையாகக் கருதலாம்.

திருநெல்வேலி பகுதியின் சாதிய மனநிலையைப் பேசியுள்ளது போலவே அப்பகுதியின் மத சகிப்புத்தன்மையும் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்துக்களும் கிறித்தவர்களும் ஒன்றுகலந்து வாழும் பகுதியாகவே அது திகழ்கிறது. வரலாற்றுப் பின்புலத்தில் பார்த்தால் கால்டுவெல் முதலான ஐரோப்பியர்கள் திருநெல்வேலியைச் சுற்றிய பகுதிகளிலேயே தங்களது சமயப்பணிகளைச் செய்கின்றனர். இரண்டு மத மக்களும் அன்பு காட்டுவதற்கு அவர்களுக்கு மதம் ஒரு தடையாக இருப்பதில்லை. மத சகிப்பற்றத் தன்மையும் வன்முறைகளும் பெருகியுள்ள இக்காலத்தில் அவற்றின் பின்புலத்தில் இதைப் பார்க்கும்போது எளிய மக்கள் மதங்களை வேறுபாடுகளாகக் காணாமல் அவற்றை இயல்பாகக் கருதும் போக்கை பதிவுசெய்வது முக்கியத்துவமானது. கிறித்தவர்கள் ‘வேதக்காரவிய’ என்றுதான் அப்பகுதியில் அழைக்கப்படுகிறார்கள் என்பதை நாவலின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. தங்கராணியும் கனகாம்பரமும் மிகுந்த நெருக்கமான தோழிகள். செவ்வந்தியின் குடும்பம் வேதக்காரர்களாக மாறிய பின்னும் பேச்சிக்கு அவளுடன் பழகுவதிலும் நட்புக்கொள்வதிலும் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. அவர்கள் மதத்தை எவ்வளவு இயல்பாகக் கருதினார்கள் என்பதற்க ஓரிடத்தைச் சான்றாகக் கூறலாம்.

“அதுவுஞ்சரிதான். அவியகிட்ட கேட்கறதுக்குப் பதிலா நீ உங்க யேசப்பாகிட்ட கேளு. நா உனக்காவ இசக்கியம்மன்கிட்ட கேக்குதேன். நல்லது நடந்தா சரிதான். செரி நேரமாச்சு எங்க வீட்ல தேடுவாவ..” எனச் தங்கராணியிடம் சொல்லிச் செல்கிறாள் கனகாம்பரம்.  அதற்குப் பின்னர், செவ்வந்தியின் குடும்பம் மதம் மாறிய நிகழ்வு நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு நாள் இரவு வீட்டிற்குப் பைபிளுடன் வந்த அவள் கணவன், “இனிமே நாம வேதக்காரவிய. நம்ம வாழ்க்க சந்தோசமா மாறனும்னா நாம யேசப்பாவக் கும்பிடனும், வாராவாரம் வேதக் கோவிலுக்கு போவம்” என்கிறான். அதற்குச் செவ்வந்தி மறுப்பு எதுவும் சொல்லாமல், ‘எல்லா சாமியும் ஒன்னுதான்’ என நினைத்துக்கொள்கிறாள். இயேசுவின் படத்தின் அருகில் இறந்துபோன தனது தோழி பேச்சியின் படத்தையும் வைத்து வழிபடத் தொடங்குகிறாள் அவள். தமிழ் மண்ணில் வழிபாடு என்பது எப்போதும் இப்படித்தான் இருந்துவந்துள்ளது. மற்றொரு எடுத்துக்காட்டை நாவலிலிருந்து எடுத்துக்காட்ட இயலும்.

“ஏம்ல கொடுக்க மாட்டேன். என்னல சொல்ல ஒங்கிட்ட… சாதிய வச்சு கஞ்சி குடிக்க முடியுமால.. இவ்ளோ வெறைக்கிறியே… தங்கவேலுன்னு ஒம்பேரு. ஆனா வேதக்கோயிலுக்குல்லா நீங்க போறிய? ஒங்க தாத்தன் இந்து. ஆனா உங்க அப்பன் கன்வர்ட் ஆயிட்டான். ஊர்ல யாராவது ஏதாவது சொன்னமால்ல? ஊர் கொடைக்கு சாவர வரைக்கம் உங்க அப்பன் வரி கட்டினான். என்ன கோயிலுக்குள்ள வர மாட்டான்… அதுக்கென்ன வேதக்கோயிலு அவனுக்குப் பிடிச்சிருக்கு. ஒன்னைய மாதிரி மதம் பிடிச்சாலே கெடந்தான்? உண்டா இல்லையா
னு ஒங்க அம்மையக் கேளு இல்லன்னா ஒங்க மாமனக் கேளு” எனத் தங்கவேலுவைக் கடிந்துரைக்கிறார் அண்ணாச்சி. இரண்டு மதத்தினரும் வேறுபாடுகளோ வன்மமோ இல்லாமல் இருந்ததையே இது காட்டுகிறது. செல்லக்குட்டி வேலைக்குச் சேரும் பள்ளியும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கிறித்தவப் பாதிரியாரால் துவக்கப்பட்ட பள்ளியேயாகும்.

நாவலில் தேரியின் இயற்கை அமைப்பு விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாகவும் கழுதைகள், ஆடுகளை மேய்க்கும் இடமாகவும் தேரிக்காட்டின் செம்மண் நிலமே இருக்கிறது. பனைமரங்களும் முந்திரி மரங்களும், ஒடமரங்களும் நிறைந்து காணப்படுகிறது. வாழைத்தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயே பெரிய வருவாயாகச் சிலருக்கு இருந்துள்ளது நாவலின் பின்பகுதியில் சொல்லப்படுகிறது. வாய்க்காலோரம் சிறுவர்கள் மீன் பிடித்துக்கொண்டு பொழுதுபோக்குவதும் நாவலில் இரண்டு மூன்று இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசிறி ஓணான், உடும்பு, முயல், விரால், தேளீ மீன், சிலேபி மீன் போன்ற பல உயிரினங்கள் நாவல் முழுவதும் குறிப்பிடப்படுகின்றன. யாரிடமும் பேசாத சிரிக்காத பொட்டம்மைகூட பறவைகளிடமும் விலங்குகளிடமும் பேசுகிறாள். செல்லக்குட்டியின் மனைவியான வெட்சி அணிலைச் செல்லமாக வளர்கிறாள். அடிப்பட்ட ஒரு அணில்குஞ்சை எடுத்து அதைத் தன் குழந்தைப் போல பாத்துக்கொள்கிறாள். அதுவும் அவளுடன் மிக நெருக்கமாக இருக்கிறது. ஒருநாள் அதற்கு தனது தாய்ப்பாலை கொட்டாங்கச்சியில் பிடித்து கொடுக்கிறாள் வெட்சி. இயற்கை உயிர்கள் மீது இத்தகைய நேசங்கள் உடைய மனிதர்களைக் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை சாத்தியப்படும் கிராமத்தில் மட்டுமே காண இயலும். நாவலின் பின்பகுதியில் செல்லக்கண்ணு, தங்கவேலு இருவருமே தோப்பில் வேலை செய்கின்றனர். செல்லக்கண்ணு குடும்பத்துடன் அங்கே குடிபெயர்கிறான். தோப்பைப் பார்த்துக் கொள்வதே அவனது முழுநேர பணியாக உள்ளது. இயற்கையோடு சேர்ந்ததாகவே அவனது வாழ்க்கை உள்ளது. ஆனால் அதே தோப்புகளில் தான் மண் அள்ளுவது, தண்ணீர் உறிஞ்சுவது போன்ற இயற்கையைக் கெடுக்கும் செயல்களும் நடக்கின்றன. அவை முதலாளிகளின் பேராசையால் விளைபவை. நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு இயற்கை உயிரின் ஓவியம் இடம்பெற்றள்ளதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இந்நாவல் முழுவதும் நெல்லையின் வட்டார மொழியில் அமைந்துள்ளது. திரைப்படங்களில் மட்டுமே அதிகம் கண்டிருந்த இம்மொழியை நாவலில் வாசிப்பது ஒரு புது அனுபவமாக உள்ளது. சென்னி, விருவுக போன்ற வட்டாரச் சொற்களும் வட்டார சொலவடைகள், பழமொழிகளும் நாவலில் இடம்பெறுகிறது.

இந்நாவலின் கதாபாத்திரங்கள் பலவும் தெளிவான வரையறைகளுடன் வரையறுக்கப்பட்டுள்ளன. மையக் கதாபாத்திரங்கள் குறித்து ஏற்கனவே இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் 2 கதாபாத்திரங்களின் படைப்பு முக்கியமாகச் சொல்லத்தக்கது. ஒன்று பொட்டம்மை. நாவலின் ஓட்டத்தைச் சுவாரசியமாக வைத்துக்கொள்வது இந்த பாத்திரமே ஆகும். ஒருவித அமானுஷ்ய தன்மையுடையதாக இக்கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது. ஊரில் எந்த உடல் சிக்கலுக்கும் மருந்து கொடுப்பவளாக இருக்கும் பொட்டம்மை யாரிடமுமே பேசியதில்லை. அவள் வீட்டு பிராணிகளிடம் மட்டுமே பேசுகிறாள். எடுபுடி பையனாக இருக்கும் பட்டாணியிடம் கூட அவள் பேசியதில்லை. தன் கர்ப்பத்தைக் களைக்க செவ்வந்தி பொட்டம்மையையே நாடுகிறாள். ஆனால் அவளிடம் மருந்து சாப்பிட்ட பின்னும் அவளுக்குக் குழந்தைப் பிறந்துவிடுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் நாவலில் இக்கதாபாத்திரம் மீதான புதிர்கள் அவிழ்கின்றன. பொட்டம்மை பெண் வேடமிட்ட ஒரு ஆண் என்பதும், அவன் தான் ஆடுகளைத் திருடுகிறான் என்பதும், அதைக் கண்டுபிடித்த பேச்சியையும் அவன்தான் கொன்றுவிடுகிறான் என்பதும் வாசகருக்குச் சொல்லப்படும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இவ்வுண்மைகளை அறிந்துகொண்ட செவ்வந்தி ஒரு நடுராத்திரியில் அவனது வீட்டிற்குச் சென்று அவனது கழுத்தை அறுத்து கொலை செய்கிறாள்.

மற்றொரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் வெட்சி. தங்கராணியைப் பிரிந்த வருத்தத்தில் இருக்கும் செல்லக்குட்டிக்கு வெட்சியைத் திருமணம் செய்து வைக்கின்றனர். தங்கராணியை அவனால் மறக்க முடியவில்லை என்றாலும் வெட்சிமீது பெருங்காதல் பூக்கிறது செல்லக்குட்டிக்கு. வெட்சி தன் கணவன் மீதும் அவனது ஆச்சி மீதும், இயற்கை உயிர்கள் மீதும் – குறிப்பாக அந்த அணில்குட்டியின் மீதும் பேரன்பு உடையவளாக இருக்கிறாள். அவள் மீது ஏறி விளையாடுகிறது அணில்குட்டி. வெகுநாட்களுக்கு பின்னால் வெட்சியிடம் தங்கராணியைத் தான் ஏற்கனவே காதலித்திருந்ததை செல்லக்குட்டி சொல்லும்போது அது தனக்கு முன்னாலேயே தெரியும் என்கிறாள் வெட்சி. செல்லக்குட்டி வியந்துபோகிறான். ‘நீங்க காதலிச்ச புள்ளைக்காகப் பைத்தியம் புடிச்சாப்ல அலைஞ்சிருக்கீங்க. அந்தக் காதல்ல பாதியாது எனக்கு ஒருநாள் கிடைக்கும்ங்கற நம்பிக்கைல தான் மாமா கழுத்த நீட்டுனேன்” என்கிறாள். அவர்களுக்கு இறும்பூவை எனும் மகளும் பிறக்கிறாள். தங்கராணியைப் பத்தி அவன் சொன்ன பிறகு, நினைவுகளை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அவளை அழைத்துவந்து நம்முடனேயே வைத்துக்கொள்ளலாம் என்கிறாள். அழைத்துவந்து வைத்துக்கொண்டபின் பார்த்துக்கொள்ளவும் செய்கிறாள். இவ்வாறு எல்லாரின்மீதும் எல்லாவற்றின்மீதும் அன்புகொண்டவளாக இருக்கிறாள் வெட்சி.

நாவலின் வாசகர்கள் கதையின் போக்குடன் தங்களை இணைத்துக்கொள்ள ஏதுவாக சில விடயங்கள் நாவலில் கையாளப்படுகின்றன. ஒரு சில வீட்டில் மட்டுமுள்ள தொலைக்காட்சியைப் பார்க்க ஊரே கூடுதல், அதில் படம் தெரிய ஆன்ட்டனாவைத் திருப்புதல், ஒரு குறிப்பிட்ட மட்டைபந்து ஆட்டம், ஈரமான ரோஜாவே திரைப்படம் போன்றவற்றை நாவலில் கையாண்டிருப்பதன் மூலம் கதை நிகழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு வாசகருக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு, இரு காதல் கதைகளாகத் தொடங்கும் நாவல் பின்பு அடுத்தடுத்த தலைமுறைகளின் ஒரே கதையாக இணைகிறது. அதை, தேரி எனப்படும் நெல்லை மாவட்ட செம்மண் பகுதியின் பின்புலத்தில் அமைத்து சில திருப்பங்களின் மூலம் சுவாரசியத்தை ஏற்படுத்தி சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். அப்பகுதி மக்களின் நட்பு, உறவுமுறை, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் நடவடிக்கைகள், கனவுகள், தொன்மங்கள் போன்றவற்றைத் தெளிவாகப் பதிவுசெய்கிறார். அதேநேரத்தில், சலவைத்தொழில் செய்யும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஒடுக்கப்படும் விதத்தையும் அவர் அதில் இணைத்துக்கொள்கிறார்.

நிலவியல், கால அடிப்படையில் மனித வாழ்வியலை முதன்மைப்படுத்தும் சங்க இலக்கியத்தின் நீட்சியைச் சமகால வட்டாரத்தன்மையுடன் இணைத்த தனித்துவமான நாவல்களின் வரிசையில் இது முக்கியமானது என்று  குறிப்பிடமுடியும். அவ்வகையில் தனித்துவமானதாக அமைகிறது முன்னட்டை முதல் பின்னட்டை வரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ராஜேஷ் வைரபாண்டியனின் தேரி நாவல்.

 

Scroll to Top