தேரி என்னும் சிற்றூர் ஆவணம்

தேரி என்னும் சிற்றூர் ஆவணம்

ராஜேஸ் வைரபாண்டியன் அவர்களின் நாவலை முன் வைத்து வாசக மைய கருத்தாடல்

.அம்சப்ரியா

மன்னர்களின் வரலாறுகளையும் சமகால அரசியலையும் கடந்து இந்த மக்களின் வாழ்வியலை இன்னொரு காலத்திற்கான அறிதல் தேவைக்காகவது அவர்களின் அசலான வாழ்வை எழுத வேண்டியதாக உள்ளது. ராஜ்ஜியங்களைக் கைப்பற்றி, அரசாண்ட வரலாறுகளோ, போர் முரசு கொட்ட பழிதீர்க்கும் படலங்களோ, காத்திருந்து காத்திருந்து சூழ்ச்சியால் கொல்லும் பதிவுகளோ மட்டுமே    இலக்கிய ஆவணம் என்றில்லாமல் இவை யாவும் குருதியிலேயே  ஊறித் திளைத்த எளிய மனிதர்களின் கதைகளே நாவலாகியுள்ளன. இதைக் காலத்தின் தேவையாக உருவாக்கிய  நாவலாசிரியரின் எழுத்து நடையே நாவலை வாசிக்கத் தூண்டுகிறது.

நாவல்களுக்கான பலமாக அமைய வேண்டிய முக்கிய கோட்பாடாக அதனதன் வாசகர்களை தொடர் வாசிப்பிற்குள்ளாக்கி, நாவல் வாசிப்பை நிறைவு செய்ய தூண்ட வேண்டும்.

மேலும் அயர்ச்சியூட்டாத வகையில் மறுவாசிப்பிற்கான வாசலைத் திறக்க வேண்டும். மறுவாசிப்பில் மறுபடியும் காணாதன காண வகை செய்ய வேண்டும். நாவல் களத்தை நேரில் பார்க்கத் தூண்ட வேண்டும். நாவல் மனிதர்களைச் சந்திக்க ஆசை கிளர வேண்டும். நமக்குள் இருக்கிற மனிதர்களில் எவரேனும் நாவலில் உள்ளார்களா ? எனத் தேட ஆவலாக வேண்டும்

இதை முழுமையாக “தேரி” நாவல் செய்திருக்கிறது.

நாவல் என்கிற வடிவக் கட்டமைப்பை காலம் தோறும் மாற்றிக் கொண்டிருப்பதில் முதன்மைப் பங்காற்றுவது அதன் கதையம்சமே!  படைப்பாளியின் மனம் தேர்வு செய்கிற கருத்தே உருக் கொள்கிற போதுதான், எந்த வடிவத்தில் எவ்வகை கதாபாத்திரங்களோடு தகவமைத்துக் கொள்ள வேண்டுமென முடிவு செய்கிறது. “தேரி” வட்டார நாவல்தான் என்பதற்கான சாட்சியமாகவே கதாபாத்திரங்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

ஆசைகளைச் சுமந்த மனப்பிரதிகளே கதைகளாகின்றன. யாரோ ஒருவருக்குச் சொந்தமான ஒன்று இன்னொருவருக்கு அறம் கடந்து அவசியமாகிறது. இந்த அவசியங்களே  வாழ்வை ரணங்களோடும் ஏமாற்றங்களோடும் வாழ நிர்பந்திக்கிறது.

பொறாமை, தீரா ஆசை, அடிமையுச்ச வெறி போன்றவை மனித வாழ்வின் அன்பு வேரை கேலிக்குள்ளாக்குகிறது.

இதனை அதனதன் புரிதல்களோடு எடுத்துச் சொல்கிற இலக்கியமாகவே “தேரி” நாவல் அமைந்திருக்கிறது.

முதலில் இந்த நாவல் தனது ஆதார மையமாகவும், வாசக நம்பகத்தன்மைக்காகவும் சேர்த்திருக்கிற வரைபடங்கள், பின் உள்  அட்டையில் பொறிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பார்ப்போம்.  கதைக்குள் நேரிடையாக நுழைகிற வாசகர்களுக்கு இவை இரண்டாம்பட்சம்தான். வேறு வகையான வாசகர்களுக்கு முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரையென ஒரு வகை வாசிப்புத் தூண்டல் ஊக்கம் தேவைப்படுகிறது. ” தேரி” நாவலில் முன்னுரை மட்டுமே உள்ளது. மற்ற எல்லா உரைகளுமாக இருப்பவை மேற்கண்ட கூடுதல் ஆதார பொறிப்புகள்தான்.  கல்வெட்டு ஆதாரங்கள் போல அமைந்து சிறப்புச் சேர்க்கின்றன. மேலட்டையும், வடிவமைப்பும் வாசகத் தூண்டலுக்கு உற்ற துணை.

உள்ளே அமைந்துள்ள அத்தியாயங்கள் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ள தலைப்புகள்  முப்பத்தி நான்கு.

செல்லக்குட்டியில் துவங்கி சூழ்ச்சியில் முடிகிறது.  இதுவொரு நாவல் கட்டமைப்பின் பெருஞ்சிறப்பே.  இறுதி அத்தியாயத்தின் தலைப்பு அமைக்கப்பட்டுள்ள விதம் காவியக் கட்டமைப்பிற்கு நிகரானதாகும்.

நாவலும் காப்பியமும்

*அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

*ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.

* உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

இது இளங்கோவடிகளின் கூற்று.

தேரி மண்ணைச்  சுரண்டுகிற போலி அதிகாரக் கும்பலின் ஒரு துளியாகத் தொம்மை அண்ணாச்சி. தண்ணீர் உட்பட கனிம வளங்களைச் சுரண்டும் அவரது அரசியல் பிழைப்பே அறம் தவறுதலாக மாறும் போது வாழை மரங்களின் அழிவும் அதனை ஒட்டி ஏற்படுகிற மன உளைச்சலையும் உணர்த்தும் நாவல், அறத்தின் வழி நின்று எச்சரிக்கும் பணியைச் சிறப்பாகவே செய்கிறது.

*காதல், திருமணம் என்று வாழ்வு தயாராகும் போது முந்தைய கால குழப்பங்களே உறவுச் சிக்கல்களை உருவாக்குதல், மனப் பேதலிப்பென தொடர்வதும் சான்றாகிறது.

யாவற்றையும் இழந்த பின்னாலும் அடைவதற்கு இன்னும் ஏதோ ஒன்று காத்திருக்கிறது என்பதைச் சொல்லும்  காவிய நாயகி “வெட்சி” நாவலின் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் கதாபாத்திரம். பிரதியின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்துகிற பாங்கு சிறப்பு.

வாழ்வு முழுக்க துன்பங்கள் வந்த போதும் அதனை முறியடிப்பதும், மாற்ற இயலாத ஒன்றோடு போராடுவது துன்பங்களையே தருமென்பதும், ” வெட்சி” வழியாக  அறிகிறோம். பாலைவனத்திலும் சிறு ஊற்றாக நம் வாழ்வில் மனிதம் தென்படும் என்பதற்கான சிறு அடையாளமே இக் கதாபாத்திரம் காவிய நிலையை அடைகிறது.தன்னை உருமாற்றிக் கொள்கிறது.

கதாபாத்திரங்கள்

செல்லக்குட்டி, அசரியா, பாதாள முனி மூவரின் அறிமுகத்தோடு துவங்கும் நாவல் அடுத்தடுத்த கதாப்பாத்திரங்களோடு இணையும் போது பரபரப்பான கதைச் சூழல் துவங்கிவிடுகிறது.

எல்லாச் செயல்பாடுகளுக்கும் வேறொருவரின் தூண்டலும், சிக்கல்களுக்கு வழிகாட்டுகிறவர்களாக அவர்களே துணை போவதும் என்கிற குணங்களுக்கு முதல் பலியாக செவ்வந்தியிடம் சந்தோச ராஜ் என்கிற புதிய அடையாளக் குறியீட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடன் இருப்பவர்களின் மனப்பக்குவமும்,  அவர்களின் வழிகாட்டலுமே  ஒருவரின் வாழ்வு முழுக்கப் பயணிக்கிறது.

” தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என்தற்கான அடையாளமே முதல் அத்தியாய கதாப்பாத்திரங்கள்.

செவ்வந்தி

செவ்வந்தி என்கிற தேரி கதாப்பாத்திரம் பேச்சி என்கிற தோழமையோடு பின்னி பிணைந்த வாழ்வியல் காவியம்.

மன ஆசைகளின் தூண்டுதல்களே விபரீதங்களின்  துவக்கம்.

செவ்வந்தியின் சடங்கில் ஒவ்வொருவராலும் பாராட்டப்படும் ஒருவன், முகம் பதியும் முன் மனதால் பதிய காரணமாகிறது. அத்தூண்டலே செவ்வந்தியின் மனக்குறுகுறுப்பிற்கு  வித்திடுகிறது.

“இவ்வளவு சொல்லுத நான் இன்னும் பாக்கல ” என்று வருத்தமாய்க் கூற காரணமாகிறது.

சந்தோசமாக சந்திக்கிற சந்தோசத்துடனான அன்பு இறுதியில் என்னவாகிறது என்பதை பதைபதைப்புடன் வாசிக்க வைக்கிறது.

செவ்வந்தி,  பேச்சி என்கிற காவிய நட்பை  வாழ்வின் பலமாக கொண்டவள். சந்தோச ராஜ் வாழ்விற்குள் ஊடுருவ  தோழியே காரணமாகிறாள். ஒரு வேளை பேச்சி அகத் தூண்டலை உருவாக்காமல் இருந்தால் இவளின் வாழ்வு திசை மாறி நல்ல விதமாக மாறியிருக்கலாம்.

அந்த வயதிற்கே உரிய பருவத் தூண்டல்களே வாழ்நாளெல்லாம் துன்பத்தின் பாதையில் செல்லக்  காரணமாகிவிடுகிறது.

சிற்றூர் மக்களுக்கான வழிகாட்டுதல்கள் என்பது முழுமையாக இல்லாமல் அவரவர் போக்கில் வாழ்வை நகர்த்துவதால் துயர நிழலையே அண்டி வாழ வேண்டியுள்ளது. நாவல் முழுக்க வருகிற கதாப்பாத்திரங்கள் இவற்றையே உணர்த்துகின்றன.

தங்கராணியின் அம்மா

தங்கராணியின் அம்மா காதலுக்கு எதிரியல்ல. ஆனால் தன் மகளின் காதலுக்கு எதிரியாகிறாள். காரணம் என்னவென்று வாசகர்களை வாசிக்கத் தூண்டி கண்டறியச் செய்யும் உத்தி மனித மனங்களின் கலவை நிலையை வெளிப்படுத்துகிறது.

சந்தோசராஜ்

சாதிய கட்டமைப்பிற்குள் வாழ்க்கையை பறிகொடுக்கிற பாத்திரம். வாழ்வை இழக்கும் துயரன். வாழ்வை அடையாளம் காட்டும் பாத்திரம். சாதிய வன்முறைகள் மனதளவில் ஏற்படுத்துகிற காயங்களையும், மனிதர்களின் கீழ்த்தரமான ஆதிக்க மனபான்மை ஒரு சாராரின் வாழும் காலத்தை எவ்வாறெல்லாம் நசுக்கியது என்பதை புரியும் போதுதான் ஒரு இனத்திற்கான மாற்று ஆலோசர்களும் கல்வியும் ஏன் தேவையென்பது புரியும். அவ்வாறு வாசிப்பவர்களைப் பதைக்க வைத்து மாற்றத்தின் வழி தேடும் சிந்தனையைத் தூண்டும் கதை நாயகனே சந்தோசராஜ்.

 

தொம்மை

அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலத்தைச் சுரண்டுகிற பெரு முதலாளித்துவ அடையாளம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை வலியுறுத்துகிறது.

நகரம் மெதுவாக  நிலக் கொள்ளையர்களின் சுயநலத் தேடலுக்குப் பறி போகப் போகிற  நிலையை கூறுகிற எச்சரிக்கை கதாப்பாத்திரம்.

இருநிலையில் மனக்கொந்தளிப்பிற்கு உள்ளாகிறது. தனக்கான துன்பங்களைக் கண்டு அச்சப்படுவதும், முறையற்ற செயலை தைரியமாகச் செய்வதுமான இரட்டை நிலை.

வெட்சியின் அழகியல் பாதை

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவன் உலா வருகிறான். அவன் தனக்கு எல்லோரும் நல்லதையே செய்ய வேண்டுமென நினைக்கிறான். பிறருக்கு செய்ய வேண்டிய சூழல் வரும் போது செய்ய முடிவதில்லை. வாழ்வு முறையில் வெட்சி அவரவர் மனதில் இருக்கிற நம்பிக்கையூட்டும் உள் முக கதாபாத்திரம். வெட்சியின் மென் ரசனை, வாழ்வை அணுகும் முறை, குடும்பத்தை அணுசரிக்கும் லாவகம் இவை யாவும்  எதிர்பார்ப்பின் அடையாளங்கள். எளிதில் நம்மை ஈர்ப்பவராக மாறிவிடுகிறது.

தங்கவேலுவின் சாதியம்

சாதியம் மெதுவாக மனிதர்க்குள் செலுத்தப்படும் நஞ்சு என்பதைத் தங்கவேல் வழி உணரலாம். அறியாமையின் உச்சமே எதை உள்ளே தக்க வைப்பது, எதை வெளியேற்ற வேண்டும் என்பதையும் வாசிப்பின் வழியே அறிய முடியும்.

நாவலின் இன்னொரு பகுதியில் வகுப்பறையில் மாணவர்கள் வெளிப்படுத்தும் சாதிய வன்மமும் இந்த வகையைச் சார்ந்ததே!

கதாப்பாத்திரங்களின் வழி அறியத்தருவது

தேரி அடையாளப்படுத்தும் கதாப்பாத்திரங்கள் எதை உணர்த்துகின்றன. ?

“எல்லாச் செயல்களுக்கும் எதிர்விளைவு என்ற ஒன்று உண்டு.

* உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்துதான் தீர வேண்டும்

* முற்பகல் செய்யின் பிற்பகல் பலன் உறுதி

* சிலப்பதிகாரத்தின் மூன்று உண்மைகளையும் பேசுகிறது.

 

* காலங்காலமாக நிலமே யாவற்றையும் தீர்மானிக்கிறது.

*காவியங்கள் அடையாளப்படுத்திய பெண்ணாசை, பொன்னாசை போன்றவை இன்னும் இருக்கிற அவலம். இனியும் தொடரும் என்கிற எச்சரிக்கை

“காதற்ற ஊசியும்  கடை வழி வாராது” என்று உணர்தல்

இப்படிக் கூறிக் கொண்டே போகலாம்.

நாவலும் பிராய்டிசமும்

பாலியல் உணர்வுத் தூண்டல் எல்லா நிலையிலும் பொதுவானதாகவே நீள்கிறது. உறவுகள் சட்டென்று பெயர்கள் மாறும் போது நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

அம்மா என்கிற புனிதக் கட்டுடைப்பு

அம்மா என்கிற கதாப்பாத்திரமே ஆணவத் துன்புறுத்தலுக்கு துணை போவதை வாசிக்கும் போது சாதிய பித்தை உணர்கிறோம். காலம் காலமாக படைக்கப்படுகிற பிம்பத்தை உடைத்து, உண்மையான மன நிலையை எடுத்துரைப்பதன் வாயிலாக கதையின் உண்மைத் தன்மையை நிரூபிக்கிற நாவலாகிறது தேரி.

நாவலின் கட்டமைப்பும் உத்திகளும்….

சிற்றூர் மக்களின் வாழ்க்கையை எந்தப் பாசாங்குமற்று  கூறும் இந்த நாவல் இரண்டு முனைகளில் பயணித்து பிறகு ஒன்றிணைகிற போது புதுமையின் அடையாளத்தைக் காண்கிறோம். வாசிக்கிற வாசகரும் சிந்தனைப் பாதையில் பயணிக்க வேண்டிய சூழலை உருவாக்குவதன் வழியே நாவல் கட்டமைப்பில்  பின்னோடிகளாக வரக் கூடிய அப்பகுதி இளம் படைப்பாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாகிறது. மேலோட்டமாக நேர்கோட்டு வாசகர்களுக்குச் சற்று தடுமாறவே செய்யும்

திரையரங்குகளின் வழியாகவும், அந்தந்த காலகட்ட பாடல்கள், திரையாளர்களின் வழியாக கதை நகர்த்தப்படுவதன் வழியே கதை நிகழும் காலகட்டத்தைப் புரிய வைக்கப்படுகிறது. இது நாவலின் நடை உத்திக்கு வலு சேர்க்கிறது.

திணைக்கோட்பாடு

நாவலின் நிலத்தைப் பற்றிய அறிதலோடு எழுதப்பட்டுள்ள நாவல் பக்குவமற்ற காதல், சாதிய கட்டமைப்பின் தீய விளைவுகள, மெதுவாகச் சுற்றி வளைத்துக் கொள்ளப் போகிற மேல் வர்க்க அதிகார நிலச் சுரண்டல், பழி வாங்குதல், குறைந்த பட்ச கூலிக்கே போராட்டம், குழந்தைகள் மனதிலேயே சாதிய நஞ்சை விதைக்கிற கயமை என வாழ்வியலின் பெருங்கூறுகள் அத்தனையையும் கூறிவிடுகிறது நாவல்.

நாவலின் இரு  கதாபாத்திரங்களான பேச்சியும் செவ்வந்தியும் பேசிக் கொள்ளும் போது,பேச்சியின் முதிராத காதல், செவ்வந்தியின் விளைவறியாத காதல் இரண்டும் நாவலுக்கான மைய இழையில் முதன்மையாகிறது.

சிற்றூரின் நிலையை விளக்கிவிடுகிற கதை ஆசிரியர் இதன் வழியே சமுதாயம் நகர வேண்டிய திசையையும் சுட்டிக்காட்டுகிறார். அது வெளிப்படையானது அல்ல.

வந்தேறிகளாக உள்ளூர் உலகம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பூங்குன்றனாரை அறியாதவர்கள் அல்லவா? அதனால் இன்னொரு பகுதியிலிருந்து வந்தவர்களைக் கூட வந்தேறிகள் என்று துன்புறுத்திய காலம் இருந்தது என்பதற்கான சாட்சியம் நாவல்.

தூரத்து விளக்கு

நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களாக துன்பத்தை அனுபவிக்கிற போது மகிழ்ச்சியை விதைக்கிற கதாபாத்திரமாகவும், மென்மையையும் கொண்டதாகவும் வெட்சி கதாபாத்திரம்.

வாழ்க்கையில் துன்பப்படும் போது குடும்பத்திலிருந்து நம்பிக்கை பிறக்க வேண்டும். அப்படியான நம்பிக்கையைத் தருகிற ‘வெட்சி” நாவலின் நம்பிக்கை  நாயகியாகிறாள். நிலத்தின் மீதான நம்பிக்கை இழந்த செல்லக்குட்டிக்கு சிறந்த நம்பிக்கையூட்டுனராக வெட்சி கதாபாத்திரம்

எப்படிப்பட்ட இருட்டாயினும் சிறு வெளிச்சம் எங்கிருந்தாவது வரும் என்ற நம்பிக்கையை உணர்கிறோம்.

காவிய நட்பின் முகவரி

அசரியா, செல்லக்குட்டி, பாதாள முனி, செவ்வந்தி, பேச்சி  போன்ற கதை மாந்தர்கள் நட்பின் அடையாளங்களாக வலம் வருகிறார்கள். எதையும் எதிர்பார்க்காத சிற்றூர் மனிதர்களாக காவிய நிலையைத் தொடுகிறார்கள். தீமை, நன்மை என்று உணராதவர்களாக நட்பிற்காகச் செயலாற்றுகிறவர்களாகப் பெருமையாகிறார்கள். இதுவே நாவலின் வெற்றிக்கு இயல்பான காரணமாகிறது

 

 

மனதில் நிலைக்கும் வசனங்கள்

கதாப்பாத்திரங்களின் உரையாடல்கள் நாவல் முழுக்க உயிர்ப்போடு அமைந்துள்ளது. மெல்லிய நகைச்சுவை, அவலச் சுவை, சினச்சுவை, நம்பிக்கை வெளிச்சமென தொல்காப்பியக் கூறுகளால் மிளிர்கிறது.

சான்றாக ஒன்று.

பக்கம் 288 இல்

” காதலிக்கிறது அவ்ளோ பெரிய குத்தமில்ல. பழியத் தூக்கி காதல் மேல போடாதிய. …

…… காதலுக்கு  அழிக்கத் தெரியாது.கொடுக்கத்தான் தெரியும்..”

பக்கம் 291 இல்

” எல்லாத்தையும் புடுங்கிட்டார் சாமின்னு சொல்லுதிய அன்பா வளக்க ஆச்சியக் கொடுத்தாரு. உங்கள் தலைல வச்சித் தாங்க நான் இருக்கேன்…”

பெயர்களால் மலரும் நாவல்

நாவலில் சித்திரப்பூ, செவ்வந்தி,இறும்பூவை,வெட்சி என்கிற பெயர்களின் அமைப்பு தலைமுறைக்குத் தலை முறை எவ்வாறு மாறி வருகிறது என்பதையும் உணர்த்துகிறது. இப் பெயர்களை உச்சரிக்கும் போது மனம் குளிர்கிறது.

நாவலுக்குள் பாடல்

சிற்றூர் என்றாலே அவலச் சுவையையும், இன்பச் சுவையையும் இணைத்து வெளிப்படுத்த பாடல்களே துணை புரிந்துள்ளன. இந்தத் தேரியில் பக்கம் 273 இல் அமைந்துள்ள பாடல்  வாய்விட்டுப் பாடத் தூண்டி இது நாவல் மட்டுமல்ல…வாழ்வின் ஒரு கூறு என்று நிரூபிக்கிறது. மண் வாசனை என்றால் இதுதான் என மகிழ்ச்சிக் கொடையாக்குகிறது

பக்கம் 200 இல் உள்ள பாடல் எண் சுவையும் நிரம்பிய கோப்பையாகிறது.

முன்னோடி

ஒரு படைப்பின் மையப் புள்ளியை உணர்கிற வாசகர் தானும் ஒரு படைப்பாளியாக உருவாக தூண்டலாக ஒரு சில படைப்புகளே  அமையும். தேரி நாவல் வட்டார வழக்கில்  எளிய மனிதர்களையே பேசுகிறது. இதன் வழியே எளிய மனிதர்களால் சூழப்பட்ட உலகைப் புரிந்து கொள்ள முடியும் .

 

புதியதாக எழுத வருகிறவர்களுக்கு புதிய களத்தை உருவாக்கக் கூடியதாக தூண்டலைத் தருவதாகவும் அமைந்து நாவல் தன்னளவில் நியாயங்களைத் தக்க வைக்கிறது.

நாவலை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டாடலாம்.

மனிதர்களின் உளவியல் அந்தரங்கமே படைப்பின் பலம்.

வாழ்ந்த மனிதர்களின் நேர்மையே வாழும் மனிதர்களுக்கான கைவிளக்கு.

“தேரி” நாவலில் முக்காலமும் வெளிச்சமாகிறது.

 

.அம்சப்ரியா

பில்சின்னாம்பாளையம்

 

 

Scroll to Top