தேரி விமர்சனம்

தேரி விமர்சனம்

மலர்விழி

 

நாம் செல்ல முடியாத இடத்திற்கு ஒரு புத்தகம் நம்மைக் கூட்டிச் செல்லும் என்பது எவ்வளவு உண்மை. பெங்களூரிலிருந்து என்னைத் தூத்துக்குடியின் சுற்று வட்டாரங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த நாவலை நான் வாங்கியதற்கு இதன் தலைப்பும் ஒரு முக்கியக் காரணம். ஒரு இணைய வழி நிகழ்வுக்காக “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் தேரியைப் பற்றி சில குறிப்புகள் இருந்தன. பாலைவனம் போலத்‌ தோற்றமளித்தாலும் நிறையத் தாதுப் பொருட்கள் நிறைந்த வளம் மிக்க சிகப்பு மண்  நிறைந்த இடம் என்பதை அறிந்து வியந்தேன்.

முதலில் இது புதைகுழியாக இருக்குமோ என்று எண்ணினேன் இணையத்தில் தேடிய போது அங்கு சில மரங்கள் இருப்பதும் அதைச் சுற்றியுள்ள ஊரில் மனிதர்கள் வாழ்வதையும் அறிந்து கொண்டேன். இந்த நாவலின் தலைப்பைப் பார்த்தவுடன் என்னுள்ளிருந்த ஆர்வம் எனக்குத் தேவையான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கலாம் என்று கூறியது.

புத்தகத்தின் அட்டைப்படம் தேரியின் நிலப்பரப்பைப் போலச் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது அட்டையின் பின்புறத்தில் தேரியின் நிலப்பரப்புக்கானத் தொல்லியல் துறையின் வரைபடம் மற்றும் அங்கு கிடைக்கப்பெற்ற குறுணிக் கற்காலக் கருவிகள் எனத் தமிழரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டிக் காட்டுகிறது.

 

 

“சொல்லப்படாத கதையை உள்ளுக்குள் சுமப்பதைப் போல மிகுந்த வேதனையான விஷயம் எதுவுமில்லை” என்று எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ சொன்னது போல ராஜேஷ் அவர்களுக்குத் தேரியைப் பற்றி ஒரு நாவல் எழுத இந்தக் கதை தேவையாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

 

இந்தக் கதை காலத்தில் பின்னோக்கி பயணிப்பதால்

அலைபேசிகளோ சமூக வலைதளங்களோ கட்டிப் போடாத சக மனித நேசத்தை கதாபாத்திரங்களின் மூலமாக வெளிக் கொணர்கிறது. செல்லக்குட்டி, அசிரியா, பாதாள முனி என்ற மூன்று நண்பர்களின் நட்பு பொறாமைப் பட‌ வைக்கிறது. இன்பத்திலும் துன்பத்திலும் தோளோடு தோள் நிற்கும் நண்பர்களாக அவர்கள் கதை முழுவதும் வலம் வருகிறார்கள். ஒருவன் கோபப்படும்போது மற்ற இருவரும் சமாதானப்படுத்துவதும், ஒருவரை காணாமல் தேடித் தவிப்பதும், மூவரும் சேர்ந்து கிரிக்கெட் பார்க்கும் போது அவர்களுடைய வர்ணனைகள் என்று நண்பர்களின் உணர்வை அழகாக வர்ணித்திருக்கிறார் ஆசிரியர்.

 

செல்லக்குட்டிக்கும் தங்கராணிக்கும் இடையேயான காதல் பல கிராமத்துத் திரைப்படங்களில் வந்தது போல சாதியால் அவதிக்குள்ளாக்குகிறது. ஆனால் இந்தக் கதாபாத்திரங்களின் அடுத்த நிகழ்வுகள் முன்பே கணிக்கும்படி அமைந்திருக்கின்றன.  தங்கராணி தனக்காகத் தன் தாயையும் தங்கவேலுவையும் எதிர்த்து நிற்கிறாள் என்பதை அறிந்த பின்னும் ஆச்சியின் சொல்படி செல்லக்குட்டி வெட்சியைத் திருமணம் செய்வது அந்த கதாபாத்திரத்தின் மீதான நமது அபிப்பிராயத்தை மாற்றுகிறது.

 

ஆனால் ஒரு சமயத்தில் ”சே என்ன பாழாப் போன வெக்கங்கெட்ட மனசு தங்கராணி நினைச்சு வருந்தும் போதே வெட்சியை அணைக்க ஆசை வருதே” என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் செல்லக்குட்டியின் எண்ணம் பல ஆண்களுக்கு  வரும் உணர்வு என நினைக்கிறேன்.

 

சந்தோஷ்ராஜ் தேரி மண்ணைப் போல யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க நினைக்கிறான். ஆனால் அப்படி ஒரு வாழ்வு அவனுக்கு விதிக்கப்படவில்லை என்ற வரிகள் ஆசிரியர் எந்த அளவு மண்ணோடு ஒன்றிப் போயிருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. நிறைய இடங்களில் சந்தோஷத்தின் கருத்து பரிமாற்றம் எனக்கு மிகவும் பிடித்தது ஆத்மார்த்தமான நேசம் என்பதை பைத்தியக்காரத்தனம் என்பதில் என்ன தவறு இருக்கிறது எது சரி எது தவறு என்று முடிவு செய்பவர் யார் என்ற கேள்வி அவனுக்கு அடிக்கடி தோன்றும் என்கிற மனநிலை நம்மில் பலரோடு ஒத்துப் போகும் அல்லவா? ஆனால் ஊரை விட்டு விரட்டப்பட்டு உடல் மெலிந்து இறந்து போன சந்தோஷத்திற்குப் பெயரளவில் மட்டுமே சந்தோஷம் இருந்தது எனக்கு மிகவும் வருத்தம் தான். கடைசிவரை சந்தோஷத்தின் கண்களில் தூரப் பறக்கும் பறவையாகவே மாறிவிட்டாள் செவ்வந்தி.

 

இரண்டு காதல்களோடு பயணிக்கும் கதையின் நடுவே ஒரு மர்ம முடிச்சாய் பொட்டம்மன் வருகிறார். புத்திசாலிப் பெண்ணான பேச்சி பொட்டம்மன் யார் என்று கண்டுபிடித்ததை நினைத்து மகிழ்வதா இல்லை அதுவே அவளுடைய அழிவுக்கு காரணமாவதை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. செவ்வந்தியால் கடவுளாக வணங்கப்படும் பேச்சியின் வாழ்க்கை சட்டென ஒரு முடிவுக்கு வந்ததாகத் தோன்றுகிறது.

 

தன் காதலுக்காக எதைப் பற்றியும் யோசிக்காத செவ்வந்தி. எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காது பிள்ளையைப் பெற்றுக் கொண்ட அதே செவ்வந்தி, பேச்சியின் இறப்புக்குக் காரணமான பொட்டம்மனைத் தன் கைகளால் கொல்லும் துணிவுடையவளுக்கு ஏன் சந்தோஷத்தைத் திருமணம் செய்வதற்கு அந்தத் துணிவு வரவில்லை, தன் பெற்றவர்களை எதிர்த்து காதலனுக்காக அவன் பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை போராடும் செவ்வந்தி தன் மகளின் காதலை அறிந்து கொடூரமாக மாறுவதை அவளுடைய காரணமென அவள் ஒன்றை நம்பிய‌ போதும் கதையின் போக்குக்கு  சரியாகப் பொருந்தவில்லை. தன் மகளை அடித்து மடத்தில் சேர்த்த போது இல்லாத தாய்மை உணர்வு தன் தாய் இறந்த பின் மகள் வேண்டும் என்ற‌ உணர்வாக எப்படித் திரும்ப வந்தது எனக் கேள்வி எழுகிறது. நொடிக்கு நொடி மாறும் கடிகார முல்லை போல செவ்வந்தியின் குணம் கதை முழுக்க மாறிக்கொண்டே செல்கிறது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாகவே வலம் வருகிறாள்.

 

நாவலின் முற்பகுதி தந்த சுவாரசியத்தைப் பிற்பகுதியில் நடக்கும் குழப்பமான நிகழ்வுகள் திசை திருப்புகின்றன. அப்பாவிச் சித்திரப்பூ பலியானதும் ஆரம்பம் முதல் அடங்காதவனாக இருந்த தங்கவேலு தன் தவறை எண்ணி மன்னிப்பு கேட்பதும், செவ்வந்தியின் அண்ணன் தன் மகனைப் பார்ப்பதற்காகக் கீழ் ஜாதி வீட்டுக்குள் தயங்காது உள்ளே வருவதும் என தனக்குத் தேவையென்றால் மனித மனநிலைகள் வானிலை போல மாற்றமடைவன என்பதைக் காட்டுகிறது‌. தூய மனதுடன் இருக்கும் ஆச்சியும், தங்கத்தை தன் வீட்டில் வைத்து பார்க்கும் வெட்சியும் எதையும் எதிர்பார்க்காத அணில் குட்டியைப் போல மனதில் நினைக்கிறார்கள்.

 

கதையின் நடுவே பாடலை வைத்தது அந்த நிலத்தின் மொழியோடு இன்னும் கொஞ்சம் நம்மை நெருங்க உறவாடச் செய்கிறது.

 

குழந்தைகள் மாற்றப்படும் பழைய கதைக் கரு தான் என்றாலும் நிலப்பரப்பின் பின்னணியில் தூத்துக்குடிக்கான வட்டார வழக்கில் தன்னால் இயன்றவரை இந்த கதையின் மூலம் சமூகத்தின் அவலநிலையைச் சொல்ல முற்பட்டிருக்கிறார் ஆசிரியர். ஆனால் இந்த நாவலில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் பார்ப்பதற்குப் பாலைவனம் போலக் காட்சி அளித்த தேரி எப்படி அந்த ஊர்க்காரர்களுக்கு ஒரு போக்கிடமாக இருந்தது என்பதையும் பின்னர் இந்த கார்ப்பரேட் முதலைகள் எப்படி அந்த பொன்னான மண்ணையும் சுவை மிகுந்த தண்ணீரையும் இல்லாமல் செய்தனர் என்ற கசப்பான உண்மையைப் பொட்டில் அடித்தது போலச் சொல்லுகிறது. இந்த மையக்கருத்துக்காகக் கதாசிரியரை நாம் பாராட்டியாக வேண்டும்.

இந்த நாவலின் முற்பகுதியில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி இன்னும் சில விஷயங்களை விரிவாகச் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு நீண்ட கதையை இத்தனை பக்கங்களுக்குள் முடித்திட வேண்டும் என்ற கட்டாயத்துடன் முடிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உதாரணமாக பொட்டம்மனைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் அவன் ஏன் ஆணாக இருந்து பெண் போல் வேடம் தரித்தான் என்ற கதை இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கும்.

 

காலங்கள் கடந்த போதும், படிப்பறிவில்லாத எளிய மக்களை நிலத்தின் பெயரால் ஏமாற்றுவது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது தேரி எனும் இந்த புத்தகம் அதே கருத்தை மீண்டும்‌ ஒரு முறை உரக்கச் சொல்கிறது. நிலப்பரப்பைப் பற்றிய தகவல்கள், வட்டார மொழி, மனித மனநிலை போன்றவற்றை நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.

கதாபாத்திரங்களின் மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மொழி லாவகமாக வசப்பட்டிருக்கும் கதையும் இன்னும் கொஞ்சம் தெளிவுடன் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

 

இந்த மண் சுரண்டப்படுகிறது, தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, அப்பாவி மக்களின் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுகின்றன போன்ற மிக நல்ல சமூகத்திற்கான கருத்துக்களை இந்தக் கதை சொல்கிறது. இவை சமகால வாசகனுக்குக் கட்டாயம் தெரியப்படுத்தப்பட வேண்டியவை. அதற்காக ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! மொத்தத்தில்.    தேரி – சாதி மற்றும் பணத்தாசையால் மனிதர்களை மனிதர்களே ஏமாற்றும் சமூகத்தின் கசப்பான உண்மை நிலையால் காதல் அடையும் அவல நிலையைச் சொல்லுமொரு கதை. மண் வாசனையோடு நிறைய எழுதுங்கள் ராஜேஷ்!! வாழ்த்துகள்!!

 

 

Scroll to Top